‘குயில்’ என்பது பாரதிதாசனின் குறியீடு!

பாரதிதாசன் நினைவு நாள் பதிவு:

“தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன். எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்” என்று தன்மான எக்காளமிட்ட பாரதிதாசன் மொழிவழித் தேசியத்தின் இலக்கியச் சின்னம் ஆவார்.

இந்த அடையாளத்திற்காகவே அவரது புகழை இருட்டறையில் வைத்துப் பூட்டிவிடலாமென்று எண்ணிய முயற்சிகள் ஈடேறவில்லை.

அவரது புகழ்வட்டம் தேசிய இயக்கத்தில் தொடங்கி, சுயமரியாதை இயக்கத்தில் மலர்ந்து, பொதுவுடைமை இயக்கத்திற்கும் உரமாகி நாளுக்குநாள் தமிழ்கூறும் நல்லுலகெங்கும், மனிதம் பாடும் மாநிலமெங்கும் தகத்தகாயமாய்ச் சுடர்விரித்து வளர்கின்றது.

ஏனெனில் “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை.”

அடக்கப்பட்டவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் சுரண்டப்பட்டவர்களையும் மையப்புள்ளியாக வைத்து இலக்கியக் கோலம் போட்டவர்களுள் மூத்தவர் அவர். முன்னோடியானவர்.

பெண்ணியக் கண்ணோட்டம் முதல் கருத்தடைக் கருத்தோட்டம் வரை எத்தனையோ முற்போக்குத்தடங்களில் அவரது எழுதுகோல் முதற்கை எடுத்துள்ளது.

கவிதை உத்திகளிலும் அவர் முதலடி எடுத்துவைக்க அவற்றில் ராஜநடை போட்ட பிற்காலக் கவிஞர்கள் கணக்கற்றோர். அவருக்குப்பின் எழுதவந்த தமிழன்பர்கள் அனைவருக்கும் அவரே முதலெழுத்தும் தலையெழுத்தும் ஆவார்.

‘அதிர்ந்ததிந்தப் பூமி அவர் நடையில் என்றால் அழகு தமிழ் நடையினையும் சேர்த்தே சொன்னேன்’ – என்று கண்ணதாசன் வியந்ததுபோல் ஆண்மையின் பிம்பமாய் நிற்பவை அவரது படைப்புகள்.

 ‘கடவுளை மற மனிதனை நினை’ – என்று பெரியார் மொழிந்த இலக்கணத்திற்கு இலக்கியம் கண்ட புரட்சிக்கவிஞர் அவர்.

தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பாரதிதாசனது வீச்சை வெகு அழகாகப் படம் பிடித்துள்ளார். “பாரதிதாசனின் கற்பனை ஊற்றுக்குத் தோற்றுவாய் பாரதியார்தாம். ஆனால் சீடர் குருவை மிஞ்சுகிறார். அவருடைய சொல்லாற்றலின் ஆழமும் பார்வையின் விரிவும் திசைவழியின் பரப்பும் கவிதையின் உன்னதமும் குருவைக் கடந்து அவர் சென்றுவிட்டதைப் புலப்படுத்துகின்றன.”

1947 இல் ‘குயில்’ இதழை பாரதிதாசன் தொடங்கிய நிகழ்வுக்குப்பின்னணியில் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. தொடக்க காலத்தில் அவர் இறையுணர்வாளராகவும் தேசியக் கவிஞராகவும் இருந்தபோது அவருடைய கருத்துகளோடு ஒத்துப்போன இதழ்களிடம் அவர் பகுத்தறிவாளராக மலர்ந்த காலத்தில் அதே வரவேற்பை எதிர்பார்க்க முடியவில்லை.

‘கணை விடுபட்டதும் லட்சியம் தேடும்’ இயல்பு கொண்டது. அவரும் அப்படியே. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பவர். கொண்ட கொள்கையில் எக்காரணம் கொண்டும் சற்றும் சமரசம் செய்துகொள்ள இயலாதவர்.

குறிப்பாக எந்தக் கட்டுக்குள்ளும் அடங்க மறுப்பவர். ‘இதை வையேன் எனில் அதை விட்டுவையேன்’ என்பவர். ஆகவே தமது முழுவீச்சையும் வெளிப்படுத்த அவர் சொந்த இதழைத் தொடங்குவதுதான் ஒரே வழி என்பது தெளிவாயிற்று.

சொந்தப் பத்திரிகை என்னும் கருத்துக்கு ராஜபாளையம் தனுஷ்கோடி ராஜா சுருதி சேர்த்தார். பொற்கிழி வழங்கும் எண்ணத்தை முதன்முதலில் வெளியிட்டவர் அவர்தாம். அவர் தொடங்கிய பாராட்டு நிதி உதவி எண்ணம் தமிழகத்தில் வேரூன்றிக் கிளை விரித்தது.

அண்ணா தலைமையில் செயல்பட்டது. சிங்கப்பூர், மலேசியா வாழ் தமிழர்கள் குறிப்பாக ‘தமிழ் முரசு’ ஆசிரியர் கோ சாரங்கபாணி உதவினர்.

அண்ணா தலைமையில் 28-7-1946 இல் சென்னையில் பொற்கிழி வழங்கப்பட்டது. நிதி அளிப்பு நிகழ்வுக்குப்பின் 5 திங்கள் கடந்துதான் குயில் இதழ் முதல் இதழ் வெளிவந்தது.

இடையில் திரட்டிய நிதி குறித்து சிலர் கேள்விகள் கேட்கத்தொடங்கினார்கள். ராமன் தம்முடைய வழியில் குறுக்குச்சால் ஓட்டினார்.

நானே அச்சக உரிமையாளர் – பாரதிதாசன் என்னிடம் சம்பளம் பெறும் ஊழியர் – என்று சவால் விட்டார். பாரதிதாசனுக்கும் அவருக்கும் இடையே வழக்கு. இதனால் இதழ் வரத் தாமதமாயிற்று.

‘பாரதிதாசன் – அவரும் அவர்தம் படைப்புகளும்’ என்னும் நூலில் மன்னர் மன்னன் எழுதிய கட்டுரையில் அத்தனை விவரங்களையும் தருகிறார்.

‘குயில்’ முதல் இதழ் எட்டணா விலையில் டிசம்பர் 1946 நாளிட்டு வெளிவந்தது. ஆசிரியர் – பாரதிதாசன், நிர்வாக ஆசிரியர் – டி என் ராமன் என்னும் குறிப்புகள் காணப்படுகின்றன.

எடுத்த எடுப்பிலேயே 4000 படிகள் அச்சிடப்பட்டன. 48 பக்கங்களில் பாரதிதாசன் படைப்புகள் இடம்பெற்றன. 10 வெண்பாக்களில் இதழின் கொள்கை விளக்கம் இடம் பெற்றது.

தமிழின் தனித்தன்மை, தொன்மை, மொழியாதிக்க எதிர்ப்பு ஆகிய தளங்களில் இதழின் பயணம் இருக்கும் என்பதான அறிவிப்பு அது.

முதல் இதழிலேயே பாரதிதாசன் ‘குயில்’ என்பது தமது குறியீடு என்பதை ஒரு கவிதைமூலம் சுட்டிவிடுகிறார்.

11.09.1946 இல் திருச்சி வானொலியில் அவர் தலைமையேற்றுப்பாடிய நெடுங்கவிதை ‘புதுநெறி காட்டிய புலவன்’ இவ்விதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

‘காடுகமழும் கர்ப்பூரச்சொற்கோ, நீடுதுயில் நீக்கப்பாடிவந்த நிலா’ என்று பலாச்சுளை போன்ற படிமச்சொற்களால் பாரதியை வர்ணித்த அற்புதக் கவிதை அது.

அடுத்து முத்தமிழ் நிலையம் சேலத்தில் அரங்கேற்றிய ‘இன்ப இரவு’ நாட்டிய நாடகம் முழுவதும் அச்சேறியுள்ளது. நாட்டியக் கலைஞர்கள் நடராஜன், பட்டம்மா குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பாரதிதாசன் இயற்றிய நாடகம் அது.

‘சேவற்போர்’ என்னும் தலைப்பில் ஓர் உருவகக் கவிதை. ‘தொண்டர் படைப்பாட்டு’ என்னும் பெயரில் ஒரு கொள்கை முழக்கம். ‘கழைக்கூத்தாடி’ என்னும் கவிதை பேச்சுமொழியில் கலப்புத் தமிழில் அமைந்த கவிதை. இதில் தமிழர்கள் ஒற்றுமை வலியுறுத்தப்படுகிறது.

‘ஆளவந்தார்’ என்னும் கவிதை இந்தித் திணிப்பை எதிர்த்து முழங்குகிறது. இவற்றுடன் நாமக்கல் மு.செல்லப்பன் பாரதிதாசன் பாடல் பற்றி எழுதிய திறனாய்வுக் கட்டுரையும் இதழில் உண்டு.

இரண்டாம் இதழ் ஜூலை 1947 நாளிட்டு வெளிவந்தது.

பாரதிதாசனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ராமன் தம்மைப் பதிப்பாசிரியர் என்று பிரகடனம் செய்துகொண்டு தடம் மாறி இதழைக் கொண்டுவருவது தெரிகிறது.

திராவிட நாடு பிரிவினை பற்றி ஆசிரியர் உரை. தமிழ் ஒளி ‘புத்தனேரி சுப்ரமணியன், பெ.தூரன் கவிதைகள், நாரண துரைக்கண்ணன், வி.ராதாகிருஷ்ணன், பூ.கணேசன், இரணிய தாசன் கட்டுரைகள், முடியரசன், நா.அறிவழகன் கதைகள்,

ராவண காவியம் மதிப்புரை (மன்னர்மன்னன்) அண்ணாவின் கருத்துகளின் திரட்டு, கலைப்பகுதி என்னும் பல்சுவை அரங்கம், பல எழுத்தாளர்கள் பங்களிப்பு என்று இதழ் பாதை மாறுகிறது.

பாரதிதாசனின் பங்களிப்பு இல்லாமல், குயில் கவிதை இதழாகவும் இல்லாமல் பாரதிதாசனின் குரலாகவும் இல்லாமல் வேறு முகம் காட்டுகிறது.

இந்த மாற்றம் இதழுக்குப் பின்னடைவைத் தருகிறது. முறையீடுகள் பறக்கின்றன. டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி, “எங்கள் ‘லிபரேட்டர்’ அச்சகத்தில் உங்கள் சொந்தக்குயிலை அரங்கேற்றிக் கொள்ளுங்கள்” என்று புதுப்பாதை காட்டுகிறார்.

புதுக்கோட்டை செந்தமிழ்ப் பதிப்பகத்திலிருந்து இதழ் வெளிவருகிறது. நிறுவன அலுவலகம் 95, பெருமாள் கோவில் தெரு, புதுச்சேரி (பாரதிதாசனின் இல்ல முகவரி). அமைச்சர் என்னும் பொறுப்பு மன்னர்மன்னனுக்குத் தரப்படுகிறது. நிர்வாக ஆசிரியர் என்று இன்று அழைக்கப்படும் பொறுப்பே அது.

பாரதிதாசன் தனித்தமிழ் ஆர்வலர். அத்துடன் புதுமை விரும்பி. நறுக்கு மீசை, தோளில் சால்வை, இதழில் வெண்சுருட்டு, கம்பீரமான புலிப்பார்வை என்று தனித்துவம் நிரம்பிய தோற்றமுடைய அவர் புதுப்புதுச் சொல்லாடல்களையும் தமிழுக்கு அறிமுகம் செய்த சொற்சிற்பி.

‘குயில்’ இரண்டாம் பிறவி எடுக்கிறது. ‘பாரதிதாசன் குயில்’ ஒருபெயர்ப் பன்னூல் அவருடைய தனிப்பாடலுடன் மீண்டும் உலா வருகிறது. ஓவியப்புலவர் மாதவன் முகப்புச் சித்திரம் தீட்ட குயில் இலச்சினையுடன் இதழ் கலைப்பெட்டகமாக வெளிவருகிறது.

‘காதல் வாழ்வு’ என்னும் கதை. ‘நாத்திகன்’ என்னும் கவிதை. திருமண வாழ்த்து ஒன்று. ‘மலையூற்று’, ‘செந்தமிழ்நாடு’, ‘ஆடவந்தாள்’, ‘மருத்துவர் வீட்டில் அமைச்சர்’ (இது அங்கதம்) என்று பல தொனிகளில் கவிதைகள்.

‘பாரதிதாசன் கவிஞர் கழகம்’ வியாசர்பாடியில் தொடங்க இருப்பதாக ஓர் அறிவிப்பு. பகுத்தறிவியக்க இதழ்களைத் தீண்டத் தகாதவையாக ஒதுக்கி வைத்திருந்த ஹிக்கின் பாதம்ஸ் புத்தக விற்பனைத்தொடர் முதல்முதலாக குயிலுக்கு ரயில் நிலையங்கள் அனைத்திலும் தமது கிளைகளில் விற்பனைக் கதவைத் திறந்து விடுகிறது.

