எழுத்தாளர் திலகவதி பேச்சு
‘கல்மரம்’ நாவலுக்காக எழுத்தாளர் திலகவதிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டபோது, த.மு.எ.ச சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 20.04.2005 அன்று திலகவதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கவிஞர் வெண்ணிலா வரவேற்றுப் பேசினார். எழுத்தாளர்கள் பாமா, பாஸ்கர் சக்தி, எக்பர்ட் சச்சிதானந்தம் ஆகியோர் திலகவதியைப் பாராட்டிப் பேசினர்.
ஏற்புரையில் பேசிய திலகவதி, “ஓர் எழுத்தாளனுன்கு எழுத்துதான் மிகப்பெரிய விருது. எழுத்து என்பது அனுபவம் நிறைந்த ஒரு சந்தோஷமான விஷயம். கட்டடத் தொழிலாளியின் வாழ்க்கையை எழுத உந்துதல் எங்கிருந்து வந்தது என்று என்னைப் பலர் கேட்கின்றனர்.
ஆனால், கட்டடத் தொழிலாளிகளை நாம் மறந்துவிட்டதுதான் ஆச்சரியமான விஷயம். நாம் இருக்கும் கட்டடத் தொழிலாளியின் உழைப்பு உள்ளது.
ஆனால் நாம் அவர்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. நான் எழுதியதன் மூலம் கட்டடத் தொழிலாளி என்ற ஓர் இனம் இருப்பது தெரியவந்துள்ளது.
ஒருவருக்கு அன்பு, பாசம் தேவைப்படுவது போல கற்பனையும் தேவை. இதற்கு வாசிப்பு மிக முக்கியம்.
தன்னை தூக்கிவிட அழைத்துப் போக சிறைக் காவலர்கள் வரும்போது பகத்சிங் தான் படித்துக் கொண்டிருந்த நூலின் பக்கத்தின் முனையை மடித்து அடையாளம் வைத்துவிட்டுச் சென்றார்.
அதேபோல் உத்தம்சிங் தன்னை தூக்கிலிட சில நாள்கள் மட்டுமே இருப்பது தெரிந்தும் தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தனக்குச் சில நூல்களை அனுப்பும்படி கோரியிருந்தார். இதுதான் வாசிப்புக்கு உதாரணம்.
கல்வியால் வன்முறையை சரிசெய்ய முடியும். மனக்கோணலை நூல் வாசிப்பு மூலம் சரிசெய்யலாம். படிப்பு என்ற இயக்கத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.
புதிய பார்வை, 2005, ஏப்ரல் மாத இதழிலிருந்து…