ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தால், அவர்கள் நாயகனுடன் சேர்ந்து ஒரே பாடலுக்கு ஆட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஒருகாலத்தில் (?!) ரசிகர்கள் மத்தியில் உண்டு.
ரஜினி, கமல் தலைமுறைக்கு பிறகு வழக்கொழிந்த இவ்வழக்கம் தற்போது அவ்வப்போது சில திரைப்படங்களில் மட்டும் இடம்பெறுகிறது.
‘சத்யா’வின் ‘வளையோசை கலகலவென’ பாடலில் வரும் கமல், அமலாவின் தோற்றத்தை அப்படியே விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவின் மீதேற்றி ஒரு நாயகன், இரு நாயகிகள் பார்முலாவில் அமைந்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ட்ரெய்லர் நம்மை சிரிக்க வைத்தது.
அது போலவே முழுத்திரைப்படத்தையும் உருவாக்கி நம்மை சிரிப்பலைகளில் மூழ்கடித்திருக்கிறாரா இயக்குனர் விக்னேஷ் சிவன்?! அதேபோன்று மிகநுணுக்கமாக தமிழ் ‘கிளாசிக்’ படங்களைக் கிண்டல் செய்திருக்கிறாரா?
இந்த கேள்விக்கான பதிலைப் பெற கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பொறுமையாகப் படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
‘ரெண்டு’ காதல் கதை!
முப்பது வயதாகியும் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்கும், ராம்போவின் இந்த நம்பிக்கைக்கும் தொடர்புண்டு.
தன்னால் மற்றவர்களுக்கு எவ்வித சங்கடங்களும் நேரக் கூடாது என்ற எண்ணத்துடன் ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்றிருக்கிறார்.
இந்த சூழலில், ஒரே சமயத்தில் கதீஜா (சமந்தா), கண்மணி (நயன் தாரா) என்ற இரண்டு பெண்களைச் சந்திக்கிறார். இருவரோடும் நெருங்கிப் பழகும் நிலை ஏற்படுகிறது.
ஒருகட்டத்தில் ராம்போவினால் தங்களது வாழ்க்கை மாறிவிடும் என்று இருவரும் நம்பத் தொடங்க, இருவருமே ஒரே நேரத்தில் தங்களது காதலைச் சொல்கின்றனர்.
இருவரையும் சம அளவில் நேசிக்கும் ராம்போ, அவர்களில் யாரைத் திருமணம் செய்தார் அல்லது யாரைக் கைவிட்டார் என்று சொல்கிறது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.
படத்தைப் பார்க்கும்போதே, டைட்டிலை முதலில் யோசித்துவிட்டு அதற்கேற்ப ஒரு கதையை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதினாரோ என்ற சந்தேகம் எட்டிப் பார்க்கிறது. படம் முடியும்போது, அச்சந்தேகம் விஸ்வரூபமெடுக்கிறது.
காரணம், படத்தில் கதீஜா, கண்மணி என்ற பாத்திரங்களில் சமந்தா, நயன்தாரா எனும் இரண்டு நட்சத்திரங்களை அழகாக காட்டினாலும் திரையில் தெரியும் காதல் நம்மை ஈர்க்கவில்லை.
இது சாத்தியமா?
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஒரு ஆண் காதலித்தாலோ அல்லது ஒரு பெண் இரண்டு ஆண்களைக் காதலித்தாலோ, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற விதிமுறையை மீறுவது அரிதாகிவிட்ட சமூகத்தில் அது குற்றமாகவே கருதப்படும்.
இப்படியொரு சூழலில், நாயகன் இரு பெண்கள் மீது சம அளவில் காதலைச் செலுத்துகிறான் என்பதைக் காட்ட எவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும்.
அதற்காக கண்மணி, கதீஜா என்ற இரு பாத்திரங்களின் பின்னணியை நுணுக்கமாக விவரித்திருக்க வேண்டும்.
அந்த இடத்தை இயக்குனர் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளாததால், ஒட்டுமொத்த திரைக்கதையும் ஆட்டம் காண்கிறது.
ராம்போவை துரத்துவது அவரது தனிப்பட்ட துரதிர்ஷ்டமா அல்லது அவரது குடும்பத்தின் மீதான சாபமா அல்லது இவ்விரண்டும் சேர்ந்ததுதான் அவரது பிரச்சனைகளுக்கு காரணமா என்பதை தெளிவாகச் சொல்லவில்லை.
போலவே, அது ராம்போவின் தனிப்பட்ட எண்ணம் மட்டுமே என்ற அறிவியல்ரீதியான கருத்தும் கூட முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை.
இதனாலேயே ராம்போவாக விஜய் சேதுபதி, கதீஜாவாக சமந்தா, கண்மணியாக நயன்தாரா அழகழகாகத் தோன்றி அற்புதமான நடிப்பைத் தந்தாலும், பெரும்பாலான காட்சிகள் நம் மனதில் ஒட்டுவதாக இல்லை.
சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி, கலா மாஸ்டர், சீமா, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரபு, ரவி ராகவேந்தர் உட்பட பலர் நன்றாக நடித்திருந்தும் அதிக காட்சிகள் நாயகன் நாயகிகளை சுற்றியே அமைந்திருப்பது பெரும் குறை.
எஸ்.ஆர்.கதிர், விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு பளிச்சென்று பிரேம்களை அலங்காரத்துடன் அள்ளித் தந்திருக்கிறது.
