ஹாலிவுட் தரத்தில் அமைந்த ‘அந்த நாள்’!

தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள்:

ஒரு படம் உலகம் முழுக்கக் கொண்டாடப்படுவதென்பது சாதாரண விஷயமல்ல. அதனைச் சாதித்த பெருமை ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாவின் ‘ரஷோமான்’ படத்துக்கு உண்டு.

திரைக்கதை அமைப்பில் ‘ரஷோமான் எபெக்ட்’ எனும் பதத்தையே தோற்றுவிக்கும் அளவுக்கு செல்வாக்கு கொண்டது. இதன் தாக்கத்தில், உலகம் முழுக்கப் பல்வேறு திரைப்படங்கள் இப்போதுவரை உருவாக்கப்படுகின்றன.

தமிழில் அப்படியொரு முயற்சியாகக் கருதப்படுவது வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அந்த நாள்’.

1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று இப்படம் வெளியானது. ஒரு சில வாரங்களே ஓடியதால், இப்படம் தோல்வியுற்றதாகவே கருதப்பட்டது.

இளம் நாயகனாக வளர்ந்துவந்த சிவாஜி கணேசன் மரணமடைவது போன்று அமைந்த முதல் காட்சி ரசிகர்களைக் கவரவில்லை என்று காரணம் கூறப்பட்டது.

ஆனால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை வழங்கிய 2ஆவது தேசிய விருதுப் பட்டியலில் ‘மலைக்கள்ளன்’ வெள்ளிப் பதக்கத்தை வெல்ல, எதிர்பாராதது மற்றும் அந்த நாள் திரைப்படங்கள் ‘சர்ட்டிபிகேட் ஆஃப் மெரிட்’ எனும் கவுரவத்தைப் பெற்றன. இரண்டு படங்களிலுமே சிவாஜி கணேசன் தான் நாயகன்.

போர் தொடர்பான கதை!

இரண்டாம் உலகப் போரில் இந்தியாவோ, தமிழ்நாடோ நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், எந்த நேரத்திலும் ஜப்பான் குண்டுமழை பொழியலாம் என்ற எண்ணம் பலமாக வேரூன்றியிருந்தது.

இதனால், பலர் தங்களது வீடு வாசலைத் துறந்து வேறு திசைக்குப் பிழைக்கச் சென்றனர்.

‘பராசக்தி’ திரைப்படம் பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் இருந்து தமிழகம் திரும்பும் ஒரு குடும்பத்தினரைக் காட்டியது.

இப்படமானது சென்னையில் ஜப்பான் விமானப்படை குண்டுமழை பொழிய உதவி செய்யும் ஒரு நபரை மையப்படுத்துகிறது.

என்ஜினியர் ராஜன் குறைந்த செலவில் ரேடியோ தயாரித்து, அதனை நாடு முழுக்க இருக்கும் சாதாரண மக்கள் பயன்படுத்த வேண்டுமென்று கனவு காண்கிறார்.

அறிவியல் அறிவு அற்புதமாக இருந்தும், தகுந்த வசதி வாய்ப்புகள் இல்லாததால் அவரது கனவு நனவாகாமல் இருக்கிறது.

இதனால் மனமொடிந்து போகும் ராஜன், ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு, தன் ஆராய்ச்சிக்கு உதவி பெறுவதற்குப் பதிலாக இரண்டாம் உலகப் போரில் இந்தியாவில் இருந்து தகவல்களை அனுப்பும் உளவாளியாக மாறுகிறார்.

தேசப்பற்று, மனிதாபிமானத்தை விடத் தனது திறமையை இந்த உலகம் மெச்சாமல் விட்டதே என்ற கோபம் அவரிடம் மேலோங்குகிறது. இதன் விளைவாக, சென்னையில் குண்டு போட ஜப்பானுக்கு உதவி செய்கிறார்.

இதனை அவரது மனைவி உஷா அறிய, அவரை கட்டிப்போட்டுவிட்டு சேதத்தை மதிப்பிடச் செல்கிறார். அடுத்த நாள் காலையில் ராஜன் அவரது அறையில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுகிறார்.

அவரைக் கொன்றவர்கள் யார் என்று போலீசார் கண்டறிவதோடு படம் நிறைவடைகிறது. இந்த வழக்கமான கதைக்குத் திரைக்கதை அமைத்த விதத்தில் வேறுபட்டு நிற்கிறது ‘அந்த நாள்’.

திரைக்கதையில் புதுமை!

‘அந்த நாள் மறக்க முடியாத ஒருநாள்’ என்று திரைக்கதையாசிரியர் ஜாவர் சீதாராமன் குரல் பின்னணியில் ஒலிக்க, 1943ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஜப்பானியர்கள் குண்டு வீசித் தாக்கினர் என்ற முன்கதை சொல்லப்பட, அடுத்தநாள் காலையில் திருவல்லிக்கேணியில் ராஜன் என்ற நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் காட்சியில் இருந்து படம் தொடங்குகிறது.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று திரைக்கதை அமைக்கப்பட்டு வந்த காலகட்டத்தில், இப்படியொரு தொடக்கத்தை அமைத்திருந்தார் ஜாவர் சீதாராமன்.

அவரைக் கொன்றது யார் தெரியுமா என்ற கேள்விக்குப் பதில் தேடும் முயற்சியின்போது, போலீசாரின் சந்தேகத்துக்குரிய ஒவ்வொரு நபரும் வேறொருவர் மீது குற்றம்சாட்டுவர். அதற்கான பின்னணியும் சம்பவங்களாக விரியும்.

பின்னாளில் ‘ரஷோமான் எபெக்ட்’ என்று கொண்டாடப்பட்ட இந்த உத்தியைத் திறம்படப் பயன்படுத்தியிருந்தார் ஜாவர் சீதாராமன்.

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த உண்மையையும் சந்தேகத்தையும் சொல்லும்போது, கதை மெதுவாக விரிவடைந்து கொண்டே வரும்.

முன்னரே அடிக்கோடிடும் காட்சியமைப்பு!

ராஜனின் சகோதரர் பட்டாபி, அவரது மனைவி ஹேமா, பக்கத்து வீட்டுக்காரர் சின்னையா, ராஜனின் காதலியாக வரும் அம்புஜம் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் திரைக்கதையில் முன்னிறுத்தப்படும். இதன் முடிவில், ராஜனைக் கொன்றது யார் என்பது அம்பலமாகும்.

ஆனாலும், திரைக்கதை தொடக்கத்திலேயே உஷா தேசப்பற்று மிக்கவர் என்பது சொல்லப்பட்டுவிடும். இந்திய சுதந்திரம், பிரிட்டிஷ் அரசின் கொடுமை எதைப் பற்றியும் கவலைப்படாத ஒருவராகவே ராஜன் எனும் கதாபாத்திரம் காட்டப்படும்.

அதேபோல, எத்தகைய சூழலையும் தனக்குத் தகுந்தாற்போல கையாளும் திறமை ராஜனுக்கு உண்டு என்பதை விளக்கும் வகையில் கல்லூரியில் மாணவர் சங்கக் கூட்டம் தொடர்பான காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இதுவே, கிளைமேக்ஸில் உஷாவிடம் ராஜன் வாதம் செய்யும்போது அப்பாத்திரம் நாயகன் என்பதையே மறக்கச் செய்யும்.

ராஜனின் பேச்சைக் கேட்டு உஷா துப்பாக்கியைத் தர ஒப்புக்கொள்வதாகவே காட்டப்படுவது இதனை உறுதிப்படுத்தும்.

ஜப்பானிய அரசுக்கு ராஜன் உளவு பார்த்திருக்கிறார் என்பதை யூகிக்கும் வகையில் சிவானந்தம் சிந்திப்பதாகக் காட்டப்படுவதும், அதனைத் தொடர்ந்து உஷாவிடம் அவர் விசாரணை செய்வதும் படத்தின் முடிவைத் துல்லியமாக உணர்த்தும் விதமாக அமைந்திருக்கும்.

ஆங்கிலத் திரைப்படங்களின் தாக்கம்!

‘அந்த நாள்’ திரைப்படத்தின் கதையமைப்பு ‘தி வுமன் இன் கொஸ்டின்’ எனும் ஆங்கிலத் திரைப்படத்தைத் தழுவியதாகக் குறிப்பிட்டுள்ளார் திரை விமர்சகர் ராண்டார் கை. அப்படத்தின் திரைக்கதையானது ஒரு கைம்பெண் கொலையாவதில் இருந்து தொடங்கும்.

அதேபோல, 1946இல் வெளியான ’சித்ரா’ எனும் திரைப்படத்தில் இந்திய ரகசியங்களை ரேடியோ தொடர்பு மூலமாக ஜப்பானுக்குக் கடத்தப்படுவது போலக் கதை அமைக்கப்பட்டிருக்கும். அதன் தழுவலாக, இக்கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியாக இருந்தாலும், அந்த நாள் படத்தின் காட்சியமைப்பு நமக்குத் தரும் அனுபவம் அலாதியானது.

குண்டு சத்தம் கேட்டு, மாடியில் இருந்து படிக்கட்டுகளில் இறங்கி ஓடி வரும் ஒரு உருவம். சாலையில் தாறுமாறாக ஓடி, பப்ளிக் பூத்தில் டெலிபோன் வேலை செய்யாமல் போக, பதற்றத்துடன் சென்று போலீசாரிடம் கொலை நிகழ்ந்ததை விவரிப்பார் சின்னையா.

இந்த காட்சி மட்டுமல்லாமல் அடுத்தடுத்த காட்சிகள் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசையின் முக்கியத்துவத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

கொலை செய்யப்படுவதை ஒவ்வொரு பாத்திரமும் விளக்கும்போது, அந்த அறையில் இருக்கும் பொருட்களில் இருந்து ராஜனின் உடை வரை எந்த மாற்றமும் இருக்காது.

கேமிரா கோணங்கள் மட்டும் சிறிய அளவில் வேறுபட்டு நிற்கும். அக்காட்சிகளில் வசனங்களும் கூட, கதாபாத்திரங்களின் தன்மை மற்றும் அறிதலுக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும்.

இப்படத்தில் எஸ்.பாலச்சந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் சீனிவாசன். முக்தா சீனிவாசன் என்ற பெயரில், பின்னாளில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்டவர்.

தனித்து தெரியும் ஒளிப்பதிவு!

அம்புஜத்தின் வீட்டுக்கு வந்து ராஜன் பேசும்போது, ஜன்னலுக்கு வெளியே ‘ராம் ஸ்டூடியோ’ என்ற பெயரில் விளக்குகள் ஒளிர்ந்து மறையும். அந்த வெளிச்சம் அவர்கள் இருக்கும் அறைக்குள் விழும்.

அதன்பின் சின்னையாவும் அம்புஜமும் பேசும்போது அவர்கள் முகத்திலும் அந்த விளக்குகளின் வெளிச்சம் விழுவது போலக் காட்டப்படும். வெவ்வேறு இடங்களில் இருவரும் நிற்கும்போது, அதற்கேற்ப ஒளியின் அளவும் மாறுபடும் அளவுக்குத் துல்லியமாக இருக்கும் எஸ்.மாருதிராவின் ஒளிப்பதிவு.

பெரும்பாலான காட்சிகளில் ட்ராலி பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, கதாபாத்திரங்களின் அசைவுக்கு ஏற்ப குளோசப்களின் போது அவர்களது நகர்வைக் காட்டும் வகையில் ஒளிப்பதிவு அமைந்திருக்கும். காட்சிகளில் நிரம்பியிருக்கும் உணர்வுகளுக்கேற்ப ஒளியமைப்பு இருக்கும்.

இப்படத்தில் இரண்டொரு ஷாட்கள் தவிர மற்றனைத்துமே ஸ்டூடியோவுக்குள் படம்பிடிக்கப்பட்டவை.

எளிய வசன நடை!

பராசக்தியிலும் மனோகராவிலும் நரம்பு புடைக்க வசனம் பேசியிருப்பார் சிவாஜி. இப்படத்தின் இறுதியில் பண்டரிபாயிடம் அவர் ஆவேசப்பட்டு பேசும்போது, அவற்றின் சாயல் துளி கூடத் தெரியாது. அந்த அளவுக்கு வசனம் மிக எளிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

‘ராஜன் வீட்டில் குண்டு சத்தம் கேட்டவுடனே, அவர் தான் கொல்லப்பட்டார் என்று நிச்சயமாக நினைத்தது ஏன்’ என்று சிஐடி சிவானந்தம் சின்னையாவிடம் கேள்வி எழுப்புவார்.

இந்த கொக்கிதான், அவர் தரப்பு உண்மையை விளக்க வகை செய்யும். இப்படிப் படத்தில் ஆங்காங்கே வரும் வசனங்கள் அடுத்த காட்சிக்கான துப்புவாக அமைக்கப்பட்டிருக்கும்.

யானையைக் கண்டுணர்ந்ததைச் சொல்லும் ஆறு பார்வைத்திறனற்றவர்களின் கதை, கொலையும் செய்வாள் பத்தினி என்ற வார்த்தையைத் தாங்கிய ’தூக்குதூக்கி’ நாடக விளம்பரம் என்று பல்வேறு விஷயங்கள் எளிதாக வசனங்களில் விளக்கப்படும்.

இந்த வசனங்களை எழுதிய சீதாராமன், திரையில் தான் ஏற்ற சிவானந்தம் பாத்திரத்தில் மட்டும் உரைநடைத் தமிழ் பேசியது ஆகப்பெரிய முரண் தான்.

குறைவான பாத்திரங்கள்!

ராஜனின் குடும்ப உறுப்பினர்கள், பக்கத்து வீட்டுக்காரர், அவரது காதலி, விசாரணை செய்யும் போலீசார், கல்லூரி சகாக்கள் உட்பட மிகச் சில பாத்திரங்களே படத்தில் உண்டு. நூற்றுக்கணக்கில் துணை நடிகர்கள் நடித்து வந்த காலத்தில் கட்டாயம் இது புதுமைதான்.

பராசக்தி, கண்கள் படங்களை அடுத்து இப்படத்திலும் பண்டரிபாயோடு ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் சிவாஜி. படத்தின் டைட்டிலிலேயே ‘சிவாஜி கணேசன் – பண்டரிபாய் நடிக்கும்’ என்று காட்டப்பட்டதே இந்த ஜோடி எந்த அளவுக்குப் புகழ் பெற்றிருந்தது என்பதனை விளக்கும்.

டி.கே.பாலச்சந்திரன், கே.சூர்யகலா, எஸ்.மேனகா, ஏ.எல்.ராகவன் உட்படப் பலர் நடித்திருந்தாலும், சின்னையாவாக நடித்த பி.டி.சம்பந்தத்தின் நடிப்பு ரசிக்கும் வகையில் உள்ளது.

குறிப்பாக, நாட்டுப்பற்று சிறிதும் இல்லாத, தன் லட்சியத்தில் உறுதியாக இருக்கிற நபராக, மிகப்பொருத்தமாக ராஜன் பாத்திரத்தில் நடித்திருப்பார் சிவாஜி.

சிவாஜி எனும் அசுரன்!

‘பராசக்தி’ வெளியாவதற்கு முன்னர் தமிழ்த் திரையுலகம் சிவாஜி எனும் நடிகரைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், படம் வெளியான பின்பு அந்த மனிதரைச் சுற்றியே சுழலத் தொடங்கியது.

’மனோகரா’ வெளிவந்தபிறகு சிவாஜி கிட்டத்தட்ட நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். இடைப்பட்ட காலத்தில் பணம், பூங்கோதை, திரும்பிப் பார், மனிதனும் மிருகமும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமை என்னவென்று வெளிக்காட்டினார்.

