சிந்தனையில் உதிப்பவை, விதையாக இருக்கட்டும்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!

மன்னர்களுக்கு எப்போதுமே ஏதாவது ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருப்பதும், அதை அவையில் இருப்போர் தீர்த்து வைத்ததும் மெகா சீரியல் போன்ற ஒன்றுதான்.

மன்னருக்கு ஒரு திடீர் சந்தேகம், “நாட்டில் உள்ளவர்கள் அதிகமாக செய்யும் தொழில் எது?” என்பதை அறிந்து கொள்ள விரும்பி அமைச்சரிடம் கேட்டார்.

அமைச்சர் சற்றும் யோசிக்காமல், “வைத்தியத் தொழில்!” என்றார்.

“மக்கு மந்திரி! நாட்டில் பல்வேறு வியாதிகள் வந்து மக்கள் அவதிப்படுகையில் வைத்தியர்கள் இல்லாமல் பல பிரச்சனைகள் எழுவதை நான் அறிவேன். நீர் சொல்வது போல, வைத்தியர்கள் நிறைந்த நாடு இது என்றால், பிரச்சனைகளே வரக்கூடாதே! நீ நன்றாக விசாரித்து வந்து எனக்குச் சொல்ல வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

“இதோ வருகிறேன் மன்னா!” என்று கிளம்பிய மந்திரி, சிறிது நேரத்தில் கையில் கட்டுடன் வந்தார்.

வாயிற்காவலன், “என்ன அமைச்சரே, கட்டு…?” என்று கேட்டான்.

“குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டேன்!” என்றார் அமைச்சர்.

உடனே வாயிற் காப்போன், அதற்குத் தீர்வாக ஒரு வைத்தியம் சொன்னான். அருகில் இருந்தவன், அதைவிட இதுவே சிறந்தது என்று வேறொரு வைத்திய முறையைச் சொன்னான்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாம் வாயிற் காப்போன்,

“எனக்கும் இதுபோல் அடிபட்டது. அப்போது நான் என்ன செய்து அதை சரியாக்கினேன் தெரியுமா, மந்திரியாரே!” என்று தன் வைத்திய முறையை விரிவாக விளக்கினான்.

அரசவைக்குள் வந்த அமைச்சர், தீர்வைச் சொல்லுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த மன்னர், கையில் கட்டுடன் வந்ததைப் பார்த்து “என்ன நடந்தது?” என்று கேட்டார்.

தாம் வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொண்டதாகவும். ஒரு வைத்தியர் பச்சிலைக் கட்டுப் போடச் சொன்னதைச் செய்ததாகவும், வழியில் எதிர்ப்பட்ட பலரும் கூறிய வைத்திய முறைகளைக் கேட்டு தாம் மகிழ்ந்து போயிருப்பதாகவும் மந்திரி தெரிவித்தார்.

எகத்தாளமாக சிரித்த அரசர் சொன்னார்.

“மறுபடியும் மக்கு மந்திரி என்பதை நிரூபித்து விட்டீர்! அவர்கள் செய்ததை எல்லாம் செய்தால் கையை இழக்க வேண்டியதுதான். அவர்கள் கிடக்கிறார்கள் மூட்டாள்கள்!

நான் ஓர் அற்புதமான வைத்தியம் சொல்கிறேன். அதைச் செய்து பாரும் ஒரே நிமிடத்தில் வீக்கம் குறைந்துவிடும்!” என்று வைத்திய முறையைச் சொன்னார்.

அமைச்சர் பகபகவென அரண்மனை அதிரச் சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறீர்…? நான் என்ன தவறாகச் சொல்லிவிட்டேன்!” என்று கேட்டார் அரசர்.

“அரசே, மன்னிக்க வேண்டும். எல்லோருக்கும் பிடித்தமான தொழில் எதுவென்று கேட்டீர்களே! அதன் பதில் இதுதான்! வைத்திய ஆலோசனை சொல்வது…! நாட்டில் எல்லோருமே இதை அறிந்தோ அறியாமலோ செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் உள்பட” என்றார் அமைச்சர்.

மன்னர் மந்திரியைப் பாராட்டினார்.

கண்ணை மூடிக்கொண்டு கிலோ கணக்கில் ஆழமான கருத்துக்களை அள்ளிவிடுவது ஒரு தியான நிலை. ஆனால், கடைசிவரை ஒரு கொசுவைக் கூட திருத்த முடியாது என்று புரிந்து கொள்வதுதான் முக்தி நிலை.

பெரிய மகான்கள், சிந்தனையாளர்களுக்கு மத்தியில் போகிற போக்கில் தத்துவங்களை அள்ளிவிடும் நண்பர்கள் நம் அருகிலேயே இருக்கிறார்கள்.

அப்படிக் கிடைக்கும் தகவல்களைக் கேட்டு குழம்பி நின்றுவிடக் கூடாது. ஒரு காரியத்தை, தொழிலை, பணியைச் செய்யும்போது, நின்று கொண்டே இருப்பதைவிட, சென்று கொண்டே இருப்பது மேல்!

எல்லாவற்றையும் மக்கச் செய்து அழித்துவிடும் மண், விதையை மட்டும் உயிர்ப்பிக்கச் செய்வதுதான் இயற்கையின் மிகப்பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று என்பதை உணருங்கள்! உங்கள் சிந்தையில் உதிப்பவை, விதையாக இருக்கட்டும்!

ராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை, ஒரு விதை’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி!

https://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment