‘கந்தன் கருணை’ திரைப்படத்தில். சிவகுமார் முருகனாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒருமுறை ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார்.
அப்பத்திரிகை நிரூபர் நீங்கள் இப்பொழுது எத்தனை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு சிவகுமார், “ஜெமினி வாசன் அவர்கள் எடுக்கும் படத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஒரு படத்திலும் நடிக்கிறேன்” என்றார்.
இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் ஒரு படத்தில் நடிக்கிறேன். அது எனக்கு ஒரு திருப்பு முனைப்படமாக இருக்கும் என்றும் சொல்லியிருந்தார்.
பேட்டியின் இறுதியில் நடிகர் சிவகுமார் சொன்னதாக நிருபர் ஒரு வார்த்தையை சேர்த்து விட்டார். பழையன கழிதலும் புதியன புகுதலும் போல் பல புதிய படங்களில் சிவகுமார் நடிக்கிறாரென்று எழுதிவிட்டார்.
அதைப் படித்த ‘கந்தன் கருணை’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ்.சுக்கு கோபம் வந்துவிட்டது.
“என்னங்க இந்தப் புதுப்பையன் இப்படி பேட்டி கொடுத்திருக்கான் நம்ம இந்தப் பையனை போட்டு பிரம்மாண்டமான ஒரு படமெடுத்துக்கிட்டிருக்கோம் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லலே” என்றாராம்.
அதே பேட்டி இயக்குனர் ஏ.பி.என்னுக்கு வேறு ஒரு மாதிரி கோபத்தை உண்டாக்கியிருந்தது.
பழையன கழிதல்னு நம்மள சொல்லியிருக்கான் என்று இப்படி தயாரிப்பாளரும், இயக்குனரும் சிவகுமார் மேல் கோபத்திலிருக்கிறார்கள் என்பதை ஏ.எல்.ஏஸ்.சின் நிர்வாக மேலாளர், வீரய்யா சிவகுமாரிடம் எடுத்துச்சொல்லி இயக்குனரை எப்படியாவது சமாதானப் படுத்துங்கள் என்றாராம்..
சிவகுமார் ஏ.பி.என். அவர்களை சந்தித்தார். பொதுவாக திரையுலகினர் மத்தியில் ஏ.பி.என் கோபமே படமாட்டாரென்று பெயரெடுத்தவர். ஆனால் அன்று ஏ.பி.என். கோபத்தின் எல்லையிலிருந்தார். சிவகுமாரைக் கண்டதும் கோபத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டார்.
“நாங்கள் எல்லாம் பட்டினியும் பசியுமா கிடந்து நாலு வயதிலிருந்து முப்பது வயது வரைக்கும் நாடக மேடையில் போராடி, போராடி திரைத்துறைக்கு வந்தோம்.
பத்து பதினைந்து வருடமா திரைத்துறையில் போராடி ஐம்பது வயதில் முன்னேறி இந்த இடத்தைப் பிடிச்சிருக்கோம் எங்களை எல்லாம் நீங்க பழயன கழிதல்னு சொல்றீங்க அப்படித்தானே” என்றார்.
அத்துடன், “நீங்களெல்லாம் ஒரு பிரஷ்ஷை எடுத்துக்கிட்டு வருவீங்க உங்களுக்கு நாங்க இடம்கொடுத்துட்டுப் போயிடணும் இல்லையா” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
அதன் பிறகு சிவகுமார், “சத்தியமா நான் அப்படி சொல்லலேங்கண்ணா. அந்த நிருபர் தானாகவே பழையன கழிதல், புதியன புகுதல்னு ஒரு வார்த்தையைத் சேர்த்துக் கிட்டாருன்னு” தன்னிலை விளக்கமளித்தார்.
அந்த தன்னிலை விளக்கமும் அதன் வார்த்தைகளும் உதட்டிலிருந்து வரவில்லை உள்ளத்தின் அடியிலிருந்து வருகிறது என்பதை ஏ.பி.என். புரிந்துகொண்டார். அதன் பிறகுதான் ஒருவாறு சமாதானமடைந்தார்.
அதன்பின் ஏ.பி.என். சொன்ன அறிவுரை தனது வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத பாடமென்றார்.
அப்போது ஏ.பி.என். “தம்பி நீ கலையுலகம் என்னும் பழனி மலையடிவாரத்தில் தான் இப்போது நிற்கிறாய்.
அதன் ஏராளமான படிகளில் ஏறி மலையுச்சியை அடைந்து, அதன்பின் வரிசையில் நின்று இறுதியில் தான் முருகன் என்னும் கடவுளான புகழை சந்திக்க முடியும்” என்றார்.
அத்துடன், “நீ பேசலைன்னாலும் உன்பேரில் வரும் பேட்டியின் கருத்துக்கு நீ தான் பொறுப்பு எனவே இனிமேல் பேசும்போது பொறுப்பாக எச்சரிக்கையாக பேசணுமென்றார்” அதுவே அந்தக் கலைமேதையின் பொன்னான அறிவுரை.
– நன்றி: கார்த்திகேயன் எழுதிய அருட்செல்வர் ஏ.பி.என் என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.