நாகேஷ் என்ற நடிகனைக் கண்டுபிடித்த படம்!

ஏவி.எம் தயாரிப்பில் நாகேஷ் நடித்த முதல் படம் ‘நானும் ஒரு பெண்’. நாகேஷை படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு ஏவி.எம்.சரவணன் சார் சம்பளம் பேசினார்.

‘‘ஐயாயிரம் வைத்துக் கொள்ளலாமே’’ என்று நாகேஷிடம் கேட்க, அதற்கு நாகேஷ் ‘‘ஏழாயிரமாக இருக்கட்டுமே’’ என்றார். ‘‘உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். ஆறாயிரம் ரூபாய்’’ என்று பேசி முடித்தார்.

அப்போது நாகேஷ், ‘‘சரவணன் சார், இதை நான் திமிரோடு சொல்லலே. என் மீதுள்ள நம்பிக்கையால சொல்றேன். நான் கேட்குற சம்பளத்தை பேரம் பேசாம நீங்க கொடுக்கும் காலம் ஒருநாள் வரும்’’ என்றார்.

அதற்கு சரவணன் சார் ‘‘அந்த நாட்களில் நிச்சயம் நானும் உங்களுக்கு நிச்சயம் கொடுப்பேன்” என்றார். அதைப் போல நாகேஷ் கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டு அவர் கால்ஷீட்டுக்காக காத்திருந்த காலமும் வந்தது.

அதற்கு காரணம் நாகேஷின் நடிப்பு… நடிப்பு… நடிப்பு!

‘நானும் ஒரு பெண்’ படத்தில் விஜயகுமாரிக்கு சகோதரனாக நாகேஷ் நடித்தார். சகோதரியின் துயரத்தை பார்த்து நாகேஷ் அழுவதுபோல ஒரு காட்சி.

திருலோகசந்தரிடம் ஓடிவந்த நாகேஷ், ‘‘நான் காமெடியன். எனக்கு அழற சீன் செட் ஆகுமா?’’ என்றார். ‘‘கண்டிப்பா பொருந்தும். டயலாக்கை சரியா உள்வாங்கிட்டு, உங்க ஸ்டைல்ல உணர்வுபூர்வமா இயற்கையா பேசி நடிங்க’’ என்று சொன்னார்.

இயக்குநர் சொல்லியதைப் போலவே நாகேஷ் உணர்ச்சிபூர்வமாக நடித்தார்.

நாகேஷ் அழுது நடிப்பது சரியாக இருக்குமா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற பேச்சு எழுந்ததைக் கேட்ட ஏவி.எம்.சரவணன், இயக்குநர் திருலோகசந்தரிடம் ‘‘இந்தக் காட்சியை வைத்துக் கொள்வது சரியாக இருக்குமா?’’ என்று கேட்டார்.

‘‘மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். நாகேஷுக் கும் இது ஒரு திருப்புமுனையாக அமையும்’’ என்றார் திருலோகசந்தர்.

‘‘இயக்குநரின் முடிவே முடிவு’’ என்று கூறிவிட்டார் ஏவி.எம்.சரவணன்.

ஒரு தயாரிப்பாளருக்கு இயக்குநர் மீதிருந்த நம்பிக்கைக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

இந்தக் காட்சியைப் பார்த்துதான், இயக்குநர் பாலசந்தருக்கு நாகேஷைக் கதாநாயகனாக போட்டு ‘சர்வர் சுந்தரம்’ படம் எடுக்கலாம் என்ற எண்ணமே வந்தது என்பார்கள்.

– இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

நன்றி: தி இந்து

Comments (0)
Add Comment