காதலை மட்டுமே வெறுமனே சுற்றிவரும் திரைக்கதைக்கு ஏற்றவாறு கச்சிதமாக காட்சிகளை அடுக்கியிருக்கிறது ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு.
அனிருத்தின் இசையில் ‘டிப்பம் டப்பம்’, ‘டூ..டு..’, ‘காத்துவாக்குல ரெண்டு’ பாடல்கள் உடனடியாக ஈர்க்கின்றன. கிளப் சாங் ‘டிப்பம் டப்பம்’ பாடல் திரையரங்குகளில் ரசிகர்களை ஆட வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தப்படாதது கண்டிப்பாக குறைதான்.
ஆங்காங்கே சிரிப்பை மூட்டும் காட்சிகளுக்கேற்ப பின்னணி இசையும் தந்திருக்கிறார் அனிருத். ஆனாலும், படம் பார்க்கும்போது கொட்டாவி வருவதை அவரது உழைப்பால் தடுக்க முடியவில்லை.
‘ரெண்டு’ ஏமாற்றம்!
கனகச்சிதமாகத் திட்டமிட்டு, ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ திரைக்கதையோடு விக்னேஷ் சிவன் களமிறங்கியிருந்தாலும் ’ரெண்டு’ விஷயங்களில் நம்மை ஏமாற்றியிருக்கிறார்.
முந்தைய ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஆங்காங்கே நம்மை கிச்சுகிச்சு மூட்டி ஒரு வித்தியாசமான கதை சொல்லலை ஏற்க வைத்திருப்பார் விக்கி. இதிலும் அவ்வாறு முயற்சித்திருந்தாலும், திரையில் போதிய பலன் கிடைக்கவில்லை.
மிக முக்கியமாக, முதல் பாதியில் மருந்துக்கு கூட வாய் விட்டு சிரிக்க முடியவில்லை.
சரி, பின்பாதியிலாவது ‘இரட்டை ரோஜா’, ‘என் புருஷன் எனக்கு மட்டும்தான்’, ‘வீரா’ உள்ளிட்ட பல படங்களில் இடம்பெற்ற இரு நாயகி, ஒரு நாயகன் பார்முலாவில் ‘காமெடி’ இருக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை.
‘மெய்யா பொய்யா’ என்று பிரபு நடத்தும் ‘டாக்ஷோ’ காட்சிகள் கடுப்பை கிளப்புகின்றன.
மாறாக, கிளைமேக்ஸை ஒட்டி வரும் கடைசி 20 நிமிடங்கள்தான் நம்மை இருக்கையுடன் கட்டிப் போடுகின்றன. அந்த ‘டெம்போ’ படம் முழுக்க இல்லாதது வருத்தமே!
‘நானும் ரவுடிதான்’ போலவே, இதிலும் சமந்தா சொல்லும் ஒரு ‘ஆபாச’ வார்த்தை மூலம் நகைச்சுவையை தர முயன்றிருக்கிறார் விக்கி. ஆனால், அது வெற்றியடைவில்லை.
‘ரொமாண்டிக் காமெடி’ என்பதில் நகைச்சுவை இல்லாமல் போனாலும், காதலாவது இருக்குமென்று நம்பினால் இரண்டாவது ஏமாற்றம் கிடைக்கிறது.
சமந்தா காதலைச் சொல்லும் இடமாவது, வி.சே.க்கும் அவருக்குமான ‘கெமிஸ்ட்ரி’யை காட்டுகிறது. ஆனால், சம்பந்தமேயில்லாமல் வி.சே. நயனிடம் ‘திருமணம் செய்து கொள்ளலாமா’ என்று கேட்பதும், அதன் தொடர்ச்சியாக நயன் மனம் மாறுவதும் திரையில் சரியாக பெயர்க்கப்படவில்லை.
மிக முக்கியமாக, ஒரேநேரத்தில் இருவரையும் சமமாக விஜய் சேதுபதி காதலிக்கிறார் என்பதை நம்ப வைப்பதற்கான காட்சிகளும் படத்தில் இல்லை.
இருவரும் காதலைச் சொன்னதால் அதனை மறுக்க முடியாமல் வி.சே. தவிப்பதாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது திரைக்கதையில் பெரும்குறை.
எல்லோரும் ஏற்கனவே வகுக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, கொஞ்சம் விலகி மேடு பள்ளமான வேறொரு பாதையில் சென்று இலக்கை அடையும் பயணத்தை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. ஆனால், அதில் பயணிப்பவருக்கு சுவாரஸ்யம் கிட்ட வேண்டும்.
நிகழவே வாய்ப்பில்லாத ஒரு கதையை, களத்தை திரையில் காண்பித்து ரசிகர்களை நம்பவைப்பதுதான் சினிமா. அப்படியொரு நம்பிக்கையை உருவாக்காத படைப்பு ரசிகர்களால் விலக்கப்படும்.
‘நானும் ரவுடிதான்’ மூலமாக வித்தியாசமான திரை அனுபவத்தை தந்த விக்னேஷ் சிவன், வெறுமனே ரெண்டு நாயகிகள் ஒரு நாயகனைக் கொண்டு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ தந்திருக்கிறார்.
திரையில் அவர் முன்வைக்கும் உலகம் அந்நியமாகத் தெரிவது மட்டுமல்லாமல் நம் மனதைவிட்டும் வெகுதூரம் விலகியிருக்கிறது. வேறென்ன சொல்ல..?!
– உதய் பாடகலிங்கம்