அறுபது வயது திருமணம்

திருமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றெடுத்து தான் பெற்ற பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து பேரன் பேத்திகள் வளர்ந்து நிற்கும் தருணத்தில் பிள்ளைகளால், அவர்கள் கண்குளிர பெற்றவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் மகோன்னத திருக்கோலம் தான் அறுபதாம் கல்யாணம்!

ஒருவருக்கு அறுபது வயது முடிந்து, அறுபத்தி ஒன்றாவது வயது தொடங்கும் ஜென்ம நட்சத்திர நாளன்று, அவர் பிறந்தபோது ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதே இடத்தில் மறுபடியும் அமைந்திருக்கும்.

அப்போது ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பிக்கிறது என்று பொருள்.  அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். ஒரு ஆயுளை அவர் முடித்துவிட்டார் என்றும் கருதலாம்.

அதனால்தான், அப்போது வலுவிழந்து நிற்கும் உடலை வலுப்படுத்தவும், ஆயுள் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்னும் அறுபதாம் கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள்.

அதனால் இந்த விழாவை ஜென்ம (பிறந்த) நட்சத்திர நாளிலேயே நடத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

“சஷ்டியப்த பூர்த்தி எனும் இந்த மணி விழாவில் இந்து ஆகமம், புராணங்களின் வழியில் 5, 9, 12, 13, 29, 33, 65, 125, 320 எனும் வரிசையில் தேவதைகளுக்கு கும்பங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்யப்படுகிறது.

முக்கியமாக ‘மிருத்யுஞ்ஜய’ கலசமும், வரிசையாக பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மார்க்கண்டேயன், திக்பாலகர்கள், சப்தசிரஞ்சீவிகள், ஆயுள் தேவதை, வருஷம், அயனம், நட்சத்திரம், கணபதி, நவக்கிரகம்,அதிதேவதை, ப்ரத்யதி தேவதை எனும் 13 கலச பூஜை செய்வது சிறப்பானதாகும்.

இதில் சிவ தீட்சை எடுத்துக் கொண்டவர்களுக்கும், சிவபூஜை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ருத்ரர்களுக்காக 11 அல்லது 1 கலசமும், பஞ்சபிரும்ம கலசங்களாக 5 அல்லது 1ம் ஆன்மார்த்த மூர்த்தி ஸ்தாபனமாக 10 கலசமும் ஆக 16 அல்லது 44 கலசங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பானதாகும்.

இந்த வழிபாட்டிற்குப் பின்பு தைல தானம், ஆஜ் யதானம்,  உதகபாத்ர தானம் வஸ்திர தானம், நவதானிய தானம், பூ தானம்,  கோ தானம்,  தில தானம், தீப தானம்,  ருத்ராட்சம் அல்லது மணி தானம் எனும் தச தானம் செய்து உமா மகேஷ்வர பூஜை எனும் வயோதிகத் தம்பதி பாத பூஜை செய்து திருநாண் பூட்டுதல் செய்து ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும்.

இந்த மணிவிழா நிகழ்வுகள் தமிழ்நாட்டில் திருக்கடையூர் எனும் ஊரிலுள்ள சிவத்தலத்தில்தான் அதிக அளவில் செய்யப்படுகிறது. அங்கு செல்ல இயலாதவர்கள் அருகிலுள்ள ஏதாவது ஒரு கோயிலில் செய்து கொள்கின்றனர்.

20 வயது வரை நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை

20-40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற வாழ்க்கை

40-60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை

அறுபது வயதுக்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம்.  அறுபது வயதுக்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்கியமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.

உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் இன்ப,  துன்பங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள்.

அவர்களுடைய அறுபதாவது வயதில் மீண்டும் ஒரு புதுப்பிறவி எடுக்கிறார்கள்.  அதாவது இளமையில் திருமணம் செய்து குடும்பத்தை கவனித்து, பிள்ளைகளை ஆளாக்கி வளர்த்து, நல்ல வாழ்வை அமைத்துகொடுத்து இல்லற கடமையை முடிக்கிறார்கள்.

இதற்கு பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுவித்து, கடவுளை முழுமையாக சரணடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

மேலும் இந்த அறுபதாம் கல்யாணம் அவர்களுடைய சந்ததியினரின் நன்மைக்காகவும் நடத்தப்படுகிறது.  அறுபதாம் கல்யாணத்தில் இது வரை வாழ்ந்த கட்டாயங்களினால் ஆன வாழ்க்கையில் நடந்த தவறுகளுக்கு வருந்தி, குடும்ப பாரம் இறக்கி வைத்து,  ஒரு நல்ல ஆத்மாவாக வாழ உறுதியெடுத்துக் கொள்ளுதல் மிக முக்கியம்.

தன் துணையுடனான அறுபதாம் கல்யாண பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது, அதற்கு தெய்வ அருள் நிச்சயம் வேண்டும்.  அப்போது நடத்தப்படும் இந்தத் திருமணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது.

கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை இனி வரும் காலங்களில் நிதானித்து அனுபவித்துப் பார்க்கச் சொல்லும் காலம் இது.  வயதான தம்பதியர்களுக்கு ஒரு மன நிறைவைத் தரும் விழாவாகவும் இந்த அறுபதாம் கல்யாண விழா இருக்கிறது.

Comments (0)
Add Comment