கேஜிஎஃப் 2 – ‘அதீதம்’ தொட்ட ஹீரோ பில்டப்!

தமிழ் திரைப்படங்களில் நாயகர்களில் ஆக்‌ஷனில் இறங்குவதற்கு முன்பிருக்கும் ’பில்டப்’ காட்சிகள் மிக முக்கியம்.

உதாரணமாக, ‘பாட்ஷா’வில் ரஜினிகாந்த் ஆனந்தராஜ் கும்பலை அடிப்பதற்காக அடிபம்பை பிடுங்கி கையிலெடுப்பதும், ‘ரன்’னில் விரட்டும் அடியாட்களிடம் இருந்து தப்பியோடும் மாதவன் சப்வே ஷட்டரை மூடுவதும் மிகச்சிறப்பான இடத்தைப் பெறுபவை.

இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘தீவார்’ படத்திலும் இது போன்றதொரு பில்டப் காட்சியே அவரது திரையுலக வாழ்வில் தனித்துவமான இடத்தைத் தந்தது.

முழுக்க முழுக்க அப்படிப்பட்ட காட்சிகளை அடுக்குவதென்பது முழுமையாக இனிப்பை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வதற்கு சமம்.

அப்படியொரு சவாலை அனாயாசமாக எதிர்கொண்டு பெருவெற்றி பெற்ற கேஜிஎஃப்பின் இரண்டாம் பாகமும் அதே போன்றதொரு நிலையின் அடுத்தகட்டத்தை தொட்டிருக்கிறது.

ஆனாலும், ரசிகர்களின் ஆரவாரம் அடங்காமலிருப்பது தித்திப்பில் திளைக்கத் தயாராக இருக்கிறார்களோ என்ற எண்ணத்தை பலப்படுத்துகிறது.

தரையில் இருந்து சிகரத்திற்கு..!

கே.ஜி.எஃப் எனும் தங்கச் சுரங்கங்கள் கொண்ட இடத்தை கொத்தடிமைத்தளமாக கையாளும் கருடனை ராக்கி (யாஷ்) கொல்வதோடு முதல் பாகம் முடிவடைந்தது.

இரண்டாம் பாகத்தில், அந்த சாம்ராஜ்யத்தின் தலைவனாகும் அவர், அந்த இடத்தைத் தக்க வைக்க என்னவெல்லாம் செய்தார் என்று நீள்கிறது.

கருடனின் இடத்தில் ராக்கி போன்ற ஒரு சாதாரண ரவுடியா என்று கேஜிஎஃப் சிண்டிகேட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

‘நான் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை’ என்று சொல்லி ரீனாவை (ஸ்ரீநிதி) அழைத்துச் செல்கிறார் ராக்கி.

கருடன் இடத்தைப் பிடிக்க அதீரா (சஞ்சய் தத்) வர, அப்போது நடக்கும் சண்டையில் பர்மான் (சரண் சக்தி) உட்பட சிலர் கொல்லப்படுகின்றனர். அதன் தொடர்ச்சியாக, ராக்கியும் அதீராவில் சுடப்படுகிறார்.

கேஜிஎஃப்பை விட்டு ஹெலிகாப்டரில் வெளியேறும் ராக்கி, துபாயில் இருக்கும் டான் ஒருவரைச் சந்தித்து ஏகே 47 ரக துப்பாக்கிகளை கேட்கிறார். இந்தியாவில் இருக்கும் தனது ஆட்கள் அனைவரும் ராக்கியின் எதிரிகள் என்று அவர் மறுப்பு தெரிவிக்க, அப்போது அத்தனை பேரும் கொல்லப்பட்ட தகவல் வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, அதீராவின் கும்பலை ஏகே47 கொண்டு விரட்டியடிக்கிறார் ராக்கி. இருக்கும் தங்கத்தை எல்லாம் தோண்டியெடுத்துவிட வேண்டுமென்ற அவரது அதீத ஆர்வத்தால், அந்த இடமே ஒரு நகர்ப்புறம் போல வளர்ச்சியுறுகிறது.

அதே நேரத்தில், பிரதமர் ராமிகா சென் (ரவீனா டாண்டன்) பகையையும் சம்பாதிக்கிறார் ராக்கி. ஒருகட்டத்தில் சிபிஐ அலுவலகத்தையும் சூறையாடுகிறார்.

இதனால் மத்திய அரசு, அமைச்சர், பகை கொண்ட சிண்டிகேட் உறுப்பினர்கள், அதீரா என்று பல முனை தாக்குதலை ஒருசேர எதிர்கொள்கிறார்.

அதன்பின் என்னவானது என்பதோடு முடிவடைகிறது ‘கேஜிஎஃப் 2’.

இந்தியா முழுவதுமுள்ள அத்தனை மொழிகளிலும் எத்தனை கமர்ஷியல் படங்கள் வந்திருக்கின்றனவோ, அவற்றில் இருக்கும் ஹீரோ பில்டப் காட்சிகள், ஷாட்கள் அத்தனையும் கேஜிஎஃப்பில் நிச்சயம் இருக்கும்.

‘க்ளிஷே’க்கள் நிறைய இருந்தாலும், எந்த இடத்தில் எந்த ஷாட்டை வைத்தால் ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்புவார்கள் என்பது இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

அதனாலேயே, தமிழ் ரசிகர்களும் கூட யாஷ் தோன்றும் காட்சிகளில் கூக்குரல் எழுப்புகின்றனர்.

ஒரு அளவு வேண்டாமா..?

மிகச்சாதாரணமான ஒருவன், கற்பனையில் கூட எட்ட முடியாத பீடத்தை அடைகிறான் எனும் வழக்கமான கதை.

அதற்கான திரைக்கதையை ‘நான் லீனியர்’ முறையில் அமைத்து, குழப்பமில்லாமல் கதை சொன்னதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை யாஷின் ஹீரோயிசத்தை அனாயாசமாக தாங்கிப் பிடிக்க, இயக்குனர் திரைக்கதையில் காட்டியிருக்கும் சிரத்தைக்கு மரியாதை செய்திருக்கிறது புவன் கவுடாவின் ஒளிப்பதிவு.

உஜ்வால் குல்கர்னியின் படத்தொகுப்பு ‘கேஜிஎஃப்’ப்பின் தூண் என்று தாரளமாகச் சொல்லலாம்.

இரண்டாம் பாகமும் அப்படியே.. சொல்லப்போனால், முதல் பாகத்தைவிட இதில் காட்சிகள் அரைகுறையாக உணரப்படாத அளவுக்கு முழுமையைத் தந்திருக்கிறது உஜ்வாலின் குழு.

அந்த உழைப்பு தான், இப்படத்தை திரும்ப திரும்ப பார்க்கச் செய்யவும் காரணமாயிருக்கிறது.

அன்பறிவ் அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகளில் கோரம் அதிகமென்றாலும், படத்தின் ‘ராவான’ தோற்றத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது. கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் பெரும் உழைப்பை விழுங்கியிருப்பது அசரடிக்கிறது.

படம் முழுக்க ரத்தம், வன்முறை, கோரம், அலறல் என்றிருப்பதால் குழந்தைகளோ, பெண்களோ கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அதேநேரத்தில் சாதாரண கமர்ஷியல் படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் தருவது ‘பூஸ்ட்’ எனர்ஜி!

மிக முக்கியமாக வருத்தத்திலும் எரிச்சலிலும் தோய்ந்திருக்கும் சாதாரண ரசிகன், ‘கேஜிஎஃப்’பின் நாயகனை தனது நிறைவேற இயலாத பிம்பமாக நோக்க முடியும்.

அதற்கேற்றவாறு அம்மா செண்டிமெண்ட், நாயக துதி, ஆக்‌ஷன் பில்டப் என்று பல அம்சங்கள் இதில் இருக்கின்றன.

உண்மையைச் சொன்னால், இயக்குனர் பிரசாந்த் நீல் இன்னொரு ஹீரோயிச படம் எடுத்தால் மாட்டிக்கொள்வார். அந்த அளவுக்கு, இதில் ’நாயக துதி’ ஷாட்கள் நிறைந்திருக்கிறது.

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து அமைச்சரை கொல்வது, பிரதமரிடம் சவால் விடுவது, ஒற்றை ஆளாக சிபிஐ அலுவலகத்தை தகர்ப்பது போன்றவை ‘அமெச்சூர்’தனமாக தெரிந்தாலும், அக்காட்சிகளைத் திரையில் பார்த்தவுடன் நம்மால் கிண்டலடிக்க முடிவதில்லை.

அதற்காக, அவற்றில் இருக்கும் லாஜிக் ஓட்டைகளை ’ஜஸ்ட் லைக் தட்’ கடந்து சென்றுவிட முடியாது. என்னதான் கமர்ஷியல் சினிமா என்றாலும் காதில் பூச்சுற்றுவதற்கு ஒரு அளவு வேண்டாமா?

அதிசயிக்க வைக்கும் உழைப்பு!

யாஷ், ஸ்ரீநிதி, அச்யுத் குமார், மாளவிகா அவினாஷ் உட்பட முதல் பாகத்தில் வந்தவர்களை தவிர சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ராவ் ரமேஷ், பிரகாஷ் ராஜ், ரவீணா டாண்டன், சஞ்சய் தத் என்று தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமான சிலரை இரண்டாம் பாகத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர்.

இவர்களையெல்லாம் தாண்டி நாயகனின் தாயாக வரும் அர்ச்சனா ஜோயிஸ் தான் நம் மனதில் நிற்கிறார்.

ஒட்டுமொத்த கதையின் அடிப்படையும் அவர் வரும் காட்சிகளில் மட்டுமே முழுமையுறுகிறது. அவர் இல்லாவிட்டால், இத்திரைப்படம் உயிரற்ற அழகான உடலாக இருந்திருக்கும்.

கலை இயக்கம், கிராபிக்ஸ் குழுவினரின் உழைப்பு, டிஐ கலரிங் என்று பல துறைகளில் கொட்டப்பட்டிருக்கும் அபார உழைப்புதான் ‘கேஜிஎஃப் 2’ஐ அதிசயிக்கத்தக்க படைப்பாக மாற்றியிருக்கிறது.

மணிரத்னம், ராம்கோபால் வர்மா போன்றவர்களுக்குப் பிறகு கமர்ஷியல் சினிமாவில் ட்ரெண்ட் செட்டர் ஆக மாறியிருக்கிறார் பிரசாந்த் நீல்.

இதே போன்ற பெரும் உழைப்பு கொண்ட படங்களே பிரமாண்டம் என்ற பதத்திற்கு பொருள் தரும் என்ற நிலையையும் உருவாக்கியிருக்கிறார்.

ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சரை மட்டுமே வில்லன்களாக காட்டி வந்த இந்தியத் திரையுலகில் பிரதமர் நாற்காலியையும் காட்டலாம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது ‘கேஜிஎஃப்2’.

எதிர்காலத்தில் இது அடுத்தகட்டத்திற்கு செல்லும்போது தணிக்கை வாரியம் என்ன செய்யும் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

இது போன்ற சில சர்ச்சைக்குரிய கேள்விகளை, சந்தேகங்களை, இன்றும் சுரங்கங்களில் அல்லல்படும் தொழிலாளர்கள் குறித்த வருத்தங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டால், இரண்டரை மணி நேரம் வைத்த கண் மாறாமல் திரையைப் பார்க்க ‘கியாரண்டி’ தருகிறது ’கேஜிஎஃப் 2’.

– உதய்.பா

Comments (0)
Add Comment