‘தம்பிக்கு எந்த ஊரு’ – ரிப்பீட்டு!

ரஜினிகாந்தை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் ஒரு சேர கற்றுத்தந்த படம் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்றால் மிகையல்ல.

பழிக்குப் பழி, ரத்தம், ஆக்‌ஷன், ஸ்டைல் என்று ஒரு வட்டத்திற்குள் சுழன்று களைத்துப் போனவரை கைதூக்கிவிட்ட படைப்பு அது. அந்த வகையில், மறைந்த இயக்குனர் ராஜசேகருக்கு ரஜினி கோடி நன்றிகள் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் 20 அன்று ரிலீஸானது ‘தம்பிக்கு எந்த ஊரு’. அதன் தாக்கத்தினால், தற்போது வெளியான ‘அண்ணாத்த’ வரை நகைச்சுவைக்கென்று தனி முக்கியத்துவம் தந்து வருகிறார் ரஜினி.

நாலு வரி கதை!

பெரிய நடிகரின் படமென்றால் கதை கனமானதாக இருக்க வேண்டும். காட்சிகளில் அழுத்தம் கூடியிருக்க வேண்டும் என்று பல எதிர்பார்ப்புகள் உண்டு.

அவற்றை மீறி, எம்ஜிஆருக்கு ஒரு ‘அன்பே வா’ போல, சிவாஜிக்கு ‘ஊட்டி வரை உறவு’ உள்ளிட்ட சில படங்கள் போல, பின்னாட்களில் ரஜினிக்கும் கமலுக்கும் திரைக்கதையை மட்டுமே நம்பி பல முழுநீள பொழுதுபோக்கு சித்திரங்கள் கிடைத்தன.

’தறிகெட்டு அலையும் ஒரு பெரும் செல்வந்தரின் மகன், கிராமத்தில் சாதாரண மனிதனாக வாழ்ந்தால் என்னவாகும்’ என்ற ஒருவரிக் கதையைக் கொண்ட ‘தம்பிக்கு எந்த ஊரு’, அந்த வகையில் ரஜினிக்கு ‘ஜாக்பாட்’டாக கிடைத்தது.

நாயகனை ஏழையாகவும் நாயகியை செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் காட்டும் ‘வழமையான’ போக்கில் இருந்து இது சற்றே வேறுபட்டது.

செல்வச் செழிப்பில் திளைத்த ஒருவன் சாதாரண வாழ்க்கைக்குப் பழக எப்படியெல்லாம் திணறுவான் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள வழி செய்தது ரஜினியின் நகைச்சுவை நடிப்பு.

’தம்பிக்கு எந்த ஊரு படத்தில் நடித்து தன் கேரியரில் எதிர்கொள்ள வேண்டிய பெரிய திணறலை தவிர்த்துவிட்டார்’ என்று ஒருமுறை சொன்னார் இயக்குனர் பார்த்திபன். அந்த அளவுக்கு, இதில் ரஜினியின் காமெடி ப்ரெஷ்ஷாக இருக்கும்.

இப்படத்தில் செந்தாமரையின் மகனாக வரும் சிறுவன் விமலிடம் ‘அப்படி சொல்லாதீங்க வாத்தியாரே’ என்று கெஞ்சுவார்.

தன் மீது காதல் வசப்பட்ட சுலக்‌ஷனாவின் இரட்டை அர்த்த பேச்சு புரியாமல் முழிப்பார். செந்தாமரை உட்பட இதர பாத்திரங்களிடம் பம்முவார்.

அதே ரஜினி வில்லங்கம் செய்யும் மாதவியிடமும் அவர் குடும்பத்தினரிடமும் ‘கெத்து’ காட்டுவார். இந்த கதாபாத்திர வடிவமைப்பு ‘அண்ணாமலை’, ‘முத்து’, ‘படையப்பா’ உட்பட ரஜினியின் பெரும்பாலான வெற்றிப்படங்களில் பிரதி எடுக்கப்பட்டிருக்கும்.

கவர்ந்திழுக்கும் காந்தம்!

‘தம்பிக்கு எந்த ஊரு’ என்றவுடனே என் மனதில் தோன்றுவது ‘காதலின் தீபம் ஒன்று’ பாடல் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் மிகவும் பிடிக்கும் என்ற வகையில், எனக்கு பிடித்த பாடல் அது.

போலவே, ரஜினி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அப்பாடலில் அவர் தலைமுடியைக் கோதியவாறே வரும் காட்சிதான். வரலாற்றில் அவரை என்றும் இளமையாக இருக்கச் செய்யும் வல்லமை கொண்டது அது.

அக்காலகட்டத்தில், இது போன்ற ஹேர்ஸ்டைலுடன் தலைமுடியைச் சிலுப்பிக் கொண்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்திருக்கும்.

அந்த நினைவிலோ என்னவோ, ‘ரஜினி முருகன்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் தந்தையாக அச்யுத் குமார் நடித்த நீலகண்டன் பாத்திரத்தை வடித்திருப்பார் இயக்குனர் பொன்ராம்.

தினசரி வாழ்விலும் ரஜினியை மனதில் தைத்துக்கொண்ட எத்தனையோ ரசிகர்களிடம் இச்செய்கையை காண முடியும். அதீதம் என்றாலும், ஒரு படைப்பின் கலைஞனின் படம்பிடிக்கப்பட்ட தருணத்தின் வெற்றி கொண்டாடப்பட்டே தீரும் என்பதற்கான சான்று இது.

ரஜினியின் கண்களுக்கு காந்தம் போன்று ஈர்க்கவல்ல சக்தி உண்டு. ஒருமுறை இயக்குனர் கே.பாலச்சந்தரே இதனைத் தன் பேட்டியில் கூறியிருக்கிறார்.

இப்படத்தில் மாதவியைச் சீண்டும் காட்சியில் அதனை ஒரு உத்தியாக ரஜினி பயன்படுத்துவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ’சந்திரமுகி’யில் வேட்டையனாக வரும் காட்சியில் இவ்வுத்தியையே வேறு மாதிரியாகக் கையாண்டிருப்பார்.

அள்ளித் தரும் அட்சய பாத்திரம்!

‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தின் பாடல் ரிக்கார்டிங்கின்போது ஒரு அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இளையராஜா. ஒரு நாளில் மூன்று திரைப்படங்களுக்காக அவர் பங்களித்த நேரம் அது.

அதனால், வேறு வழியில்லாமல் மருத்துவமனை படுக்கையில் இருந்து டெலிபோனில் விசிலடித்தே மெட்டு அமைத்தாராம் இளையராஜா.

இத்தகவல்கள் எதுவும் அப்பாடல்களைக் கேட்கும்போது பஞ்சாய் பறந்துவிடுகின்றன.

இளையராஜாவின் மெனக்கெடலுக்கு பலன் இல்லாமல் போனால்தான் யோசிக்க வேண்டும்.

இத்திரைப்படம் வெளியானபோது எத்தகைய வரவேற்பை பெற்றது என்று தெரியவில்லை.

ஆனால், மீண்டும் மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்த படமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனாலேயே, இன்றும் பலருக்கு இத்திரைப்படம் ஒரு ஆதர்சம்.

‘அள்ளித் தந்த வானம்’, ‘சம்திங் சம்திங்’ உட்பட வெகுசில படங்களில் ‘தம்பிக்கு எந்த ஊரு’ கதையும் ரஜினியின் கதாபாத்திரமும் பிரதியெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், எப்போதும் ஒரிஜினல் ஒரிஜினல்தான்.

தற்போது, ‘பீஸ்ட்’க்கு அடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திலும் காமெடிதான் முதன்மையாக இருக்குமென்று சொல்லப்படுகிறது.

ரொம்பவும் சீரியசான, ரஜினிக்காக வடிவமைக்கப்பட்ட ‘படையப்பா’ டைப் கதைகளை பார்த்து போரடிக்கும் காலகட்டத்தில் ’தம்பிக்கு எந்த ஊரு’ போன்ற ட்ரெண்ட்செட்டர்களே வேண்டும்.

காலத்திற்கேற்ற மாற்றங்களை கைக்கொண்டு வெகு இயல்பான நகைச்சுவை நடிப்பை ரஜினியிடம் காண வேண்டும்.

’தலைவா, பாக்ஸ் ஆபீஸ் கணக்குகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் மீது திணிக்கப்படும் பார்முலாவில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று சொல்லும் ரசிகர்களுக்கு இன்னொரு ‘தம்பிக்கு எந்த ஊரு’ தருவாரா ரஜினி?!

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment