– முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரில் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தையும் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “யாராலும் திருட முடியாத சொத்து ஒன்று உண்டு என்றால் அது கல்வி தான். திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம் பள்ளிப் பருவம் தான்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிக் கல்விக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருகிறது.
பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதில் இந்திய துணை கண்டத்திற்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்திற்கான திறவுகோல்.
மாணவர்கள் மகிழ்ச்சியோடு கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்துவது தான் அரசின் நோக்கம். குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து பெற்றோர் செயல்பட வேண்டும்.
பிள்ளைகளுக்கு பெற்றோர் வழிகாட்ட வேண்டும். தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்கக் கூடாது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் சிந்தனை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்; அப்போது தான் சிறப்பாக செயல்பட முடியும்” என்றார்.
அதன்பின் பேசிய பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “குழந்தையின் எதிர்காலத்திற்கு கல்வி தான் ஏணிப்படி என்பதை உணர்ந்த தமிழக அரசு கல்வித் துறைக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. பள்ளிக் கல்வித் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நாளாக இந்நாள் அமைய உறுதி ஏற்போம்” என்றார்.