அப்போதுதான், ‘அந்த நாள்’ பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. இப்படத்தில் ரேடியோ என்ஜினியர் ராஜன் வேடத்தில் முதலில் நடித்தவர் எஸ்.வி.சகஸ்ரநாமம்.

படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாருக்கு அவரது நடிப்பு திருப்தி தரவில்லை. அதனால், புதிய நடிகரைக் கொண்டு அனைத்து காட்சிகளையும் மீண்டும் எடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

இந்த படத்துக்காக, சிவாஜிக்கு 25,000 ரூபாய் சம்பளம் தர முன்வந்தார் மெய்யப்பன். பராசக்தி படப்பிடிப்பில் சிவாஜியின் தோற்றம் சரியில்லை என்று நிராகரித்தவரிடம் இருந்து மீண்டும் அழைப்பு.

‘தன்னால் 25,000 ரூபாய் சம்பளம் தர முடியும்’ என்று அவர் சொல்ல, ‘தனக்கு 40,000 ரூபாய் வேண்டும்’ என்றார் சிவாஜி.

இந்த இழுபறி தொடர, ஒவ்வொரு நாளும் 1,000 ரூபாய் சம்பளம் தரலாம் என்ற யோசனையை முன்வைத்தார் இயக்குனர் வீணை பாலச்சந்தர்.

சிவாஜியும் அதற்கு உடன்பட, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 17 நாட்களில் படமாக்கப்பட்டன.

இயக்குனரின் திறமை மட்டுமல்ல, எடுத்துக்கொண்ட தொழிலைச் சிரமேற்கொண்டு செய்த சிவாஜியின் அர்ப்பணிப்பும் இதற்குப் பின்னிருக்கிறது.

படம் முழுக்க மிக மென்மையாகப் பேசும் கனவான் போல அமைக்கப்பட்டிருந்தது ராஜன் கதாபாத்திரம். கச்சிதமாக உடலோடு பொருந்திய ஆடை போல, காலத்தின் ஓட்டத்தில் ஒரு மனிதனிடம் ஏற்படும் மாற்றத்தைக் கண் முன்னே காட்டியிருந்தார் சிவாஜி.

ஆனாலும், மனோகராவைக் கொண்டாடிய ரசிகர்களால் இப்படத்தை ஏற்க முடியவில்லை.

பாடல்களே கிடையாது!

‘காளிதாஸ்’ காலம் தொட்டு, ஒரு திரைப்படத்தை ரசிகர்கள் நினைவில் கொள்ளும் அளவுகோலாகப் பாடல்களே இருந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறாதது பெரிதாகப் பேசப்பட்டது.

இப்போதே இந்த நிலை எனும்போது, சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பே பாடல்களும் நடனமும் இல்லாமல் படமெடுப்பது என்பது நிச்சயம் தைரியமான முயற்சிதான்.

ஆனால், ‘அந்தநாள்’ படத்தில் பாடல்கள் கிடையாது என்று இயக்குனர் எஸ்.பாலச்சந்தர் சொன்னபோது, அம்முடிவை மெய்யப்பன் ஏற்கவில்லை. படத்தை முழுதாகப் பார்த்தபிறகு ஓரிரு பாடல்களாவது இருக்கலாம் என்று அவர் அபிப்ராயம் தெரிவித்தார்.

அதனை ஏற்காத பாலச்சந்தர், ‘வேண்டுமானால் 6 பாடல்கள் சேர்க்கலாம்’ என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். இறுதியில், அவரது உறுதியே வென்றது.

இந்திய அளவில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் முழுநீளத் திரைப்படம் என்ற சிறப்பை அந்த நாள் பெற்றதாகத் தெரிவித்திருக்கிறது ஏவிஎம் நிறுவனம்.

இன்றும் கூட ஓரிரு திரைப்படங்களே இத்தகைய சிறப்பைப் பெறுகின்றன.

தாமதமாகக் கொண்டாடப்பட்ட அற்புதம்!

1954ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு வெளியான ‘அந்த நாள்’ மிகச்சில வாரங்களே திரையரங்குகளை நிறைத்தது.

இப்படத்தின் தோல்வியால், பாடல்கள் இல்லாமல் படம் தயாரிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்தார் மெய்யப்பன்.

’சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இப்படம் அமையவில்லை. குறிப்பிட்ட தட்டு ரசிகர்களால் மட்டுமே அப்படம் கொண்டாடப்பட்டது’ என்று பின்னாளில் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், தேசிய விருது வென்றபிறகு 1955இல் இப்படம் தமிழகமெங்கும் மீண்டும் திரையிடப்பட்டது. அப்போது, மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

இப்போதும், பல தமிழ் இயக்குனர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்றாக இதையே குறிப்பிட்டு வருகின்றனர்.

வில்லனை மையமாகக் கொண்டு கதை சொல்லும் தைரியத்தைத் தமிழ் திரையுலகுக்கு அளித்த திரைப்படமாகவும் இது கொண்டாடப்படுகிறது.

ஜாவர் சீதாராமன்

அந்த நாள் படத்தை இயக்கிய எஸ்.பாலச்சந்தர், பின்னாளில் வீணை இசைஞராகவும் அறியப்பட்டார். அவன் அமரன், அவனா இவன், பொம்மை, நடு இரவில் ஆகிய தமிழ் திரைப்படங்களையும், எதி நிஜம் என்ற தெலுங்குப் படத்தையும் இயக்கியிருக்கிறார் எஸ்.பாலச்சந்தர்.

பாடகர், நடிகர், இசையமைப்பாளர், புகைப்படக் கலைஞர் என்று பன்முகம் இவருக்கு உண்டு. பின்னாளில் கர்நாடக இசையுலகில் தன்னைக் கரைத்துக் கொண்டார்.

தனியிடம் பிடித்த ‘அந்த நாள்’!

’பிலிம் நாய்ர்’ வகைக்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் திரைப்படங்களில் அந்தநாளுக்கும் இடமுண்டு.

சினிமா எனும் கலையை ரசிப்பவர்களுக்கும், அதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவோருக்கும் இப்படம் ஒரு பாடம். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒளியமைப்பு, நடிப்பு, வசனம், திரைக்கதை அமைப்பு உட்படப் பலவற்றைச் சுலபமாகக் கற்றுக்கொள்ள இது உதவும்.

வேற்றுமொழித் திரைப்படங்களைக் கண்டு அதிசயிக்கும்போது, இவற்றை தமிழில் எடுக்க முடியுமா என்ற கேள்வி திரைக்கலைஞர்கள் மத்தியில் எழும். அது சாத்தியம்தான் என்று நிரூபித்த தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் வரிசையில் இயக்குனர் எஸ்.பாலச்சந்தருக்கு முதன்மையான இடம் உண்டு.

எஸ்.பாலச்சந்தர்

படத்தின் பெயர்: அந்தநாள், தயாரிப்பு: ஏவி.எம் புரொடக்‌ஷன்ஸ், மூலக்கதை, இயக்கம்: எஸ்.பாலச்சந்தர், டைரக்‌ஷன் உதவி: வி.சீனிவாசன், திரைக்கதை, வசனம்: ஜாவர் சீதாராமன்,

கலை இயக்கம்: ஏ.பாலு, பின்னணி இசை: ஏவிஎம் வாத்திய கோஷ்டி (சரஸ்வதி ஆர்கெஸ்ட்ரா), ஒளிப்பதிவு: எஸ்.மாருதிராவ், ஒலிப்பதிவு: ஈ.ஐ.ஜீவா,

புராசசிங்: ஸர்துல்சிங் சேத்தி, படத்தொகுப்பு: எஸ்.சூர்யா, ஸ்டூடியோ: ஏவிஎம் ஸ்டூடியோஸ்

நடிப்பு: சிவாஜி கணேசன், பண்டரிபாய், ஜாவர் சீதாராமன், ஏ.எல்.ராகவன், பி.டி.சம்பந்தம், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.சூர்யகலா, எஸ்.மேனகா மற்றும் பலர்.

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment