பாமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கருத்துகளை சொன்ன ஒரே கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று!
1930 ஏப்ரல் 13-ம் ஆண்டு தேதி பிறந்த அவர் 29 வருடங்களே இப்பூமியில் வாழ்ந்தவர். ஆனால் இந்த பூமி உள்ள மட்டும் அழியா பாடல்கள் தந்தவர்.!
மகாகவி பாரதியாருக்குப் பிறகு, சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர்.
சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி, சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். அவற்றில் “சின்னப்பயலே… சின்னப்பயலே சேதி கேளடா”, “திருடாதே பாப்பா… திருடாதே”, “தூங்காதே தம்பி… தூங்காதே” போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை. பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி, அரசு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.
இவரையும் இவரது பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை தேடிக்கொள்வோம்.
அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும் நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள் மகத்துவமானதாக மாற்றலாம்.
நன்றி : தோழர் ஜெயராமன்