– முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி. வேலுமணி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு மற்றும் அறப்போர் இயக்கம் ஆகியவை 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து எஸ்.பி.வேலு மணி மீதான வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த பதில் மனுவில், “எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது சென்னை மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மேம்பாடு, சாலைகளை செப்பனிடுதல், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் பகுதிகளை அகற்றுதல் ஆகிய 6 முக்கியமான பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.114 கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அரசு நிர்ணயித்த விலையை விட முறைகேடாக இந்த ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டதன் காரணமாக தமிழக அரசுக்கு ரூ.29 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை அள்ளும் பணிகளுக்கும், அவ்வாறு அள்ளப்பட்ட கழிவுகள், குப்பைகளை பத்திரமாக வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும் பணிகளுக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டதன் மூலமாக ரூ.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை ரூ.58 கோடி அளவுக்கு தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார். தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்டுள்ள விசாரணையில் புதிய புதிய தகவல்கள், ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு ஜுன் மாதம் மத்திய அரசின் தணிக்கைதுறை அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே எஸ்.பி.வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிலும், அவரது உறவினர்கள், நண்பர்கள் நடத்தும் நிறுவனங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ததிலும் இத்தகைய குற்றச்செயல்களை அவர் செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி மிகமிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். எனவே அவருக்கு எதிரான வழக்குகளை விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பான முழுமையான இறுதி அறிக்கை கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
தான் செய்த குற்றத்தின் காரணமாக நீதிமன்றத்தால் கண்டிப்பாக தண்டிக்கப்படுவோம். சிறைக்கு அனுப்பப்படுவோம் என்பது எஸ்.பி.வேலுமணிக்கு தெரிந்து இருக்கிறது. அதனால் வழக்கு விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
எஸ்.பி.வேலுமணி தொடர்ச்சியாக இந்த குற்றங்களில் ஈடுபட்டு இருக்கிறார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிந்தே டெண்டர்களை முறைகேடாக கொடுத்து இருக்கிறார்.
இந்த வழக்கில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கில் அவருக்கு எந்தவித சலுகையும் வழங்கக்கூடாது. இந்த வழக்கு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார்” என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ஏற்கனவே நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி, முதல் கட்ட விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த அறிக்கையை அடுத்த 3 வார காலத்துக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.