“மலர்களிலே அவள் மல்லிகை…” என்று ஆரம்பித்து, “மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை…” என்று நமது கவிஞர்களுக்கு மல்லிகைப்பூ மீது தணியாத காதல்!.
நமது மங்களகரமான நேரங்கள் மல்லிகைப்பூ உடன் இணைந்தே இருக்கின்றன.
வெள்ளையில் லேசான மஞ்சள் ஊடுருவிய நிறம், தனித்துவமான அந்த மணம். மல்லிகையின் ஈர்ப்புக்கு இதுதான் காரணம். மல்லிகை என்றதும் பலருக்கும் மதுரை ஞாபகத்திற்கு வரும். அந்த அளவுக்கு பிரபலம்.
மதுரை மல்லிகை. இதைக் ‘குண்டு மல்லிகை’ என்றும் கூறுவர். இதன் வாசம் வசீகரம் நிறைந்தது. மதுரையில் விளைந்தாலும் மல்லிகைக்குப் பிறப்பிடம் என்னவோ வறட்சி வாட்டும் ராமநாதபுரம் மாவட்டம் தான்!
உண்மை தான், இங்கு தங்கச்சி மடம், ராமேசுவரம், மண்டபம் என்று கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் தான் மல்லிகை நாற்றுகள் நடப்படுகின்றன.
கடற்பாங்காக இருந்தாலும் நல்ல தண்ணீரில் விளைந்து அந்த நாற்றுகள்தான் தமிழகம் முழுக்க, ஏன் வடகோடி இந்தியா வரை விநியோகம் ஆகின்றன. இந்த நாற்றுகளுக்கு இன்று ஏக டிமாண்ட்.
இங்கிருந்து சேலம், சங்கரன்கோவில், திருவண்ணாமலை, பம்பாய் வரை நாற்றுக்கள் போனாலும், மல்லிகை அதிகம் விளைவது மதுரையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் விருதுநகர் மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளிலுமே!.
மதுரை தெற்குத் தாலுகா, வடக்குத் தாலுகாவிலும் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி சேவல்பட்டியில் இருந்து மதுரை விமான நிலையம் வரை உள்ள பகுதிகளிலும் மல்லிகை பயிரிடுவது முக்கியமான விவசாயம்.
நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மல்லிகை விவசாயம் அதிகம்.
மதுரையை எடுத்துக் கொண்டால் அதைச் சுற்றி மல்லிகைப் பயிரிடுவது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில்.
பொதுவாக புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மல்லிகை நாற்றுகளை வாங்கி வந்து, பதியம் போட்டு விட்டால் போதும். அடுத்த ஆண்டிலிருந்து மல்லிகை அரும்ப ஆரம்பித்து விடுகிறது.
முதலில் ஒரு செடிக்கு, 40 நாட்களில் ஒரு கிலோ பூ வரை கிடைக்கிறது.
நான்கு ஆண்டுகளில் ஐந்தாறு மடங்காகி விடுகிறது. சராசரியாக 40 சென்ட் நிலத்தில் 400க்கும் மேற்பட்ட செடிகள் வளர்கிறபோது தொடர்ந்து வருமானம் கிடைக்கிறது.
மதுரை விமான நிலையத்திற்கு அருகில் பரம்பைப் பட்டியில் இருக்கும் விவசாயி சே.வீரண்ணன், 30 வருடங்களாக மல்லிகை பயிரிடுகிறார். சிக்கல்கள் இருந்தாலும் திருப்தியும் இருக்கிறது.
“உரம், பூச்சி மருந்துச் செலவுகள், களை எடுக்கிறது, பூப்பறிக்கிற கூலி எல்லாம் போனாலும் ஒரு ஏக்கருக்கு, மாதத்திற்கு 4 ஆயிரத்திலிருந்து 5000 ரூபாய் வரை கிடைக்கிறது.
வருஷத்தில் இரண்டு மாதம் பூ சீசன் இருக்காது. சில சமயம் பூச்சி வரும். வியாதிகளும் சேர்ந்து தாக்கினாலும் கூட, தினமும் கைக்கு ஓரளவு பணம் வந்து விடுகிறது” என்கிறார் வீரண்ணன்.
இவரைப் போன்று மதுரையைச் சுற்றிலும் 30 சென்டில் இருந்து இரண்டு ஏக்கர் வரை, மல்லிகை பயிரிட்டிருக்கிற விவசாயிகள் சுமார் 8000 பேர்.
மொட்டுவிட்டு இருக்கிற மல்லிகை அதிகாலையிலேயே பறிக்கப்பட்டு, மதுரை மல்லிகைப் பூ மார்க்கெட்டுக்கு ஈரச் சாக்குடன் வந்து விடுகிறது.
காலை 5 மணியில் இருந்தே சுறுசுறுப்பாகி விடுகிறது அந்த பசும்பொன் முத்துராமலிங்கம் நாளங்காடி.
விதவிதமான செவ்வந்தி, ரோஜா என்று பல மலர்களுடன் பெரும்பாலும் மல்லிகை மார்க்கெட் கஜகஜவென்று நெரிச்சலாக இருந்தாலும், மலர் மனத்துடன் இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் மல்லிகைக்கு ஒவ்வொரு விலை. வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து மொய்க்க, எடை போடப்பட்டு, மார்க்கெட்டை விட்டு வெளியேறித் திரும்பவும் பயணிக்கிறது மல்லிகை.
“நூற்றுக்கணக்கான வருஷங்களாக மதுரையைச் சுற்றிலும் மல்லிகை சாகுபடி நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோயிலை ஒட்டியுள்ள புது மண்டபத்தில் தான் மல்லிகைப் பூ வியாபாரமும் முன்னர் நடந்திருக்கிறது. பிறகு பூவுக்கென்று தனியாக மார்க்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
சேலம், திருவண்ணாமலை, சத்தியமங்கலம், நிலக்கோட்டை, சங்கரன்கோவில் என்று பல இடங்களில் மல்லிகைப் பூ மார்க்கெட் இருந்தாலும், அதிகமாக வருவது இந்த மார்க்கெட்டுக்கு தான்.
சீசன் நேரங்களில் சுமார் 8 டன் வரை பூ வருகிறது. இங்கிருந்து ராமநாதபுரம், கோவை, காரைக்குடி, தஞ்சாவூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி என்று தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளத்தின் பல பகுதிகளுக்கும் போகிறது. சில சமயம் பம்பாய், பெங்களூர் மார்க்கெட்டுக்கும் போகிறது.
“திருவிழாக்கள், முகூர்ந்தங்களின் போது மல்லிகைக்கு டிமாண்ட் கூடிவிடும். கேரள ஓணம் பண்டிகையின்போதும், பெங்களூரில் யுகாதிப் (வருடப் பிறப்பு) பண்டிகையின் போதும், சித்திரைத் திருவிழா போன்ற சந்தர்ப்பங்களிலும் மல்லிகைப் பூவென்று ‘ரேட்’ அதிகமாகிவிடும்.
சில சமயம் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கும் பூ கிராக்கியான சீசனில் கிலோ 200 ரூபாய் வரை போகும்” என்கிறார் மதுரை புஷ்ப வியாபாரிகள் கமிஷன் ஏஜெண்டுகள் சங்கத்தின் தலைவரான வைத்தியலிங்கம்.
மல்லிகைப் பூவுக்கும் விமானப் போக்குவரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. 1962 மதுரையில் விமான போக்குவரத்துத் துவங்கிய நேரம், டகோட்டா என்ற சிறிய ரக விமானம் அப்போது வந்துபோகும்.
மதுரை – சென்னை விமானக் கட்டணம் அப்போது 60 ரூபாய். பயணிகள் அதிகம் செல்லாத நிலை. சென்னையிலிருந்து ‘ஹிந்து’ பேப்பர் அந்த விமானம் மூலம் மதுரைக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது மதுரைப் பதிப்பு கிடையாது. மதுரையில் இருந்து திரும்பிச் செல்லும் விமானம் காலியாக செல்ல வேண்டிய நிலை.
அப்போது விமான நிலைய அதிகாரியாக இருந்த வெங்கட்ராமன், மல்லிகை மொத்த வியாபாரிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஒப்புதலாகி விமானம் மூலம் மல்லிகை போக ஆரம்பித்தது.
அன்று ஆரம்பித்த விமானத் தொடர்பு இன்றுவரை நீடிக்கிறது. வாரத்திற்கு மூன்று நாட்கள் மதுரையில் இருந்து காலை 9:30 மணிக்கு விமானம்.
காலையில் மதுரையில் ஏற்படுகிற மல்லிகை, 11 : 40-க்கு பம்பாயில் இறக்கப்பட்டு மதியத்திற்கு பம்பாய்க் கடைவீதியைச் சென்றடைந்து விடுகிறது. ஆர்டரின் பேரில் பினாங்கு, சிங்கப்பூர் வரை மதுரை மல்லிகை போயிருப்பது விசேஷம்.
“மதுரை மல்லிகைப் பூவை மலேசியா, சிங்கப்பூர் வரை அனுப்புகிறோம். வாரம் இருமுறை 150 கிலோ மல்லிகை இங்கிருந்து போகிறது. இங்கேயே சரமாகத் தொடுத்து, ‘ஸ்பிரே’ செய்து நன்றாகக் கட்டுக்கட்டி அனுப்புகிறோம்.
இனி, அரபு நாடுகளுக்கும் அனுப்ப இருக்கிறோம். இங்குள்ள மல்லிகைக்கு லண்டனிலிருந்து கூட ஆர்டர் வருகிறது.
மதுரையில் இருந்து தினசரி காலையில் மல்லிகைப்பூவை ஏற்றுகிற மாதிரி விமான வசதி இருந்தால், மதுரை மல்லிகை பூ வியாபாரம் இன்னும் நன்கு சிறக்கும்” என்கிறார் மதுரை ஜாஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான என்.ஜெகதீசன்.
மதுரை மல்லிகை எப்படிப் புகழ்பெற்றது?
“இதற்குக் காரணம் இதன் மனம். எல்லாம் இந்தப் பகுதி மண்வாகு தான்” என்கிறார் மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் நாளங்காடி புஷ்ப வியாபாரிகள் சங்கத்தின் செயலாளரான எஸ்.நாகரத்தினம்.
தொடர்ந்து சொன்னார் “மல்லிகைப் பூ சாகுபடிக்கு ஆதரமான நாற்றுகளை இப்போது தங்கச்சி மடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயிராக்குபவர்கள் தனிநபர்கள் தான்.
அரசின் வேளாண் துறையே தகுந்த முறையில் தயார் செய்து, நாற்றுகளை விற்றால் விலை குறையும்.
“ஏறத்தாழ் 10,000 பேர் வரை வந்து செல்லும் இந்த மார்க்கெட்டை புது இடத்துக்கு மாற்ற முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது மதுரை மாநகராட்சி.
மதுரை மாட்டுத்தாவணி என்கிற இடத்தை மாநகராட்சி குறிப்பிட்டது, மல்லிகை விவசாயிகள் பெரும்பாலும் விமான நிலையம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் அனைவரும் வந்து போக மதுரை, வில்லாபுரம் தான் வசதியாக இருக்கும். இதுவே பெரும்பாலானோரின் கோரிக்கை. இதில் அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.” என்கிறார் நாகரத்தினம்.
கிறங்க வைக்கிற மனத்துடன் இருக்கும் மல்லிகை வியாபாரத்திலும் பிரச்சினைகள் இல்லாமலில்லை. கிராக்கிக்கு ஏற்ப விலை ஏறி இறங்குகிறது.
அதிக அளவில் மல்லிகை பூ மார்க்கெட்டுக்கு வந்துவிட்டால், மிகக் குறைந்த விலைக்கு விற்க நேரிடுகிறது. சில வேளைகளில் வீணாகக் கொட்டப்படுவது உண்டு.
மார்க்கெட்டிலேயே காலையில் போனால் ஒரு விலை, மதியம் போனால் இறங்கின நிலையில் இன்னொரு விலை. மாலைக்குள் வாடி விட்டால் மல்லிகையின் மவுசு போய்விடும் என்பதால், வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள்.
இதை மாற்ற மல்லிகைப் பூவை வாடாமல் ஒரிருநாள் சேமிக்க ‘ஏர்கண்டிஷன்’ வசதி கொண்ட பெரிய ‘ஸ்டோரேஜ்’ அறை ஒன்றை அரசு அமைத்துக் கொடுத்தால், மல்லிகைப் பூ வியாபாரத்திற்கு மிகவும் உதவும் என்கின்றனர் வியாபாரிகள்.
அடுத்து இன்னொரு விஷயம் மல்லிகைப்பூ வரத்தும், சாகுபடியும் மதுரை மாவட்டத்தில் அதிகமாய் இருந்தாலும், மல்லிகைப் பூவில் செண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எதுவும் இந்த மாவட்டத்தில் இல்லை.
கோவை மாவட்டத்தில் தான் இந்தக் கம்பெனிகள் அதிகம் இருக்கின்றன. இத்தனைக்கும் மதுரை மார்க்கெட்டில் இருந்து தான் இக்கம்பெனிகளுக்கு மல்லிகைப் பூ போய்க் கொண்டிருக்கிறது.
மதுரை மாவட்டத்திலேயே மல்லிகை செண்ட் தொழிற்சாலை உருவாக அரசு உதவினால், மல்லிகை வீணாவது தடுக்கப்படும் என்பது இத்தொழில் உள்ள பலரின் கருத்து.
மல்லிகைப் பூ விவசாயத்தில் இருந்து வியாபாரம் வரை எத்தனை அடுக்குகள்?
மல்லிகைப் பூ பயிரிடும் விவசாயிகள், மதுரையைச் சுற்றி மட்டும் 10,000 பேர். மொத்த வியாபாரிகள் நூற்றுக்கணக்கில். சிறு வியாபாரிகள் ஆணும் பெண்ணுமாய் ஆயிரம் பேர்.
மல்லிகைப் பூவைத் தொடுத்துச் சரமாகப் பின்னுபவர்கள் சுமார் 300 பேர் என்றும் மல்லிகையை நம்பி பல்லாயிரம் பேர்.
மதுரை மார்க்கெட்டில் நாளொன்றுக்குச் சராசரியாக 50 ஆயிரம் ரூபாய்க்கு மல்லிகை வியாபாரம் நடக்கிறது.
மாதத்திற்கு சுமார் 15 லட்சம் ரூபாய் வருஷத்திற்கு ஒரு கோடி ரூபாயைத் தாண்டுகிறது.
இப்படி ஒரு பரந்த பின்னணி இருப்பதால்தான் திருமணத்திற்குப் பூ கரெக்டாக ஆஜராகி விடுகிறது.
கையில் பாலும், தலையில் மல்லிகைப் பூவுமாக மணப்பெண் வெட்கப்பட முடிகிறது. சுவாமி சன்னதியில் பூ இடம்பிடித்து விட முடிகிறது. மல்லிகைப் பூவின் மலர்ச்சிக்குப் பின்னால் எவ்வளவு விஷயங்கள்!
– மணாவின் ‘தமிழகத் தொழில் முகங்கள்’ (முதற்பதிப்பு-1996) நூலிலிருந்து…!