நினைவுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று சந்தித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் நடிகர் மம்முட்டி.
பொதுவாக முதியவர்களுக்கு ஏற்படும் நினைவுக்குறைவு நோய் அரிதாக சிறுவர்களையும் பாதிக்கும். நினைவுக்குறைவால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஆராதிகா என்ற சிறுமி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமி ஆராதிகா நடிகர் மம்முட்டியின் ரசிகை. தனக்கு நினைவு மறப்பதற்குள் மம்முட்டியை நேரில் சந்திக்க விரும்பியுள்ளார்.
நேற்று (04.04.2022) தன்னுடைய பிறந்தநாளில், தனக்குப் பிடித்த நடிகரான மம்முட்டி வந்து பார்ப்பாரா எனக் கேட்டிருந்தார்.
சிறுமியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து மம்முட்டியும் அந்த வீடியோவை பார்த்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற மம்முட்டி, சிறுமியின் ஆசைப்படி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளம் ரசிகையின் விருப்பத்திற்கிணங்க மம்முட்டி உடனடியாகச் சென்று சந்தித்தது ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-பா. மகிழ்மதி