உயிர் வாழ்வது எளிதானதல்ல!

  • முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவுப் பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மணி நேர தொடர் மின்வெட்டால் மக்கள் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சரக்கு கப்பல் மூலம் இது விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு உதவும் நடவடிக்கையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டாலர் எண்ணெய்க் கடனின் ஒரு பகுதியாக இந்த எரிபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு மார்ச் மாதத்திலிருந்து அனுப்பபட்ட 5 ஆவது எரிபொருள் இதுவாகும்.

இந்நிலையில் தமது நாட்டுக்கு இந்தியா பெரிய அளவில் உதவி செய்துள்ளதாக பிரதமர் மோடிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் அமைச்சருமான, அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா இலங்கையின் நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின் ஆதரவைக் கோரி உள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், “துரதிர்ஷ்டவசமாக, மக்கள் இந்த சூழ்நிலையில் சிக்கி உள்ளனர். அவர்களால் வாழ முடியாது, போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மணிக்கணக்கில் மின்சாரம் இல்லை.

அரசுக்கு தங்கள் பிரச்சினையை காட்ட மக்கள் வெளியில் வந்து போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு அரசு உரிய முறையில் தீர்வு காணாவிட்டால் பேரழிவாக மாறிவிடும். தற்போது அதற்கான பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தையே சேரும்.

அண்டை நாடாகவும், நமது நாட்டின் பெரிய சகோதரராகவும், இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவி வருகிறது. இந்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் எங்களைப் பொறுத்தவரை, உயிர்வாழ்வது எளிதானது அல்ல. நாங்கள் மீண்டு வருவோம் என்று நம்புகிறோம். இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியுடன் இதிலிருந்து வெளியேற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

07.04.2022  1 : 30 P.M

Comments (0)
Add Comment