இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களான நிலையில், பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஏப்ரல் 10-ம் தேதியில் இருந்து இதுவரை 4.64 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர்டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர்.
பூஸ்டர் டோஸ் போடுவதால் பாதகமான விளைவு ஏற்படுமோ என்ற பயம், உண்மையிலேயே பூஸ்டர் டோஸ் பயன் அளிக்குமா என்பது போன்ற சந்தேகங்கள் மக்களிடம் நிலவுவதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து விளக்கமளித்த மருத்துவர்கள், “நீண்ட காலமாக முழுமையான தடுப்பூசி என்பது 2 டோஸ் என மக்களுக்கு சொல்லப்பட்டது. இப்போது பூஸ்டர் டோசுக்கு பதிலாக முன்எச்சரிக்கை டோஸ் என்ற வார்த்தையை சேர்த்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் கூடிய உண்மைத் தகவல்கள், மக்களின் கவலைகளைப் போக்கும். தொற்று நோய் முடிந்து விட்டதால் நோயின் ஆபத்து கணிசமாக குறைந்து இருக்கும்போது, நோய்த் தடுப்பினால் ஏற்படும் பாதக நிகழ்வு ஆபத்தைப்பற்றி மக்கள் கவலைப்படுகிறார்கள்.
தடுப்பூசி தயக்கம் உருவாக்கப்பட்டவுடன் அதை சமாளிப்பது கடினமாக இருக்கும். குணப்படுத்துவதை விட தடுப்பது சிறந்தது.
மூன்றாவது அலை லேசானது என நினைத்து, முன்னெச்சரிக்கை டோஸ் தேவையா? என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
குழந்தைகளுக்கு கல்லீரல் செயலிழப்பு, ரத்த உறைவு பிரச்சினை, தடுப்பூசியால் இறப்பவர்கள் பற்றிய பிரசாரங்கள் போன்றவை, முன் எச்சரிக்கை டோஸ் எடுப்பதில் தயக்கம் ஏற்படுத்துகின்றன.
ஒமைக்ரான் அலை மிக ஆபத்தான ஒன்றாக இல்லாததால், தடுப்பூசி சோர்வை அது அதிகரிக்கிறது.
இதற்கு எதிராக பேச வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. முடிவு எடுக்க மக்களை விட வேண்டும்.
தடுப்பூசி திட்டங்கள் இல்லாத நாடுகள் இப்போது மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருபதை மக்களிடம் தெரியப்படுத்துவது முக்கியம்.
கோடை காலம் தொடர்வதையும், பூஸ்டர் டோஸ் போடுவதால் மக்கள் சோர்வை அனுபவிப்பதையும் பார்க்கமுடிகிறது. ஆனால், இது நீடிக்கக்கூடாது தடுப்பூசி போட்ட ஆரம்ப நாட்களில் யாராவது சோர்வு உடல் சோர்வு, உடல் வலி உணர்ந்தால் அது பக்க விளைவுதான். அது போய்விடும். பூஸ்டர் டோஸ் பயன் பற்றி ஆலோசனை முக்கியம்” என வலியுறுத்தியுள்ளனர்.