பிரச்சனையிலிருந்து வெளி வருவதுதான் அதற்கான தீர்வு!

25 ஆயிரம் ரூபாயில் தொழில் தொடங்கி அதை தனது காலத்திலேயே 60 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றிக் காட்டினார் திருபாய் அம்பானி.

அவரது புத்திசாலித்தனம், தொழில் நேர்த்தி, செய்யும் வேலையில் ஒரு ஒழுங்கு, தன்னைப் போலவே பிறரும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்று பலருக்கும் கற்றக் கொடுத்தது ஆகியவையே அவரது வெற்றிக்குக் காரணம்.

பொதுவாக முதல் தலைமுறையில் சம்பாதித்த சொத்துக்களை அடுத்த தலைமுறையில் வருவோர் அழித்து விடுவது உண்டு.

ஆனால், திருபாயின் மகனாக வந்து அம்பானியில் தொழிலை நிர்வகிக்கத் தொடங்கிய இரு சகோதரர்களும், 60 ஆயிரம் கோடி ரூபாய்த் தொழிலை இன்று 6 லட்சம் கோடி ரூபாயாகத் தூக்கி நிறுத்தி விட்டனர்.

காரணம், அவர்களிடம் இருந்த தொழில் ஒழுங்கு மற்றும் அதை ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பின்பற்றியதுதான்.

எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக் கூடாது என்பதில் ஓர் உறுதி இருந்தாலே வெற்றி நிச்சயம் ஆகிவிடும். அதற்கு உதாரணம்தான் இந்தக் கதை.

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. ஒருமுறை வேட்டைக்காரன் ஒருவன் காட்டில் ஒரு கூண்டை வைத்திருந்தான். அதில் புலி ஒன்று வசமாக மாட்டிக் கொண்டது. ஒரு நாள் முழுக்க போராடிப் பார்த்து துவண்டு போயிருந்தது.

அப்போது அந்தக் காட்டுவழியே ஒரு வழிப்போக்கன் சென்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்து அந்தப் புலி பரிதாபமாகக் கூறியது.

“ஐயா, எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. கண்ணும் தெரியவில்லை. இந்த வேட்டைக்காரன் என்னைப் பிடித்துப் போய் துன்புறுத்துவான். தயவு செய்து என்னை விடுவித்து உதவ வேண்டும்” என்று மன்றாடிக் கேட்டது.

அதன் முகத்தையும் கூர்மையான அதன் பற்களையும் பார்த்துப் பயந்த அந்த வழிப்போக்கன், “ஹூ….ஹூம் நான் மாட்டேன். நீ துஷ்ட மிருகம். எனக்குப் பயமாக இருக்கிறது…” என்று மறுத்தான்.

அப்போது அந்தப் புலி, “ஐயா, நான் சைவமாக மாறி ரொம்ப காலமாயிற்று. நான் எவ்வளவு நல்லவன் என்பதை ஊருக்குள் விசாரித்துப் பாருங்கள்” எனக் கெஞ்சியது. தயங்கி நின்ற வழிப்போக்கனிடம் மன்றாடியது.

அதன் தவிப்பைப் பார்த்து, பரிதாபப்பட்ட வழிப்போக்கன் பாவமாயிருக்கிறதே என எண்ணி கூண்டைத் திறந்து விட்டான்.

என்ன நடக்கும்? வெளியே வந்த புலி “என்ன நண்பரே, நலமா” என்றா விசாரிக்கும்?

ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த வழிப்போக்கனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. அவன் பயந்து அலறினான்.

“ஏ புலியே, உதவியவனையே உண்ணப் பார்க்கிறாயே இது நியாயமா…?” என்று நடுங்கினான். அவ்வழியே சென்ற நரியிடம் நியாயம் கேட்டான்.

புலி ‘இதுவும் நம் இனத்தைச் சேர்ந்தது. எனக்கு சாதமாகத்தான் சொல்லும்’ என எண்ணி சம்மதித்தது.

நடந்ததை முழுக்க கேட்ட நரி, “ஓஹோ…! இந்த மனிதன் கூண்டுக்குள் சிக்கியிருந்தபோது, நீங்கள் வெளியில் இருந்து காப்பாற்றினீர்களா…?” என்று வேண்டுமென்றே கூறியது.

புலி பொறுமையிழந்து, உறுமியது. அதைக் கண்டு அஞ்சியது போலப் பாசாங்கு செய்த நரி, “புலியாரே, மன்னியுங்கள் எனக்கும் வயதாகிவிட்டதால் மறதி அதிகம். சரி தாங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கு சென்று கதையை மீண்டும் கூறுங்கள்” என்றது புலி கூண்டுக்குள் சென்று நின்றது.

“இதோ பார், நான் இங்குதான் இருந்தேன். இந்த மனிதன்…” என்று நரிக்கு விளக்கமாக சொல்வதில் கவனமாக இருக்கும்போது, நரி மெதுவாக அந்த வழிப்போக்கனிடம், “ஓய், சீக்கிரம் கூண்டுக் கதவைச் சாத்துமய்யா, நிற்கிறீரே” என்று கூறவும் பாய்ந்து சென்று கூண்டுக் கதவைச் சாத்திவிட்டு ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டான் வழிப்போக்கன்.

ஒவ்வொரு தவறுக்கும் ஒரு தீர்வு இருக்கும். பிரச்சனை வரும் நேரத்தில் குழம்பி நிற்பதைவிட, வெளியே வரும் தீர்வே வெற்றியைத் தரும்.

பூட்டைத் தயாரிக்கும் நிறுவனத்தில் பூட்டை மட்டும் தயாரிப்பதில்லை. பெயர் பூட்டுக் கம்பெனி என்றிருந்தாலும், அங்கே சாவியும் தயார் செய்கிறார்கள் என்பதை உணருங்கள்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய “ஒரு கதை ஒரு விதை“ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

https://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment