கொதித்து மேலெழும் குற்றவுணர்ச்சி!

‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற நக்கீரர் சொன்ன ஒற்றை வரியில் அறத்தின் சீற்றம் அடங்கியிருக்கும். அதனைப் புறந்தள்ளும்போது பாதிக்கப்பட்டவர்களின் உள்ளத்தில் பற்றும் நெருப்பு பெருந்தீயாகிப் பாதிப்பைத் தந்தவரையே பொசுக்கவல்லது என்று உரைக்கும்.

இக்கருத்தை மையமாகக் கொண்டு, குற்றவுணர்ச்சி மனதில் சுனாமியாய் எழுந்தால் என்னவாகும் என்று சொல்கிறது சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குற்றம் குற்றமே’ திரைப்படம்.

ஜெய், பாரதிராஜா, ஹரீஷ் உத்தமன், ஸ்மிருதி வெங்கட், திவ்யா துரைசாமி, அருள்தாஸ், மதுரை முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ஏப்ரல் 14 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் வெளியானது.

கலைத்து போடப்பட்ட காட்சிகள்!

ஆற்று நீரில் இருந்து வெளியே இழுக்கப்பட்ட ஒரு பள்ளிச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது; பின்னணியில் அவரது தாயின் கதறல் கேட்கிறது.

பள்ளிக்குச் செல்லும் இன்னொரு சிறுமி சைக்கிளில் ஏறி வீட்டைக் கடந்து செல்ல, சாலையில் செல்லும் ஒரு காரில் அடிபட்டு துடிதுடிக்கிறாள்.

கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இவ்விரு சம்பவங்களும் நிகழ, ஓராண்டுக்கு முன் ஈஸ்வரின் (ஜெய்) மனைவி கோகிலா (திவ்யா துரைசாமி) சடலமாக கிடப்பதில் இருந்து கதை தொடங்குகிறது.

ஈஸ்வரின் சகோதரி மகள் பிரியா (ஸ்மிருதி வெங்கட்) அவரைத் திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார். இதனை அறியாமல், கோகிலாவை கல்யாணம் செய்துகொள்கிறார் ஈஸ்வரன்.

வந்த நாள் முதல் பிரியாவுக்கும் கோகிலாவுக்கும் எப்போதும் சண்டை என்ற நிலை தொடர, ஈஸ்வரன் மனம் நொந்து போகிறார்.

நெருங்கிய உறவுக்குள் நடந்த திருமணம் என்பதால், கோகிலாவின் பெற்றோரால் ஈஸ்வரனிடம் கடுமையாகப் பேச முடிவதில்லை. குழந்தை பிறப்புக்கும் கூட, தங்கள் மகளை வீட்டுக்கு அழைத்துப் போக அவர்களால் முடிவதில்லை.

இந்த சூழலில், கோகிலா தந்த நச்சு உணவால் அவரது குழந்தை இறந்து போகிறது. அந்த வருத்தம் பெரும் குற்றவுணர்வாக மாற, மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் கோகிலா.

அப்போது, ‘சித்ராவின் மரணத்திற்கும் குழந்தையின் இறப்புக்கும் தானே காரணம். நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்’ என்று அவர் ஈஸ்வரனிடம் புலம்ப, ஆத்திரமடையும் ஈஸ்வரன் அவரை அடித்துவிடுகிறார்.

இச்சம்பவம் நடந்த சில நாட்களில் கோகிலாவின் மரணம் நிகழ்கிறது. ஈஸ்வரன் தான் அவரைக் கொன்றிருப்பார் என்று நம்புகிறார் கோகிலாவின் தாய்மாமன் நாட்ராயன் (ஹரிஷ் உத்தமன்).

கோகிலா தற்கொலை செய்தாரா அல்லது கொல்லப்பட்டாரா? கொலை என்றால் அதனைச் செய்தது யார்? கலைத்து போடப்பட்ட இக்கதைக்குள் மறைந்திருப்பது என்ன என்ற நோக்குடன் திரைக்கதை அங்குமிங்கும் உண்மையை தேடியலைகிறது.

மிகச்சிறிய சிறுகதையொன்றை எடுத்துக்கொண்டு, அதற்கு திரைக்கதை வடிவம் தந்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். கலைத்து போடப்பட்ட காட்சிகள் மூலமாக கதை சொல்லி, இறுதிவரை நம்மை நகம் கடிக்க வைப்பது அவருக்கு நன்றாகவே கை வந்திருக்கிறது.

குற்றத்தின் கண்!

இப்படியொரு கதையில் ஒரு பாத்திரமாக மட்டும் நடிக்க நிறைய தைரியம் வேண்டும். அது, ஜெய்யிடம் நிறையவே இருக்கிறது. போலவே, ஈஸ்வரன் எனும் கதாபாத்திரத்தையும் பாந்தமாக ஏற்று நடித்திருக்கிறார்.

குறைவான மேக்கப்புடன் பாவாடை சட்டையில் வரும் ஸ்மிருதி வெங்கட்டும், கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாளோ என்ற பயத்திலேயே வாழும் மனைவியாக கொஞ்சம் அதீத மேக்கப்புடன் வரும் திவ்யா துரைசாமியும் எளிதில் கதைக்குள் பொருந்தி விடுகின்றனர்.

இவர்கள் தவிர ஓய்வு பெற்ற காவல் துறை விசாரணை அதிகாரியாக வரும் பாரதிராஜா, கவுன்சிலராக வரும் அருள்தாஸ், கோகிலாவின் பெற்றோராக வருபவர்கள், ஈஸ்வரனின் உறவினர்கள், மதுரை முத்து ஆகியோர் மிக இயல்பாகத் திரையில் தோன்றியிருக்கின்றனர்.

இக்கதையில் மொத்த பாரமும் ஹரிஷ் உத்தமன் தோள்களில் ஏறியிருக்கிறது. ட்ரெய்லர் உருவாக்கிய எதிர்பார்ப்புக்கு மாறாக அப்பாத்திரம் அமைந்திருப்பதுடன், அதற்கேற்ற நடிப்பை அவரும் தந்திருப்பது ஆச்சர்யமூட்டுகிறது.

வேல்ராஜின் ஒளிப்பதிவு இயல்பை வெளிப்படுத்துவத்துடன் மலைநாட்டின் இண்டு இடுக்குகளிலும் புகுந்து புறப்பட்டிருப்பது குறைவான பட்ஜெட்டில் நிறைவான காட்சியமைப்பைப் பெறலாம் எனும் நம்பிக்கையைத் தருகிறது.

லாஜிக் மீறல்கள் நிறைய இருக்கின்றனவோ எனும் சந்தேகங்களை உருவாக்கி, அவை இரண்டாவது பார்வையில் தென்படாது எனும் அளவுக்கு நுணுக்கமாக காட்சிகளை கோர்த்திருக்கிறது மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு.

‘மாமன் மகளே’ எனும் துள்ளல் பாடலோடு நின்றுவிடாமல், திரைக்கதையில் தொடரும் சஸ்பென்சை இறுதிவரை கடத்த துணை நின்றிருக்கிறது அஜீஷின் பின்னணி இசை.

படம் நிறைவுறும்போது ’அறம் நின்று கொல்லும்’ என்ற சேதி பார்வையாளர்களுக்கு கிடைக்கிறது. அதனைச் சொல்ல, வகையாக ‘குற்றத்தின் கண்’ தேடும் திரைக்கதையைப் படைத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

பிளாஷ்பேக்கில் காமெடி காட்சி இடம்பெறுவது உட்பட சில லாஜிக் மீறல்கள் மனதில் மேலெழுந்தாலும், கதையும் பாத்திரங்களும் அவற்றின் இடையே ஊடாடும் முரண்பட்ட உணர்வுகளும் அதற்கான பதிலை வாகாக தந்துவிடுவது சிறப்பு.

அறத்தின் சீற்றம்!

ஆத்திரத்தின் விளைவுகள் அபத்தங்களாகத்தான் இருக்குமென்பதைச் சொல்லும் விதமாக மிக இயல்பாக அமைந்திருக்கிறது பாஸ்கர் சக்தியின் வசனங்கள்.

போலவே, ‘நான் உண்மையைச் சொன்னா பல பேரு தண்டிக்கப்படுவாங்க, மறைச்சா சம்பந்தப்பட்டவன் மட்டும்தான் தண்டிக்கப்படுவான்’ என்று ஜெய் சொல்லும் வசனம் அவல நகைச்சுவையாகத் தெரிந்தாலும், அது கதையுடன் 100% பொருந்திப்போவது அருமை.

அறச்சீற்றம் என்பது இயல்புக்கு மாறானது எனும் எண்ணத்தை தற்கால வேகயுக வாழ்க்கை கற்பித்திருக்கிறது.

ஆனாலும், குற்றவுணர்ச்சி குடி கொண்ட மனதை எந்த மருந்தும் குணப்படுத்தாது என்பது மறுக்க முடியாத உண்மை.

சில நேரங்களில் கொதித்து மேலெழும் குற்றவுணர்வை நம்மால் எதைக்கொண்டும் அடக்க முடியாது.

அதனாலேயே, அறம் அல்லாத செயல்களுக்குத் தக்க பாடம் கிடைத்தே தீரும் என்பதனை எத்தனையோ சாதாரண மனிதர்கள் இன்றும் நம்புகின்றனர். அந்த உண்மையை ஏற்க இயலாதவர்களுக்கு இத்திரைப்படம் கண்டிப்பாக போரடிக்கும்; மற்றவர்களுக்கு இப்படம் ரொம்பவும் பிடிக்கும்..!

இயக்குனர் சுசீந்திரனிடம் இருந்து எதிர்பார்ப்பது இது போன்ற அசாதாரணமான கருத்துகளையும் காட்சியனுபவங்களையும் தான்..!

-உதய் பாடகலிங்கம்

15.04.2022 10 : 50 A.M

Comments (0)
Add Comment