குற்றவாளிகள் இனி தப்ப முடியாது!

குற்றவாளிகளின் அடையாளங்களைப் பதிவு செய்வது தொடர்பான குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

‘நவீன கால குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யவும், இந்தப் புதிய சட்டம் அவசியம்’ என மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தற்போது நடந்து வரும் புதிய தலைமுறை குற்றங்களைத் தடுக்க, அதிநவீன தொழில்நுட்பங்களும் சட்ட விதிமுறைகளும் அவசியம். அந்த அடிப்படையில் தான், புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சிகளை உட்புகுத்தி விசாரணை நடைமுறையை வலுப்படுத்துவதும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதத்தை அதிகரிப்பதும் தான், குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவின் நோக்கம்.

தற்போதைய சூழலில், கொலை வழக்குகளில், 100-க்கு 66 பேரும், கொள்ளை வழக்குகளில், 100-க்கு 70 பேரும் ஆதாரம் இன்றி விடுவிக்கப்படுகின்றனர்.

புதிய சட்டத்தின் வாயிலாக, குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுவோரின் சதவீதம் அதிகரிக்கும்.

இந்த சட்டமானது, குற்றவாளிகளைக் காட்டிலும், இரண்டு படிகள் போலீசார் முன்னணியில் இருப்பதற்கு வாய்ப்பாக அமையும். குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கே, இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில், மிகவும் கடுமையான அடையாளச் சட்டங்கள் அமலில் இருக்கின்றன. எனவே தான், அந்த நாடுகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் அதிகமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment