சினிமாவில் பெண் கவர்ச்சிப் பொருளா?

1919-லிருந்தே தமிழ்நாட்டில் சினிமா உருவாக்கப்பட்டு வந்தாலும், அது தன்னுடைய அடையாளத்தை எடுத்துக் கொண்டது, தமிழ்மொழியை உச்சரித்ததினால்தான். பின் 1931-ல் தான் தமிழில் பேசும் முதல் படம் ‘காளிதாஸ்’ எடுக்கப்பட்டது. இருந்தாலும் 1965-ம் ஆண்டில்தான் தமிழ் சினிமா தீவிரமானது.

தொடக்கத்தில் மவுனப்படங்களில் நடிக்க பெண்கள் தயங்கியதுடன், மறுத்தும் விட்டனர். கேமரா லென்ஸ், தங்களின் கவர்ச்சியைக் களவாடி விடும். அழகை அபகரித்துவிடும் என்றெல்லாம் தவறான, அதேசமயம் அழுத்தமான நம்பிக்கை அக்கால நடிகைகளுக்கு இருந்ததுதான் காரணம்.

எனவே பெண் வேடங்களுக்குத் துணிந்து நடிக்க வந்த ஐரோப்பியப் பெண்களையும், ஆங்கிலோ – இந்தியப் பெண்களையும் தான் பயன்படுத்தினார்கள். 1917-ல் நடராஜ முதலியார் தயாரித்து இயக்கிய ‘திரௌபதி வஸ்திராபரணம்’ மவுனப்படத்தில் துச்சாதனனால் துகிலுரியப்பட்ட திரௌபதியாக நடித்தவர் ஒரு ஐரோப்பிய பெண். தொடர்ந்து ஆங்கிலோ – இந்தியப் பெண்களையே நடிக்க வைத்தார்.

மரைன் ஹில் –  இவர் ஓர் ஆங்கிலோ – இந்தியப் பெண். இவர் மவுனப்படத்தில் நடித்தபோது சூட்டப்பட்ட பெயர் ‘லியோச்சனா’. மவுனப்படக் காலத்தில் மிக அதிகமாக ஊதியம் பெற்றவர் இவர்தான். (தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சாதனை இயக்குநர்கள் 1931-1965, செம்புலம் வெளியீடு – 2004)

இப்படித் தொடக்க காலத்தில் நடிப்பதற்குப் பெண்கள் மறுத்தும் வெறுத்தும் வந்தார்கள். அதனால்தான் பெண்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் பெண்களுக்குரிய வெட்கமும், நாணமும்தான் அதன் அடித்தளம். ஆனால் இன்றைய சினிமா நிலையே வேறு. பெண்களை எப்படி வேண்டுமானாலும் நடிக்க வைக்கக் கூடிய கவர்ச்சி சினிமாவாக இன்று மாற்று வேடம் அணிந்திருக்கிறது.

காட்சிகள், பாடல்களில் எல்லாம் காமம் கொழுத்துக் காணப்படுகிறது. திரைப்படத்துறையில் பணியாற்றக் கூடிய தொழில்நுட்பக் கலைஞர்களும் மற்றும் தொழில்நுட்பமல்லாத கலைஞர்களும் தமிழ் இலக்கியம் சார்ந்து பணியாற்றுவது கிடையாது.

நாமும் அவர்களிடம் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் பாடலாசிரியர்கள் தமிழ்,  இலக்கியம், பண்பாடு என்ற தளத்தில் இயங்கக் கூடியவர்கள்.

காதல், கலக்கல் என்கிற ரீதியில் சூழல் அமைந்தாலும் அதில் தமிழின் தொன்மையும், தமிழினத்தின் பெண்மைத் தன்மையும் கேவலப்படுத்தப்படாமல் காக்கப்படவேண்டும்.

திரைப்பட வாய்ப்புக்காகவும், பாடலின் வெற்றிக்காகவும் மிகக் கொச்சைத்தனமாக வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் புறக்கணிக்க வேண்டும். வருமானத்தை எந்தத் தொழில் செய்து வேண்டுமானாலும் பெறலாம்.

தமிழ் மானம்… அதன் தொன்மையிலும் தொடர்ந்து நாம் பாதுகாத்து வளர்ப்பதிலும்தான் இருக்கிறது.

பாடலின் வெற்றி என்பது எப்படி ஒரு கூட்டு வெற்றியாக (இயக்குநர் + இசையமைப்பாளர் + பாடலாசிரியர் + பாடகர்) அமைகிறதோ அதேபோன்று ஒரு பாடல் கொச்சைத் தனத்தோடு வெளிவந்தால் தமிழ்ச் சமூகத்தின் பாதிப்பும் கூட்டானது.

அந்தக் கூட்டணியில் தமிழின மக்கள் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு, கொச்சைத் தனத்தை எதிர்க்காமல் கூனிக்கிடந்ததில். அதனால் பெண் கவர்ச்சிப் பொருளல்ல எனக் கண்டிப்பதன் மூலம் நம் நியாயத்தையும் தீர்ப்பாக்குவோம்.

– பூவிழியன்

நன்றி: புதிய பார்வை, 2007 ஜூன் மாத இதழ்.

Comments (0)
Add Comment