மகளிர் பெயரால் உறவினர்களின் நாட்டாமையா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

தென் தமிழகத்தில் தான் அந்த ‘சர்வே’ நடந்தது.

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பிரதிநிதிகளின் பெயரால் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரம் செலுத்துவது அவர்களுடைய உறவினர்கள் தான் என்பதை உணர்த்தியது அந்த ‘சர்வே’.

எப்போதும் போல, முடிவுகள் நம்மை அதிர வைத்தாலும், மகளிருக்கான இட ஒதுக்கீட்டின் லட்சணம் தமிழ்நாட்டில் இப்படித்தான் இருந்தது.

இப்போதும் பல இடங்களில் அப்படித் தான் இருப்பதை உணர்த்துகின்றன செய்தி ஊடகங்கள்.

பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பிரதிநிதிகள் ஏதாவது கையெழுத்துப் போடுவதாக இருந்தாலோ, ஏதாவது கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இருந்தாலோ தான், அதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆஜர் ஆவார்கள்.

மற்ற சமயங்களில் எல்லாம் ‘மகளிர்’ பெயரால் ‘நாட்டாமை’ செலுத்துவது தான் பெரும்பாலான கிராமங்களில் இயல்பாக நடந்து வந்திருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அதிகாரிகளும் ‘இந்த ஆள் மாற்றாட்டப் பொறுப்புகளை’ அமைதியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அதே மாதிரி தான் இப்போதும் அதே பாலினப் பாகுபாட்டு ‘நாட்டாமைகள்’ நடக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பிரதிநிதிகளின் கணவரோ, உறவினரோ அதிகாரம் செலுத்துவதாகச் செய்திகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன.

முன்பு காட்சி ஊடகங்களோ, செல்போன் போன்ற தொழில்நுட்பச் சாதனங்களும் அதிகம் இல்லாத நேரத்தில் – உள்ளாட்சி அமைப்புகளில் நடந்த ‘நாட்டாமைத் தனங்களுக்கு’ச் சாட்சிகள் இல்லை.

இப்போதும் சமூக வலைத்தளங்களும், காட்சி ஊடகங்களும் துடிப்புடன் இருக்கையில், மகளிரின் பெயரால் நடக்கும் ‘நாட்டாமைகள்’ உடனுக்குடன் வெளியே வந்து பரபரக்க வைத்துவிடுகின்றன.

பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க.வினர் தான் வெற்றி பெற்றிருப்பதால், தற்போது தி.மு.க.வுக்குத் தான் இதனால் அங்கங்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது.

இதைத் தனிநபர்களின் அதிகார மீறலாக எடுத்துக் கொள்வதை விட, ஆளும்கட்சியின் அதிகார மீறலாகவே உள்ளூரில் எடுத்துக் கொள்கிறார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது ஆளும் கட்சியின் கட்டாயத் தேவை. அப்போது தான் “உள்ளாட்சியில் நல்லாட்சி” என்ற முழக்கத்திற்கு அர்த்தம் இருக்கும். வெற்றி பெற்றதற்கும் அர்த்தம் இருக்கும்.

அதோடு உள்ளாட்சி அமைப்புகளின் வெளிப்படையான செயல்பாட்டிற்கு உதாரணம் – ஒரு நிகழ்வு.

பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்து நாடு முழுக்க அமலான போது, கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை நேரடியாக ஆய்வு செய்ய, திண்டுக்கல்லில் உள்ள நணபர் ‘செரு’ வெள்ளைச்சாமி உள்ளிட்ட சிலருடன் அங்கு சென்றிருந்தேன்.

பல கிராமப் பகுதிகளுக்குப் போயிருந்த போது, ஆச்சர்யப்படுத்திய ஒரு விஷயம் – உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கக்கூடிய அனைத்து வேலைகளுக்கும் ஒரு போர்டு இருந்தது.

சாலை போடப்படுகிறது என்றால் அதன் திட்ட மதிப்பீடு, ஒப்பந்ததாரர், உள்ளாட்சிப் பிரதிநிதியின் தொடர்பு எண் என்று எல்லா விபரங்களும் அதில் இருந்தன.

அதைப் பார்க்கும் யாரும் அத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால், உடனே தட்டிக் கேட்க முடியும்.

இப்படி பாலம், சாலை, பள்ளிகள் என்று ஒவ்வொன்றுக்கும் தகவல்கள் அடங்கிய போர்டுகள் இருந்தன என்பதோடு, மற்ற மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு அது ’ரோல் மாடலாக’வும் இருந்தது.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இந்த வெளிப்படைத்தன்மை இல்லை.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியும், மானியமும் வந்து சேரக்கூடிய வாய்ப்புள்ள இந்த நேரத்தில், எவ்வளவு நிதி என்னென்ன பயன்பாட்டிற்காக வருகிறது என்பது குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் பலகை ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் அமைக்கப்பட்டால், ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கும்.

‘கமிஷன்‘ அதிகாரங்கள் எழுவது ஒரு கட்டுக்குள் வரும்.

மத்தியில் அதிகாரங்கள் குவியாமல், கீழ் மட்டம் வரை அவை வந்து சேருவதற்கான உருவானது தான் ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டம்.

அதைச் சிலர் உள்ளூரில் ‘நாட்டாமை’ செலுத்த மாற்றியமைப்பதும், மகளிருக்கான உரிமைகளை மறுத்து, அந்த அதிகாரத்தைத் தானே கையகப் படுத்திக் கொள்வதும் முறையல்ல.

அந்த விதத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக் கண்காணிக்க வேண்டிய கடமை  தற்போதைய அரசுக்கு இருக்கிறது.

மக்கள் பிரதிநிதிகள் என்கிற பெயரால் யாருடைய அதிகாரத்தை யாரும் பறிக்க வேண்டாம்.

– மணா

Comments (0)
Add Comment