உடன்பிறப்புகள் வாய்ப்பது உன்னதம்!

ஏப்ரல் 10 – உடன்பிறந்தோர் தினம்

ஒருவர்க்கு சகோதரரோ அல்லது சகோதரியோ இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், இந்திய சமூகத்தில் ஒரேயொரு பிள்ளை பெற்றுக்கொள்வதென்பது மிகவும் அரிது.

குறைந்தபட்சம் இரண்டு முதல் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வழக்கமே பெரும்பாலும் உண்டு.

நகரமயமாக்கலின் விளைவால் அந்த வழக்கம் குறைந்து போனாலும், இப்போதும் ‘ஒத்த பிள்ளைன்னா தனியா இருந்து கஷ்டப்படும்’ என்று சொல்லி இரண்டாவதாக இன்னொரு குழந்தைக்குத் தயாராகும் வழக்கம் இருந்து வருகிறது.

இதன் பின்னிருப்பது, உடன்பிறந்தோர் இருந்தால் ஒருவரது மனோதிடம் பெருகும் என்ற நம்பிக்கையே..!

குருவும் தோழமையுமாய்..!

பெற்றோர், ஆசிரியர், சுற்றம் என்று மனிதர்களைப் பார்த்து எத்தனையோ கற்றுக் கொள்ளும் ஒரு குழந்தை.

நட்பு இம்மூன்றுக்கும் நடுவில் பிரதான இடம் வகிக்கிறது. காரணம், ஒரே வயதையொத்த அல்லது ஒரேமாதிரியான தன்மை கொண்ட அல்லது ஒரு பிணைப்புக்கு உட்படுகிற ஈர்ப்பு கொண்டோரின் கரங்களை கோர்க்க வைக்கும் வல்லமை அதற்கு உண்டு.

உண்மையைச் சொன்னால் பெற்றோராகவும் ஆசிரியராகவும் தோள் தரும் தோழமையாகவும் இருப்பது உடன்பிறந்தோர் தான்.

சகோதரனாகட்டும், சகோதரியாகட்டும், அவர்களைப் பார்த்து நாம் நிறைய கற்றிருப்போம் அல்லது நம்மைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொண்டிருப்பார்கள்.

நடப்பது, ஓடுவது, பேசுவது, கல்வி கற்பது, பிறரோடு பழகுவது, தன்னை முன்னிறுத்திக் கொள்வது தொடங்கி தலைமையிடத்தை அடைவது வரை பல விஷயங்களைக் கற்றுத் தருவது உடன்பிறந்தோர்கள் தான்.

’அவர்கள் இல்லையென்றால்..’ என்ற எண்ணத்தைச் சுழலவிட்டால் கிடைக்கும் வித்தியாசங்களே அந்த உண்மையைப் பலப்படுத்தும். ஒவ்வொருவரது அனுபவங்களும் தனித்தன்மை கொண்டதாக இருக்கும்.

’நான் திண்ணைய பிடிச்சு நடந்தப்போ, என்னையப் பிடிச்சு நடந்த பய நீ’ என்ற சொலவடை தென்மாவட்டங்களில் பிரபலம்.

கேலி கிண்டலுக்காகச் சில கெட்டவார்த்தைகளுடன் இது மொழியப்பட்டாலும், ஒருவீட்டில் வளரும் பல குழந்தைகள் ஒன்றையொன்று பார்த்து கற்றுக்கொள்ளும் என்பது இதிலிருந்து விளங்கும்.

ஒரே நேரத்தில் ஆசிரியராகவும் தோழமையாகவும் இருக்கவல்லவர்கள் உடன்பிறப்புகளே..!

தாங்கும் அரண்!

அரண் போல காத்து நிற்பது என்று சொல்லும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆபத்தில் இருந்து காப்பது என்பதே அதன் பொருள். சில நேரங்களில் நமக்கு இடர்கள் நேரும்போது நம்மை காப்பது உடன்பிறந்தோர்களே..!

பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்ட சூழலில், இச்சொல் கேலிக்குரியதாக கருதப்படலாம். ஆனால், இளமைக்காலம் தொட்டு இன்றுவரை உடன்பிறந்தோர் இல்லாத வாழ்வை ஒருவர் நினைத்துப் பார்த்தால் அந்த அருமை பிடிபடும்.

ஒரு பிரச்சனை என்று வரும்போது சகோதர, சகோதரிகளின் குடும்பங்கள் துணை நிற்கும் என்பது திரைப்படங்களில் சொல்லப்படும் கற்பனையல்ல; ஒருகாலத்தில் நம் முன்னோர்களின் வாழ்வில் பொதிந்திருந்த வழக்கமது.

உடப்பொறந்தா, உடப்பொறந்தவன் என்ற சொல்லாடலை சில வட்டார வழக்குகளில் காணலாம். ஒருவரது வாழ்வின் உயர்விலும் தாழ்விலும் அவர்கள் கண்டிப்பாக உடன் நிற்பார்கள் என்பதே இச்சொல்லாடல்கள் இடம்பெறும் உரையாடல்களில் காண முடியும்.

வெறுமனே வீரம் சார்ந்து, செல்வம் சார்ந்து உதவிக்கு வருவது என்றில்லை, ஒருவர் மனக்கஷ்டத்தில் இருக்கும்போதும் இவர்களது ஆதரவுக்கரங்கள் நீளும். ’நாங்க இருக்கோம்ல’ என்ற சத்தமே மனமொடிந்தவரின் கைகளை மேலிழுக்கும்.

சிறு வயதிலும் கூட, நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் சொல்லும் பல விஷயங்களை நாம் உடன்பிறந்தவர்களிடமும் பகிர்ந்திருப்போம். சகோதரன் – சகோதரி அல்லது சகோதரிகளுக்கிடையே இது அதிகமாக இருக்கும்.

சகோதரர்கள் இடையே முரண்கள் இருந்தாலும், ஆபத்துக் காலத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்கும் வழக்கம் இருந்திருக்காது.

அதாவது, என்னதான் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அந்த பாசம் அவர்களை ஒன்றிணைக்கும். உண்மையைச் சொன்னால், சிறுவயதில் தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்ளும் சகோதர சகோதரிகள் பிற்காலத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள் என்பது உளவியல்பூர்வமாக நிரூபணமான விஷயம்.

இன்றுவரை திரைப்படங்கள் பலவற்றில் இதனைப் பிரதான அம்சமாக இடம்பெறச் செய்வதுவே இது எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்று விளக்கும்.

சமூக முன்னேற்றத்தின் அடிப்படை!

கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, ரசனை, எதிர்பாலின ஈர்ப்பு, சமூக முன்னேற்றம் என்று பலவற்றில் நமக்குத் துணையாகவும் வழியாகவும் இருப்பது உடன்பிறப்புகளே!

மிக முக்கியமாக, பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம் என்ற சூழலில் மூத்த சகோதர, சகோதரியின் வழிகாட்டுதல்கள் பின்னவர்களின் வாழ்வைப் பலப்படுத்துவதாக இருக்கும். அதுவே, பின்னாளைய வாழ்வையும் தீர்மானிப்பதாக மாறும்.

ஒரே வீட்டில் பிறந்தவர்கள் வெவ்வேறு பொருளாதார, சமூகப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், அரசியல் ரீதியில் வேறுபட்டிருந்தாலும், வெவ்வேறு திசைகளில் வாழ்ந்தாலும்,

ஒருவரையொருவர் சந்திப்பது அரிதாகிப் போனாலும், அவர்கள் மீண்டும் சந்திக்கும்போது பால்யத்தில் அழுத்தமாகப் பதிந்த பொதுப்புள்ளியில் இருந்துதான் அவர்களது அன்பின் ஊற்று திறக்கும். மடையாகக் கொட்டும்.

பெரிதாக குடும்பச் சொத்தை எதிர்பார்க்காமல், தங்களது வாழ்வை தாங்களே கட்டமைத்துக் கொண்ட சகோதர சகோதரிகளிடையே இத்தகைய காட்சியைக் காணலாம்.

அவ்வாறு தங்களைத் தாங்களே கட்டமைப்பதற்கான ஆதாரமாகவும் உடன்பிறந்தவர்களே இருந்திருப்பார்கள். ஒரு மனிதரது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல் சமூக முன்னேற்றத்திற்கும் அவர்களே பாதை வகுத்திருப்பார்கள்.

பிசகாக, சில இடங்களில் சொத்து சார்ந்தோ அல்லது வளர்ச்சி சார்ந்தோ உடன்பிறப்புகளிடையே பூசல்கள் நிலவலாம், பொறாமைகள் பிறக்கலாம்.

அதற்கும் காரணம், கடந்த காலத்தின் ஏதோ ஒரு தருணத்தில் நிகழ்ந்த விலகலையோ அல்லது புரிதலின்மையையோ பொருட்படுத்தாமல் இருந்ததாக இருக்கும்.

எல்லா உறவுகளையும் போலவே உடன் பிறந்தவர்களை நினைக்கவும் மகிழவும் உதவுகிறது ஏப்ரல் 10 அன்று கொண்டாடப்படும் ‘உடன்பிறந்தோர் தினம்’.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருக்கும் இவ்வழக்கம் இந்தியாவையும் பற்றியிருக்கிறது. ரக்‌ஷா பந்தன் போன்ற வடநாட்டு பண்டிகைகள் அந்நியமாகிப் போன தென்னாட்டவர்க்கு இதுவும் கூட நகைப்பை வரவழைக்கும்.

ஆனாலும், உடன்பிறந்தவர்களைக் கொண்டாட வேண்டுமென்பதில் மட்டும் எவர்க்கும் அபிப்ராய பேதம் இருக்க முடியாது.

சகோதர, சகோதரிகளிடையே குறைவுறாமல் நிறைந்திருக்கும் அன்பு பிறப்பு முதல் இறப்பு வரையிலான வழித்துணை. அபரிமிதமான நம்பிக்கையின் ஆதி ஊற்று. வாழ்வின் நிறைவுக்கும் திருப்திக்குமான உந்துவிசை.

அதனை முழுமையாகப் பெற்றவர்க்கு ஏற்றமும் இறக்கமுமான வாழ்க்கை சிகரம் நோக்கும் செங்குத்துக்கோடுதான்..!

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment