இந்திய ஜனநாயகமும் உலக நாடுகளின் சிக்கல்களும்!

நேற்றைக்கு பாகிஸ்தானில் ஆட்சி கலைக்கப்பட்டது. இதுவரை அங்கு 22 அதிபர்கள் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முழுமையாக ஆளமுடியாமல் போயுள்ளனர்.

இலங்கை நிலைமை நமக்கு நன்றாகத் தெரியும். வங்கதேசத்திலும் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்த வண்ணம் இருக்கிறது. இதேபோல மியான்மரில் சிக்கல். நேபாளத்தில் அந்தக் காலங்களில் சிக்கல் நடந்தது.

கட்டுப்பாடான சோவியத் கூட்டமைப்பு இருந்தபோது கோர்பச்சோவ் பிரொஸ்டோரிகா  என்ற கொள்கையை வெளிப்படுத்தினார். அதிலிருந்து ரஷ்யாவில் பிரச்சினையாகி பல்வேறு நாடுகள் சிதறுண்டன.

ராணுவக் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள ரஷ்யாவில் மக்களே தெருவில் வந்து போராடும் அளவிற்கு பெரும் போராட்டம் நடந்தது.

தலைநகரின் மையப்பகுதியான செஞ்சதுக்கத்தில் மாணவர்கள் அன்றைக்கு ஆண்ட கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை எதிர்த்து முழக்கமிட்டனர்.

அப்படியெல்லாம் ராணுவ கட்டுப்பாடான கம்யூனிச நாட்டிலும் ஆட்சிகள் கேள்விக்குறியாகின.

அதேபோல, யூரோ கம்யூனிசம் என்று சொல்லப்பட்ட போலந்து, ருமேனியா போன்ற நாடுகளிலும் இதே போன்ற சிக்கல்கள் ஒரு காலத்தில் நடந்தது.

உலக அளவில் பார்த்தால், கடந்த காலங்களில் எகிப்தில் நடந்த பிரச்சனை, அதேபோல ஆப்பிரிக்க நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் நடந்திருக்கிறது.

1989 இல் சீனாவில் மாணவர் கலவரத்தால் ஒருமுறை ஆட்சி கலைக்கப்பட்டது. இருப்பினும் அங்கெல்லாம் அதிபருக்கு தாங்களாகவே நீண்ட நாட்களாக ஆட்சி செய்யக்கூடிய சட்ட வழிமுறைகளை செய்து கொண்டார்கள்.

இதேபோன்று ரஷ்யாவிலும் சிதைவுகள். அதிபர் புட்டின் தொடர்ந்து அதிகாரம் செய்கின்ற சூழ்நிலை. அங்கும் ஜனநாயகம் என்பது இல்லை.

ஆனால், இந்தியாவில் ஆட்சியாளர்களின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், ஆட்சி அமைப்பு என்பதில் இதுவரைக்கும் பெரிய அளவில், நாடு தழுவிய போராட்டமாக எதுவும் நடக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தனைக்கும் பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சார, பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் கிட்டத்தட்ட 1947ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து 75 ஆண்டு காலம் இயல்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது இந்தியா.

இடைக்காலத்தில் 1977க்கு முன்பு அவசர நிலை இந்திராகாந்தி காலத்தில். அதன்பிறகு 1977ல் ஜனதா கட்சி 5 ஆண்டு ஆள முடியவில்லை. பின்பு வி.பி.சிங் ஆட்சி ஓராண்டு.

அதன் பின்பு தேவகவுடா, குஜரால் இரண்டு ஆண்டுகள். இப்படித்தான் சில காலம் முழுமையாக ஐந்து ஆண்டுகள் ஆள முடியாமல் சிக்கல்கள் இருந்தது. ஆனால் இந்திய ஜனநாயகத்தை போற்றித்தான் ஆகவேண்டும்.

இப்படிப் பார்க்கும்போது, இந்தியா, ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என்று சில நாடுகளில் மட்டும் உலக அளவில் ஜனநாயகத்தை தொடர்ந்து பாதுகாத்து வருவதை நாம் கவனிக்க வேண்டும்.

அந்த அளவில் இங்கே பல்வேறு சிக்கல்களும், பிரச்சினைகளும் இருந்தாலும், அடிப்படை தன்மையான ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாக்கின்ற மனப்பான்மை நமக்கு இருக்கிறது என்பதை பெருமையாக உணர வேண்டிய சூழல்.

ஆட்சியாளர்கள் மீது எதிர்வினைகள் இருக்கலாம். இன்றைக்கு ஒருவர் நாளைக்கு ஒருவரின் ஆட்சி என்று காட்சிகள் மாறலாம்.

ஆனால் ஜனநாயக நிறுவனத்தோடு ஒரு நாடு இயங்குவது இந்தியாவில்தான் இருக்கிறது.

இங்கேயும் மதவாதத்தைப் பற்றி பேசுகிறார்கள். எல்லோரும் அவர்களுடைய சொந்த மதத்தைப் பற்றி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேல் ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் மாண்பு தொடரத்தான் செய்கிறது என்பது ஒரு வகையில் திருப்தியை தருகிறது.

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

04.04.2022

Comments (0)
Add Comment