சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், தமிழ் மற்றும் மலையாளப் புத்தாண்டு தினங்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி, இரு பண்டிகைகளையும் பாரம்பரிய முறைப்படி ஒன்றாக இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழகத்திலேயே இப்படி ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறையாகும். இக்கல்லூரியில் பயிலும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இன ஒற்றுமையை வலியுறுத்தி அண்மையில், தமிழக முதல்வர் கேரளாவிற்குச் சென்று மலையாளத்தில் பேசி அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தார். இந்நிகழ்வால் ஈர்க்கப்பட்ட டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி கல்லூரி மாணவிகள், கூட்டுக் கொண்டாட்டத்திற்கு கல்லூரி வளாகத்தில், இன்று (13 ஏப்ரல் 2022) ஏற்பாடு செய்திருந்தனர்.
ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டான சித்திரை மாதப் பிறப்பும், ஏப்ரல் 15-ஆம் தேதி ‘விஷூ’ என்று அழைக்கப்படும் மலையாளப் புத்தாண்டான மேடம் (MEDAM) மாதப் பிறப்பும் தொடங்குகிறது.
இதனையொட்டி இக்கல்லூரியில் பயிலும் தமிழ் மற்றும் மலையாள மாணவிகள் தங்களது பாரம்பரிய வழக்கப்படி பட்டுப் புடவை – தாவணி மற்றும் கேரள கசவு (KASAVU) சேலை போன்ற உடைகளை அணிந்து வண்ணமயமாக வருகை புரிந்தனர்.
இந்நிகழ்வின் போது, தமிழர் பாரம்பரியக் கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் மலையாள திருவாதிரைக் களி நடனங்கள் நடைபெற்றன.
கல்லூரி வளாகத்தில் தரையில், வண்ண வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட – கேரளத்தின் முக்கிய அம்சமான பூக்களமும் இடம்பெற்றிருந்தது.
இக்கல்லூரியில் படிக்கும் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவிகள், கதரில் நெய்யப்பட்ட கண்டாங்கி சேலையை உடுத்தி அழகுற பவனி வந்தனர்.
இரு மாநிலங்களுக்கும் இடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, அதை எல்லாம் மறந்து நேசத்தோடும், பாசத்தோடும் அன்பை வெளிப்படுத்தி, மனித உறவுகள் புனிதமானவை என்பதை மாணவிகள் புலப்படுத்தினர்.
இந்நிகழ்வு குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் மகிழ்ச்சியோடு பேசினார்.
“எல்லா இனங்களிலும் புத்தாண்டு என்பது, ஒரு சிறப்பான நிகழ்வாகும். ஒவ்வொரு முறையும் புதிய ஆண்டு தொடங்கும் போது நம்முடைய வாழ்க்கை மேம்படும் என்ற உற்சாகம் மக்கள் மனதில் கரை புரண்டு ஓடும்.
தமிழ் மற்றும் மலையாளப் புத்தாண்டுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஒற்றுமையை வலியுறுத்தி இந்தப் புத்தாண்டை மாணவிகள் கொண்டாடியதன் மூலம் இந்த சந்தோஷம் என்றும் அவர்களது மனதில் நிலைத்து நிற்கும். மாற்று இன மனிதர்களையும் நேசிக்க வைக்கும்.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே நமது நாட்டினுடைய தாரக மந்திரம்.
அதையொட்டியே இந்தக் கொண்டாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது” என்று நெகிழ்ச்சியோடு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.