உண்மைச் சம்பவங்களில் பரபரப்பூட்டுபவை மட்டுமே திரைக்கதைகளாக முடியும் என்ற நியதி பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது.
அவற்றை உடைத்து, சமகாலச் சமூகம் தெரிய வேண்டிய உண்மைகளை லாவகமாக திரைக்கதை இலக்கணத்துக்குள் அடக்குவது பெருங்கலை.
தனது ‘படா’ திரைப்படத்தில் அதனைச் சாத்தியப்படுத்தி அசாத்தியமான காட்சியனுபவத்தை உணரச் செய்திருக்கிறார் இயக்குனர் கமல் கேஎம்.
கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெருவெற்றி பெற்ற இத்திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கிறது.
மறுக்கப்படும் ஆதிவாசி உரிமைகள்!
கேரளாவில் மிகக்குறைந்த அளவில் வசிக்கும் ஆதிவாசி மக்கள், 1975இல் இயற்றப்பட்ட கேரள பழங்குடியினத்தவர் சட்டம் (நிலப் பரிமாற்றம் மற்றும் புறம்போக்கு நிலத்தை மீட்டெடுப்பதற்கான கட்டுப்பாடு) காரணமாக பல நூறாண்டுகளுக்கும் மேலாக மலை மீது தங்களுக்கிருந்த நில உரிமையை இழந்தனர்.
அதனை மீட்டெடுப்பதற்காகப் பல்வேறு போராட்டங்களை தற்போது வரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சிலவற்றில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அசம்பாவிதங்களும் நிகழ்ந்துள்ளன. இதையே தனது படத்தின் களமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
அதேநேரத்தில் வெறுமனே ஆவணப்படமாக இல்லாமல், இந்த உண்மைகளின் உரைகல்லாக விளங்கும் சம்பவமொன்றை இப்படத்தின் களமாக்கியிருக்கிறார்.
1996-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதியன்று பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் துப்பாக்கி, குழாய் வெடிகுண்டு சகிதம் நுழைகின்றனர் 4 மர்ம நபர்கள்.
ஆட்சியரை பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு, ‘கேரள பழங்குடியினத்தவர் சட்டத்தை’ திரும்பப் பெற வேண்டுமென்று மாநில தலைமைச் செயலாளரிடம் தெரிவிக்கின்றனர்.
அதுவரை ஆட்சியரை விடப்போவதில்லை என்று மிரட்டுகின்றனர். போலீஸ் தரப்பில் ஆட்சியரை விடுவிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட, தேசிய பாதுகாப்புப் படையை அழைக்கும் முயற்சியில் இறங்குகிறது மேலிடம்.
சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து வாக்குகளை இழக்க முதலமைச்சர் விரும்பவில்லை. இதனால், இவ்விவகாரத்தை சுமூகமாக கையாள முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இறுதியில் ஆட்சியர் விடுவிக்கப்பட்டாரா? பேச்சுவார்த்தை என்னவானது? அந்த 4 பேரும் என்னவானார்கள் என்று சொல்கிறது ‘படா’.
என்னவொரு தைரியம்?
முதலில் இப்படியொரு களத்தையும் கதையையும் சொல்வதற்கே மாபெரும் தைரியம் வேண்டும். காரணம், கேரளத்தை இதுவரை ஆண்டுவந்த காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் இவ்விரண்டுமே பழங்குடியின மக்களின் நலன்களுக்கு புறம்பாகவே நடந்ததாகக் குற்றம்சாட்டுகிறது இத்திரைப்படம்.
பழங்குடியின மக்களுக்கான பாரம்பரிய உரிமைகள் மறுக்கப்படும் நேரத்தில்தான் தனியார் மற்றும் கார்ப்பரேட்களுக்கு மலைப்பகுதி இடங்களை ‘ரிசார்ட்’கள் ஆக்குவதற்கான அனுமதி மலைபோல குவிக்கப்படுவதை சுட்டிக்காட்டுகிறது.
காவல் துறையினர், அரசின் மேல்மட்ட அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பழங்குடியின மக்களின் வாழ்வை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதைப் புட்டுபுட்டு வைக்கிறது.
மேற்கண்ட சம்பவம் நடந்தபோது அவர்களது செயல்பாடு எப்படியிருந்தது என்பதைக் காட்டி, படத்தின் முடிவில் இச்சம்பவம் தொடர்பான ஒவ்வொருவரும் என்ன நிலையில் உள்ளனர் என்பதைச் சொல்லும்போது வேறொரு திரைப்படம் நம் மனதிற்குள் ஓடுகிறது.
இப்படிப் படத்தில் சொல்லப்படாத உண்மைகள் உருவாக்கும் உணர்வுதான் ‘படா’வின் வெற்றி!
மறக்கப்பட்ட அய்யன்காளி!
நாராயணகுரு, அய்யன் காளி, அய்யா வைகுண்டர் என்று கேரளத்தையும் அதனுடன் இணைந்திருந்த நாஞ்சில் நாட்டுப் பகுதியையும் மறுமலர்ச்சி அடையச் செய்த சீர்திருத்தவாதிகளை ஒரு நபர் என்றே நான் நினைத்ததுண்டு.
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் சமகாலத்தில் இவர்கள் வாழ்ந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த சாதியினர் மட்டுமல்லாமல் சமத்துவ சமுதாயம் அமையப் பாடுபட்டனர் என்பது மிகத்தாமதமாகவே புரிய வந்தது.
’படா’ படத்திலும் சரி, ஆதிவாசி மக்களின் போராட்டங்களுக்குச் சாட்சியமாக விளங்கும் ஆவணக் காட்சிகளிலும் சரி, அய்யன்காளியின் படம் முதன்மையிடம் வகிக்கிறது.
தெருவில் நடக்கவும் ஆடை அணியவும் உரிமை மறுக்கப்பட்ட காலகட்டத்தில் தலைப்பாகை, கடுக்கண் அணிந்து நின்றதோடு, தன்னை எதிர்க்க வந்தவர்களைத் துணிந்து எதிர்கொண்டவர் அய்யன் காளி.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் இடங்களில் தனது தலைமையிலான குழு சகிதம் சென்று அச்சூழலை வெற்றி கண்டவர்.
தமிழ்நாட்டில் அவரது பெயர் பெரிதாக உச்சரிக்கப்படாத நிலையில், கேரள பழங்குடியினர் போராட்டங்களில் அவருக்குத் தரப்பட்டிருக்கும் இடத்தை வெளிபடுத்துகிறது ‘படா’.
இதன்மூலமாக மக்கள் மனங்களில் இருந்து அகன்றுபோன அய்யன்காளிக்கும் தொடர்ந்து மறுக்கப்படும் பழங்குடியினரின் நில உரிமைகளுக்கும் ஒரு இடமளித்திருக்கிறார் இயக்குனர்.
படம் எப்படியிருக்கிறது?
வன்முறை நிகழக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வுக்கு கதை மாந்தர்கள் தயாராவதும், ஆட்சியரை பிணைக்கைதியாக்கி அரசுடன் பேரம்பேசுவதும் ஒரு ‘த்ரில்லர்’க்கான பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.
அதற்கேற்றவாறு முதன்மைப்பாத்திரம் ஏற்ற குஞ்சாக்கோ போபன், விநாயகன், ஜோஜு ஜார்ஜ், திலேஷ் போத்தன் நடிப்பு அமைந்துள்ளது.
தலைமைச் செயலாளர் ராஜசேகரனாக வரும் பிரகாஷ்ராஜ், சமாதான தூதுவராக வரும் டி.ஜி.ரவி மட்டுமின்றி ஜகதீஷ், இந்திரன்ஸ், சலீம் குமார் என்று பல மூத்த நடிகர்கள் சில காட்சிகளில் மட்டும் வந்துபோவது ஆச்சர்யம்.
ஷைனி டாம் சாக்கோ, சுதீர் கரமனா உட்பட பலர் மிகச்சில பிரேம்களில் வந்து போவது வியப்பு தரும் விஷயம்.
உன்னிமாயா பிரசாத், சாவித்திரி சந்திரன் மற்றும் ஆட்சியரின் உதவியாளராக வரும் பெண் உட்பட இதில் மிகக்குறைவாகவே இடம்பெறும் பெண் பாத்திரங்கள் கூட ஆண்களுடன் சரிநிகர் சமானம் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையிலே படைக்கப்பட்டிருக்கின்றன.
முன்னணி மலையாள நடிகரான போபன் எவ்வித ஹீரோயிசமும் இன்றி ஒரு திரைக்கதையில் தன்னை பொறுத்திக்கொள்வது இப்போதும் தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை அரிதான ஒன்றாகவே விளங்குகிறது.
சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு, ஷான் முகம்மதுவின் படத்தொகுப்பு, திரைக்கதையின் பரப்பரப்பை அதிகப்படுத்தும் விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை, 2000களுக்கு முற்பட்ட கேரளம் என்று நம்பவைக்கும் கோகுல்தாஸின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஆடை வடிவமைப்பு, அலங்காரம் என்று அனைத்துமே இயக்குனர் கமல் கே எம் காட்ட விரும்பும் உலகம் குறித்து எவ்விதச் சந்தேகங்களையும் நம்முள் எழுப்புவதில்லை. அதுவே படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது.
மிக முக்கியமாக, ஆட்சியர் கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தபோதும் சரி, ‘படா’ வெளிவந்தபோதும் சரி, கேரளத்தில் ஆட்சியில் இருப்பது இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி அரசு தான்.
இப்படியொரு சகிப்புத்தன்மை பரவலாகிவிட்டால், அரசியல்வாதிகளை வில்லன்களாக காட்டும் வழக்கமான மசாலா திரைப்படங்கள் தாண்டி,
மத்திய மற்றும் மாநில அரசியல் வரலாற்றின் இண்டு இடுக்குகளில் இருக்கும் அற்புதமான பல நிகழ்வுகள், மனிதர்களை திரையில் தரிசிக்க வழி ஏற்படும்.
படை போல பல ‘படா’க்கள் வந்தால் ஒருவேளை அதற்கான தூண்டுதலை தமிழ் திரையுலகமும் பெறக்கூடும்.
– பா.உதய்