சில நாட்களுக்கு முன், பிரபல எழுத்தாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் எழுதிய பதிவு, படித்தோரை கலங்க வைத்தது.
அதில் அவர், “பலரும் போராடி பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத்தந்தார்கள். சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். இது சரிதான்.
ஆனால், இந்த உரிமை மற்றும் சட்டங்களைத் தவறாக பயன்படுத்தி ஆண்களை கொடுமைப்படுத்தும் பெண்களும் பரவலாக இருக்கிறார்கள்.
உதாரணமாக, என்னைவிட்டு என் மனைவி பிரிந்துவிட்டார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், என் குழந்தையை என்னிடமிருந்து பிரித்துவிட்டார். தவிர நான் கொடூரனாக ‘இருந்ததாக’வும் சொல்லி வளர்க்கிறார். நான் இறந்துவிட்டதாக சொல்லி வளர்க்கிறார்.
பெண்களுக்கு துன்பம் என்றால் அனைவரும் ஓடி வருகிறார்கள். ஆனால் ஆணின் சங்கை அறுத்து, ஒரு பெண் ரத்தம் குடித்தால் சமூகம் கண்டுகொள்வதில்லை”
என்று தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர்.
“ஆண்களை கொடுமைப்படுத்தும் பெண்களும் இருக்கிறார்களா?” என்கிற ஆச்சரியமான கேள்வி நமக்குள் எழும்.
“அப்படி(யும்) நடக்கிறது” என்றே பல சம்பவங்கள் சொல்கின்றன.
இரு நாட்களுக்கு முன் வெளியான செய்தி…
கோவை பொள்ளாச்சி நல்லூத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ரோகிணி. இவர், தனது 16 வயது தங்கையை கணவர், பாண்டியன் அச்சுறுத்தி மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கணவனை மிரட்டவே (பொய்) புகார் அளித்ததாக மனைவியும் ஒப்புக்கொண்டார். கணவன் மீது மட்டுமல்ல.. ‘கணவனாக ஆக இருந்தவர்’ பாதிக்கப்பட்ட சம்பவமும் உண்டு.
சென்னையைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுக்கும் காதல். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதற்கிடையே, நிலப்பிரச்சனை காரணமாக இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பெண்ணின் தாயார், தனது மகளை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் செய்தார்.
இதையடுத்து சந்தோஷ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
வழக்கு விசாரணையின் முடிவில், புகார் அளித்த பெண்ணை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை தெரியவந்தது.
இதற்குள் ஆறு வருடங்கள் ஓடிவிட்டன.
“சிறைத் தண்டனை, படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல், மன உளைச்சல், அலைச்சல், வழக்குச் செலவு என பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
பொறியாளராக பணியாற்ற வேண்டிய நான் தற்போது அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறேன். என் மீது பொய்ப் புகார் கொடுத்து வாழ்க்கையைப் பாழாக்கிய அந்தப் பெண், 30 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும்” என்று வழக்கு தொடுத்தார் சந்தோஷ்.
நீதிமன்றம், அவருக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பொய்ப் புகார் அளித்த பெண்ணுக்கு உத்தரவிட்டது.
“இப்படி பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு பிறகு நிவாரணம் கிடைப்பது அரிதான விஷயம். ஏனென்றால், பெண்களின் வன்கொடுமையை ஆண்கள் பலர் வெளியில் சொல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்கிறார் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர், வழக்கறிஞர் அருள் துமிலன்.
“வன்கொடுமை என்று மட்டுமல்ல… கொலை மிரட்டல் விடுவது, தாக்குவது என – பொய்ப் புகார் கொடுத்து ஆண்களை சிக்கலுக்கு உள்ளாக்கும் பெண்கள், குறிப்பாக மனைவியர் இருக்கவே செய்கிறார்கள்” என்கிறார் இவர்.
அடுத்து இவர் சொல்லும் தகவல் திகிலூட்டுகிறது.
“இதுபோன்ற பிரச்சனைகளால் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சில ஆயிரம் ஆண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் தங்கள் மனைவியின் கொடுமையால் இந்த முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால் வறுமை, வேலையின்மை, உடல் உபாதை, கடன் போன்ற பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டதாக முடிக்கப்படுகின்றன.
இந்த தற்கொலை வழக்குகளில் சிலவற்றை முறையாக விசாரணை செய்தாலே உண்மை விளங்கும்.
இன்னொரு கொடுமை… மனைவியும் அவளது கள்ளக் காதலனும் சேர்ந்து கணவனைக் கொல்வது. இதை அடிக்கடி தினசரிகளில் பார்க்கிறோம்.
இதைவிடக் கொடுமை.. மனைவியும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயற்சிக்க.. ரத்தக்காயத்துடன் அவர் காவல்நிலையத்துக்கு ஓடினால், ‘மனைவிதானே அடித்தாள் போ’ என்று விரட்டுவதும் நடக்கிறது.
தவிர கணவனை அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவது, கணவன் உழைத்து சம்பாதித்த வீட்டை பிடுங்கிக்கொள்வது, ஜீவனாம்சம் என்ற பெயரில் அவனது வருமானத்தையே எடுத்துக்கொள்வது போன்ற கொடுமைகள் ஆண்களுக்கு நடக்கின்றன” என்கிறார்.
இதற்கு தீர்வாக அவர் முன்வைப்பது, “வரதட்சணை, குடும்ப வன்முறை சட்டப்படி புகார் அளிக்கப்பட்டால், அவற்றை பெண் காவல் அதிகாரிகளே விசாரிக்கிறார்கள். அவர்கள், ஆண்களை மோசமாக நடத்துவதும் தொடர்கிறது.
ஆகவே, பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர் இருக்க வேண்டும் என்பதுபோல, ஆண்களை விசாரிக்கும்போது ஆண் காவலர் இருக்க வேண்டும். ஆண்களின் நலனுக்காக, தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்.
இதுபோன்று ஆண்களின் பாதுகாப்புக்காக 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்!” என்கிறார், ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர், வழக்கறிஞர் அருள்துமிலன்.
வழக்கறிஞர் சுதா ராமலிங்கமும், “பெண்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆரம்பத்தில் அவர்களுக்காக மட்டுமே வாதாடினேன்.
பிறகுதான் ஆண்கள் மீது பொய்ப் புகார் கொடுத்து சிக்கலில் மாட்டிவிடும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். அதன் பிறகு, பாதிக்கப்பட்ட ஆண்களுக்காகவும் வாதாட ஆரம்பித்தேன்” என்கிறார்.
அதே நேரம், “உலகில் எல்லா வகையான மனிதர்களும் இருப்பார்கள். அப்படி, கணவன் அல்லது ஆண் மீது பொய்ப் புகார் கொடுக்கும் பெண்களும் இருக்கிறார்கள்தான். இது போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறது.
இதற்காக சட்டங்களை மாற்ற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. போதை மருந்து வைத்திருந்ததாக பொய் வழக்கு புனையப்படுவதும் நடக்கிறது, நடந்திருக்கிறது. அதற்காக போதைத் தடுப்புச் சட்டத்தை எடுத்துவிட முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.
வழக்கறிஞர் அருள் துமிலன், “ஒட்டுமொத்தமாக சட்டத்தை நீக்க வேண்டாம். முன்பு வரதட்சணை புகார் கொடுத்த உடனேயே கணவரை கைது செய்யும்படி சட்டம் இருந்தது.
நாங்கள் போராடிய பிறகு, விசாரணைக்குப் பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கலாம் என்று மாற்றப்பட்டது.
அதுபோலவே, ஆண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் – சட்டத்தில் மாற்றங்கள் தேவை என வலியுறுத்துகிறோம்” என்கிறார்.
எப்படியோ, பெண்கள் உரிமைக்காக சட்டங்கள் வந்ததுபோல, ஆண்களின் பாதுகாப்புக்கும் சட்டம் வேண்டும் என்கிற குரல் எழுந்திருக்கிறது. கால மாற்றத்தில் இதுவும் கவனிக்க வேண்டிய விசயம்தான்.
- டி.வி.சோமு