குரல் எழுப்புவது ரொம்பவும் முக்கியம்!

குறள் மட்டுமல்ல, குரல் துணை இல்லாமலும் இவ்வுலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. இரண்டடி திருக்குறள் நமது வாழ்வுக்கு துணை நிற்கும் என்பது போல, சில அங்குலமுள்ள குரல் நாண் ஒரு மனிதரின் வளர்ச்சியையும் வாழ்வையும் நிர்ணயிக்கும்.

குரல் என்பது மனிதரின் வாழ்வு மேம்பாட்டுக்கான அலகு என்றால் அது மிகையல்ல. அதனாலேயே பேச்சுத்திறன் குறைபாடு உடையவர்களைப் பார்த்து அதிர்ச்சியோடும் இரக்கத்தோடும் இயல்பைக் கற்றுக் கொடுத்திருக்கிறது நமது முந்தைய தலைமுறை.

புரிதலை உருவாக்கும் குரல்!

ஒரு குழந்தை பிறந்தவுடன் எழும் அழுகைச்சத்தம் மட்டுமே அவ்விடத்தில் இருப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆனந்தக் கூத்தாட வைக்கும். ஒன்றுக்கொன்று முரணான இரு வேறு உணர்வுகள் முளைப்பதற்கு அங்கிருக்கும் குரல்களின் அதிர்வே காரணம். அது இல்லாமல் போனால், அவ்விடமே அர்த்தமற்றுப் போகும்.

ஒரு மனிதனின் குரல் அவனுக்கான அடையாளங்களில் ஒன்று. ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்படுவதற்கும் எதிர்வினை புரிவதற்கும் எதிரே இருப்பவரோடு ஒரு உரையாடலை மேற்கொள்வதற்கும் அடிப்படை அக்குரல் தான்.

ஒரு குழந்தை வளர்ந்து வளரிளம் பருவத்தை அடையும்போது, பூப்பெய்துதலை உணர்த்துவதும் அதே குரல் தான். அப்பருவத்தில்தான் ஆணின் குரல் நாண் வளர்ந்து குரல் தடிமன் ஆகும்; பெண்களுக்கு அவ்வளர்ச்சி இராது.

அது மீறப்படும்போது, குரலால் கேலி கிண்டல்களுக்கு ஆளாகும் ஆண், பெண்களும் உண்டு.

இதில் ஏற்படும் குறைபாடுகளைக் குணப்படுத்த, இன்று பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

புகழைத் தரும் குரல்!

வளரிளம் பருவத்தை தாண்டும்போது, குரலால் மட்டுமே அடையாளம் காணப்படுபவர்களும் புகழ் பெறுபவர்களும் உண்டு.

இசைப் பாடகர்கள், பாடகிகள், டப்பிங் கலைஞர்கள், பேச்சாளர்கள், நாடகம் முதலான நிகழ்த்து கலை வல்லுநர்கள் உட்படப் பலர் இன்று புகழேணியில் ஏறக் காரணம் அவர்களது குரலே! ஆசிரியர்கள் உள்ளிட்ட பயிற்றுநர்களுக்கும் குரலே மிக முக்கியமான கருவி.

அப்படிப்பட்ட குரலை பராமரிக்கவும் பல்வேறு மெனக்கெடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சீரான இடைவெளியில் தண்ணீர் பருகுவது, பிராணாயாமம் செய்வது, குரலைச் சீர்படுத்தும் திரவங்களையும் உணவுகளையும் உட்கொள்வது,

அதிக வெப்பமான, குளிர்மையான உணவுகளைத் தவிர்ப்பது தொடங்கி மது, சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் புறந்தள்ளுவது என்று பல அம்சங்களை வாழ்நாள் முழுக்க பின்பற்ற வேண்டியிருக்கும்.

தூங்கும்போது குறட்டை விடுவதும், காலநிலை மாற்றங்களில் சிக்குவதும் கூட குரல் பாதுகாப்பில் தாக்கத்தை உருவாக்கும்.

குரல் நாணின் ஏற்படும் உபாதைகளையும் தவிர்க்க பல்வேறு மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கும். குறைந்தபட்சமாக பேசாமல் இருப்பதன்மூலம் குரல் வெளிவரும் பாதைக்கு ஓய்வைத் தரலாம்.

குரல் தரும் புகழைத் தக்கவைக்க, இது போல பல விஷயங்களைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.

எதிர்க்குரல் முக்கியம்!

குரலும் எதிர்க்குரலும் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு ரொம்பவே முக்கியம். இதனை அரசியலாக எடுத்துக்கொள்ளாமல் நோக்கினால், நமது வாழ்வின் அடிப்படையாகவும் இதுவே இருக்கும்.

ஏனென்றால், ஒரு உரையாடல் சீரானதாக இருக்கவும், அதில் ஒரு முடிவு எட்டப்படவும் இரு வேறு குரல்கள் ஒன்றுக்கொன்று நேரெதிராக ஒலிப்பது அவசியம்.

அந்த குரல் அர்த்தமுள்ளதாக இருக்க, அதனைத் திட்டமிட்டு வெளிப்படுத்த வைக்கும் மூளையின் செயல்பாடு சீராக இருக்க வேண்டும்.

ஒருவரது எண்ணங்களை வெளிப்படுத்த குரல் வெளியாவது அவசியம். ‘என்னப்பா குரல் கொடுக்கிற’, ‘குரல் கொடுத்தா பெரிய ஆளா’ என்பது போன்ற பேச்சுகளே மனித வாழ்வில் அதன் அருமையை உணர்த்தும்.

இதனைப் புரியவைக்கும் விதமாகவே, 1999 ஆம் ஆண்டு முதல் பிரேசிலில் ‘குரல் தினம்’ கொண்டாடும் வழக்கம் தொடங்கியது. தற்போது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16ஆம் தேதியன்று ‘உலக குரல் தினம்’ கொண்டாடப்படுகிறது.

’இருக்கும் வரை அருமை தெரியாது’ என்று இழப்பினால் புரியவரும் உண்மையை உணர்த்தியிருக்கின்றனர் நம் முன்னோர்கள். குரல் உள்ளிட்ட ஐம்புலன்கள் மூலமாக நம் வாழ்வில் முக்கியத்துவமான இடத்தை வகிக்கும் அனைத்து அம்சங்களுக்கும் இது பொருந்தும்.

அதனைத் தற்காலிகமாக உணர வேண்டுமானால், ஒரு நாள் முழுக்க பேசாமல் இருந்து பார்க்கலாம். பதிலளிக்காமல் இருக்கலாம்; கேள்வி எழுப்பாமல் இருக்கலாம்.

அப்போது, குரல் எழுப்புவதன் முக்கியத்துவம் மிகத்தெளிவாகப் புரியும். அதன் பிறகு, தானாக குரல் எழுப்புவது வாழ்வின் அடிப்படை என்பது தெளிவாகும்!

-பா.உதய்

Comments (0)
Add Comment