இப்படி வரவேற்பு ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் விமர்சனங்கள். “பணக்காரர்களுக்காகவே ஒரு ரூபாய் விலையில் பாரதிதாசன் பத்திரிகை நடத்துகிறார்” என்று ஒரு கிண்டல்.

இரண்டாம் இதழ் 25.08.1947 நாளில் வெளிவரவேண்டும் என்று முயற்சி. புதுச்சேரியில் பழநியம்மா (பாரதிதாசனின் துணைவியாரின் பெயரில்) மின்விசை அச்சகத்தில் இதழ் அச்சேறுகிறது.

இவ்விதழில் ‘ஆளவந்தாருக்கு இறுதி அறிக்கை’ என்னும் கவிதை. இது திராவிட நாட்டுப் பிரிவினைக்குக் குரல் கொடுப்பது. புகழ்பெற்ற ‘ஆண்குழந்தை தாலாட்டு’.

‘சத்திமுற்றப்புலவர்’ என்னும் பெயரில் ஒரு சந்தத்தமிழ் நாடகம். இக்காலக்கட்டத்தில் பாரதிதாசன் திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதிக்கொண்டிருந்தார். ஈட்டிய பொருள் இதழ்ச் செலவுகளுக்குப் போயிற்று. ராமன் தொடுத்த வழக்கினாலும் செலவினங்கள அதிகரித்தன.

மூன்றாம் இதழ் மன்னர் மன்னனின் பரிந்துரையை ஏற்று ஆறணா விலையில் வெளி வந்தது.

இதில் 1942 இல் எழுதிய திராவிட நாட்டுப்பண் மாதிரியே இன்னொரு பாடல். மொழிவழி மாநிலப் பிரச்சினை பற்றி ஒரு கட்டுரை. இந்த முயற்சி திராவிட நாடு கோரிக்கைக்கு எதிரானது என்னும் பின்புலத்தில் ஓர் அலசல்.

சென்னை தெலுங்கர்களுக்குத் தரப்படும் அல்லது தனிப்பகுதியாக விளங்கும் – அது இனி தமிழ்நாட்டுக்கு இல்லை என்னும் நடுவணரசின் கருத்தைக் கண்டித்து ஒரு கட்டுரை.

திரைப்படத் துறையின் செயற்கைத்தனம், பண்பாட்டுச் சீரழிவு பற்றி ஒரு விமர்சனம். இக்கட்டுரை வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அதே செயற்கை, சீரழிவு என்னும் கூறுகள் மேலும் நங்கூரம் பாய்ச்சிக்கொண்டு திரையில் ஆதிக்கம் செய்வது ஒரு மாபெரும் சோகம் என்றுதான் சொல்லவேண்டும்.

குயில் 01.10.1948 இதழில் ‘உலகம் உன்னுயிர், உன் உயிர் இவ்வுலகம்’ என்னும் கவிதை. ‘கொடிய ஆட்சி’ என்றொரு கவிதை.

‘வடக்கில் போகும் பஸ்ஸில் ஏறாதீர்’ என்றொரு கட்டுரை. இவற்றில் புதுவை மாநிலத்தை இந்தியக் கூட்டரசில் இணப்பதை எதிர்த்துக் கருத்துகள் இடம் பெற்றிருந்தன. இவற்றால் குயில் என்றாலே அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்கு எரிச்சல்.

1947 இல் இந்திய விடுதலை நாளை ‘துக்கநாள்’ என்றார் பெரியார். அண்ணாவோ அது ‘மகிழ்ச்சி நாள்’ என்றார். ‘வெள்ளையர் வெளியேறி அந்த இடத்தில் தமிழர்க்கு ஊறு விளைவிப்பவர் அமருவதால் விளைவு தீமையே தவிர நன்மை இல்லை’ என்றார் பாரதிதாசன்.

மன்னர் மன்னன் அன்றைய மாணவர் இயக்கத்துடன் ஒன்றுபட்டு வெள்ளையர், பிரஞ்சியர் ஆகிய இருவரும் வெளியேறுவதே சரி என்னும் நிலையெடுத்தார்.

பாரதிதாசன் தமது கருத்தை மகன் மீது திணிக்கவில்லை. ‘குயில்’ அப்போது நாளேடாக வெளிவந்து கொண்டிருந்தது. அவ்விதழின் பொறுப்பு பெரியசாமி என்னும் நண்பருக்கு அளிக்கப்பட்டது.

பாரதிதாசன் எடுத்த நிலையால் குயில் காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டது. அவரது ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகமும் தடைக்குள்ளானது.

1954 இல் புதுச்சேரி மாநிலம் இந்தியக்குடியரசில் இணைந்தது. பாரதிதாசன் தேர்தலில் பங்கேற்றுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். உள்ளூர் அரசியல் அவருக்கு ஒத்துவரவில்லை. மீண்டும் ‘குயில்’ வெளியிட வாய்ப்பு.

1958 இல் குயில் கிழமை இதழாக மலர்ந்தது. 1961 வரை புதுச்சேரியிலிருந்து வெளிவந்த குயில் அவரது படத்தயாரிப்பு முயற்சி காரணமாகச் சென்னைக்குக் குடிபெயர்ந்தது.

இதற்கிடையில் தொடங்கப்பட்டிருந்த ‘தமிழ்க்கவிஞர் பெருமன்ற’த்தின் சார்பாக அது வெளிவந்தது. 1964 இல் பாரதிதாசன் மரணமடைகிறார். 1947 முதல் 1964 வரை விட்டுவிட்டு 128 இதழ்கள் மட்டுமே வெளிவந்த நிலையில் ‘குயில்’ இசைப்பதை நிறுத்திக் கொள்கிறது.

பாரதிதாசனின் கவிதையைப்போலவே உரைநடைக்கும் வீர்யமும் வீச்சும் உண்டு. அவரது வரிகளை வைத்தே பின்னாளில் கதை வசன கர்த்தாக்கள் பிழைத்தார்கள்.

என் பாட்டுக்குப் பின்பாட்டுப் பாடினோன் அதைத்தன் பாட்டென்று விளம்பினான் என பாரதிதாசனே சுட்டிக்காட்டும் அளவு அவர்கள் பிழைப்பு நடந்தது.

‘குயில்’ இதழில் அவர் எழுதிய தலையங்கங்கள் ஆழமானவை. ஆணித்தரமானவை. ரத்தினச் சுருக்கமான சொற்செட்டுடன் அமைந்தவை. எடுத்துக்காட்டுக்கு ஒரு துளி – பெரியாரின் உடம்பைவிட்டுப்பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்திழுத்து வைத்துக்கொண்டிருந்தவை இரண்டு.

ஒன்று அவரின் பெருந்தொண்டு. மக்கள் அவர்மீது வைத்திருந்த அருள்.

முன்னறிவிப்பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு அவர் பெருந்தொண்டால் முடியாது. அவர் மக்கள்மேல் வைத்துள்ள அருளால் முடியாது.

பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப்பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப்பெண்ணை அன்னை என்று புகழாமல் வேறு என்னவென்று புகழவல்லோம்?  பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். அவர் எதிரில் வண்டியளவாக மாலைகளைக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உள்ள மணியம்மையார் ஏதும்கெட்ட வேலைக்காரிபோல் தொலைவில் சுவடி விற்றுக்கொண்டிருப்பார். ஒரே ஒரு மாலையை என் துணைவியாருக்குப் போடுங்கள் என்று அந்தப்பாவியாவது சொன்னதில்லை.

அம்மாலைகளில் மணக்கும் பெரியாரின் பெருந்தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஒர் இதழைக்கிள்ளித் தம்தலையில் வைத்தார் என்பதும் இல்லை.

இது 10.05.1960 இதழில் எழுதிய தலையங்கம். என்ன உரிமை. என்ன கடுமை. இப்படியெல்லாம் உரிமையுடன் கடிந்துகொள்ள பாரதிதாசன்தாம் இன்னொருமுறை பிறந்து வரவேண்டும்.

அவரது கருத்தோடு மாறுபடலாம். பிணங்கலாம். எழுத்தோடு உடன்பட்டுத்தானே ஆகவேண்டும்?

‘குயில்’ என்பது பாரதிதாசனின் குறியீடு.

நன்றி – புதிய பார்வை, காலச்சுவடு… நினைவில் நிற்கும் இதழ்கள்

– நன்றி: கல்பனாதாசன்

Comments (0)
Add Comment