ஸ்ரீநகரில் மீண்டும் துளிர்த்த துலிப் மலர்கள்!

ஜம்மு காஷ்மீர் என்றாலே நினைவுக்கு வருவது ரோஜா, குங்குமப்பூ, ஏரி மற்றும் துலிப் மலர்கள் தோட்டம். கொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருந்த சுற்றுலா மெல்ல வளர்ச்சியைக் காணத் தொடங்கியுள்ளது.

ஸ்ரீநகரில் பயிரிடப்பட்டுள்ள துலிப் மலர்களைக் காண கண் கோடி வேண்டும். அந்த அற்புதக் காட்சியை 19 நாள்களில் 3.11 லட்சம் மக்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இந்த தோட்டம் தொடங்கப்பட்ட 2007 முதல் இப்படியொரு மக்கள் அலையைப் பார்க்கவில்லை.

செய்தியாளர்களிடம் பேசிய தோட்டக்கலைத்துறை அதிகாரி இனாம் உல் ரஹ்மான், சென்ற ஞாயிறு வரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளதாக தகவல் தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்த பிறகு, கடந்த ஆண்டு துலிப் தோட்டத்திற்கு 2.25 லட்சம் மக்கள் மட்டும் வந்திருந்தனர்.

2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக தோட்டத்தைரப் பார்வையிட மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

இங்கு 68 வகையான 1.5 மில்லியன் துலிப் மலர்கள் இருக்கின்றன. இந்தத் தோட்டம் ஜெபர்வான் மலையின் அடிவாரத்தில் 30 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இதுவொரு தனித்துவமான சுற்றுலா அனுபவம் என்று நெகிழ்கிறார் பயணி ஒருவர்.

“இப்போதுதான் நான் முதன்முதலாக இந்த தோட்டத்திற்கு வருகிறேன். இதுமாதிரியான அழகான ஓர் இடத்தை காஷ்மீரில் வேறெங்கும் காணமுடியாது. இது பூமியில் ஒரு சொர்க்கம்” என்று மகிழ்ந்து பேசுகிறார்கள் பயணிகள்.

கோடைக்காலத்தில் துலிப் தோட்டத்தை துளிர்க்க வைக்கும் பணியில் 100 தோட்டக்காரர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

துலிப் மலர்கள் வளர்வதற்கு சாதாரண பருவநிலையே போதும் என்கிறார் ஒரு தோட்டக்காரர்.

பருவநிலை மாறினால், நாங்கள் கூடுதல் அக்கறையுடன் செடிகளைப் பராமரிப்போம். இரவில் மட்டுமே நீர் பாய்ச்சுவோம் என்கிறார்.

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment