பாரம்பரியம் தொடர்ந்தால் வரலாறு வாழும்!

நவீனம் என்பது எப்போதும் நம்முடன் இருப்பது. அடுத்தகட்டம், அடுத்தது என்ன என்ற தேடல் இல்லாமல் மனிதன் இல்லை.

இதனால் தொடர்ந்து மாற்றங்களை எதிர்கொண்டேயிருக்கிறது மனித இனம். அதையும் மீறி, சில மட்டும் நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கிறது; நம்மால் விடாமல் கடைப்பிடிக்கப்படுகிறது அல்லது வெறும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதையே ‘பாரம்பரியம்’ என்று கொண்டாடுகிறோம்.

மொழி, பண்பாடு, கலைகள், நினைவுச் சின்னங்கள், பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்தையும் அடுத்துவரும் தலைமுறை தொடருமாறு செய்தல் என்று பாரம்பரியமாக நாம் பாதுகாத்து வருபவை ஏராளம்.

தொடரும் அடிப்படைகள்!

ஒரு மனிதனின் வாழ்வுக்கு உணவு, உடை, உறையுள் ஆகியன முக்கியத் தேவை. அவை ஒவ்வொன்றும் நாம் வாழும் இடத்திற்கும் தட்பவெப்பநிலைக்கும் ஏற்ப அமைதல் அவசியம்.

தமிழ்நாடு எனும் மாநிலத்தை எடுத்துக்கொண்டாலே சமகாலத்தில் இவ்விஷயங்களில் பல வேறுபாடுகள் நிலவுவதை அறியலாம். அப்படியிருக்க, பல ஆயிரம் ஆண்டுகளாக கால ஓட்டத்தில் எத்தனை எத்தனை மாற்றங்களை இவை சந்தித்திருக்கும். அவற்றை அறிவதும் பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியம்?

அதனாலேயே சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் உண்ட உணவு இதுதான் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும்போது வியப்பு மேலிடுகிறது.

அது நவீன கால பழக்க வழக்கங்களோடு ஒப்புநோக்கும் வகையில் இருக்கும்போது அந்த ஆச்சர்யம் மேலும் உயரம் தொடுகிறது.

கீழடி ஆய்வு முதல் நாடெங்கும் நிகழ்த்தப்படும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் சான்றுகளைக் காண வேண்டுமென்ற ஆவல் மேலிடுவதும், அவற்றைப் பற்றிய உண்மைகள் தெரிய வரும்போது கொண்டாடுவதும் இவ்வகையிலேயே நிகழ்கின்றன.

வரிசைப்படி வீடுகள் கட்டிக்கொண்டும், சீரான இடைவெளியில் காற்று புகவும் கழிவு நீர் வெளியேறவும் வழி செய்தும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்ததை அறிவதைவிடவும் வேறேது வியப்பை அள்ளித்தர முடியும்.

எத்தனை நினைவுச்சின்னங்கள்!

புவியியல் அமைப்பில் இயற்கையாக அமைந்த எத்தனையோ அம்சங்கள் பிற நாட்டு சுற்றுலா பயணிகளால் கொண்டாடப்படுகின்றன.

இம்மண்ணில் ஆண்ட பேரரசர்களும் சிற்றரசர்களும் தமது ஆட்சியின் சிறப்பை உணர்த்த பல்வேறு வழிபாட்டுத்தலங்களையும் கல்விசாலைகளையும் கோட்டை கொத்தளங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.

சாதாரண மனிதர்கள் கூட தமது பிந்தைய சந்ததி தெரியும் வண்ணம் தாழிகளுக்குள் தங்களைப் புதைத்திருக்கின்றனர்.

சில வினோத பழக்கங்களாக அக்காலத்தில் கருதப்பட்டவைதான், எத்தனையோ ஆண்டுகள் கழித்து ஒரு தலைமுறை குறித்த உருவத்தையும் உருவகத்தையும் கண்டறிய உதவுகின்றன.

காடுகளும் மலைகளும் சமவெளிகளும் நீர்நிலைகளும் அலைகள் பரவும் கடலும் பாதச்சூடு தலைக்கேறும் மணற்பரப்பும் சிறு நிலப்பகுதியில் சேர்ந்தே அமைந்திருக்கின்றன.

அப்படிப் பார்த்தால், ‘வேற்றுமையுள் ஒற்றுமை’ பரப்பி வரும் இந்தியா முழுக்க தொடர்ந்து வரும் பாரம்பரியம் எத்தனை வகைப்பாடு கொண்டதாக இருக்கும்? அவற்றில் எத்தனை அடுத்த தலைமுறைக்கு இன்றிருப்பவர்களால் தரப்படவிருக்கின்றன?

தமிழ்நாட்டிலும் எத்தனையோ நினைவுச்சின்னங்கள், தலங்கள் ஆள் அரவமற்றுக் கிடக்கின்றன. அவற்றில் சில பாதுகாக்கப்பட்டும், சில தவறான செய்கைகளுக்குச் சாட்சியாகவும் நின்று கொண்டிருக்கின்றன.

அறத்தை கைமாற்றுவோம்!

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் அடுத்த தலைமுறைக்கு எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். இது நியதி அல்ல என்றாலும், அதுவே பிறவிக்கடனாக இருக்க முடியும். அந்த வகையிலேயே, இன்று நம்மைப் பற்றியிருக்கும் பல நல்லவைகளுக்கு காரணமாய் இருக்கின்றனர் நம் முன்னோர்.

வாழும்போதும் பிறருக்கு உதவும் வகையில் வாழ்வு அமைய வேண்டும். இதனால், தினசரி வாழ்வில் ஒருவர் பின்பற்ற வேண்டியன என்று சில வழக்கங்களையும் பழக்கங்களையும் வகுத்து வைத்திருக்கின்றனர்.

‘கலிகாலத்திற்கு இதெல்லாம் ஆகாது’ என்று அவற்றை ஒதுக்காமல், அறம் கொண்டதை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றுவது நமது முக்கியக் கடமை.

பாரம்பரியம் என்பது வேறு ஒன்றுமல்ல; நம்மையும் நாம் வாழும் சுற்றத்தையும் காத்து எதிர்காலத்திற்குத் தாரை வார்க்கும் சான்றுகளை உருவாக்குவதோடு, அவை குறித்த முழுமையான அறிவை உள்வாங்குவதுதான்.

ஆதலால், பாரம்பரியம் என்பது வரலாற்றோடு கலந்துள்ளது. பாரம்பரியம் வாழ்ந்தால் தான் வரலாறு வாழும். அதற்காக, பழையன எல்லாமே புனிதம் என்று போற்றாமல் தக்கனவற்றை கைக்கொண்டு கடத்துவது சிறப்பைத் தரும்.

ஏப்ரல் 18 அன்று கொண்டாடப்படும் உலக பாரம்பரிய தினத்தில் நம்மைச் சுற்றியிருக்கும் மரபுசார் அனைத்தையும் கொண்டாடுவோம்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment