‘இடியட்’ காட்டும் முட்டாள் பேய்களின் உலகம்!

கொஞ்சமாய் யோசித்தாலும் அபத்தமாய் மாறிவிடக்கூடிய ‘ஒன்லைனர்’களை மிகப்பொருத்தமான இடத்தில் புகுத்தி, சிரியா மூஞ்சிகளையும் வெடிச்சிரிப்புக்கு ஆளாக்குவது ஒருசிலரால் மட்டுமே முடியும்.

அதிலும், ஹாரர் படத்தில் காமெடி செய்வதெல்லாம் ’பேய் அருள்’ இருந்தாலொழிய வழியில்லை.

பேய்களைக் கண்டு பயப்படுவது ‘காஞ்சனா’ டைப் காமெடி என்றால், அவற்றையே கலாய்க்கும் பாணி ‘தில்லுக்கு துட்டு’ இயக்குனர் ராம்பாலாவினுடையது.

தொலைக்காட்சியில் ‘லொள்ளுசபா’ இயக்கிய அனுபவம் அதற்கு பெருமளவில் உதவியது.

சந்தானத்தின் நாயக வாழ்க்கையில் இரண்டு வெற்றிகளைத் தந்த ராம்பாலா, அதே பாணியில் ‘மிர்ச்சி’ சிவாவை சின்ராசு என்ற பாண்டியாக நடமாடவிட்டிருக்கிறார் ‘இடியட்’டில்..!

’க்ளிஷே’வான கதை!

பஞ்சாயத்து என்ற பெயரில் தப்பும்தவறுமாக பேசுவதும் செயல்படுவதுமாக இருக்கும் தந்தை ராசு (ஆனந்தராஜ்) மீது மகன் சின்ராசுவுக்கு (சிவா) ஏக வெறுப்பு. அதே நேரத்தில், தாய் பரிமளம் (ஊர்வசி) மீது பாசம் அதிகம்.

தந்தையின் முட்டாள்தனத்தினால் தன் வாழ்க்கை வதைபடுவதாக எண்ணும் சின்ராசு, ஒருநாள் கபடி விளையாட்டில் கலந்துகொண்டு பரிசு வாங்குகிறார்.

அதனைக் கண்டு கோபப்படும் ராசு, அவரை வீட்டில் இருந்து வெளியேறுமாறு சொல்கிறார்.

தாத்தாவின் சொத்து தனக்கு வேண்டுமென்று சின்ராசு கேட்க, செம்மனூரில் இருக்கும் பேய் பங்களா பத்திரத்தை அவரிடம் நீட்டுகிறார் ராசு.

அங்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்படுகிறார் சின்ராசு.

மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சின்ராசுவுக்கு, அங்கிருக்கும் மருத்துவர் ஸ்மிதா (நிக்கி கல்ரானி) மீது காதல் பிறக்கிறது.

காதலைச் சொல்லலாம் என்று நினைக்கும்போது ஸ்மிதாவை சிலர் கடத்த, அவர்களைப் பின் தொடரும் சின்ராசுவும் அவரது நண்பரும் (ரெடின் கிங்ஸ்லி) செம்மனூர் பங்களாவுக்குள் நுழைகின்றனர்.

ஸ்மிதாவை அந்த பங்களாவுக்கு கடத்திச் சென்றது ஏன்? அவரைக் கடத்தியவர்கள் யார்? பங்களாவில் உண்மையிலேயே பேய் இருக்கிறதா என்ற கேள்விகளைத் தாண்டி சின்ராசு தனது காதலை ஸ்மிதாவிடம் சொன்னாரா என்பதற்கும் சேர்த்து பதிலளிக்கிறது ‘இடியட்’.

ஒரே நேர்க்கோடு போலிருக்கும் இக்கதையில் கிளைக்கதைகளை செருகிய வகையில் சற்றே அயர்ச்சியைத் தந்திருக்கிறார் இயக்குனர் ராம்பாலா.

பேய் பங்களாவுக்குள் நுழைவதற்குள் இடைவேளை வந்துவிடுவதால், சிரிப்புக்கான உத்தரவாதத்தைப் பெற கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு ஒரே சிரிப்பு மழைதான்.

நாயகன் தன் கையில் மோதிரத்தை போட்டவுடன் பேய்கள் கண் முன்னே வந்து நிற்கின்றன. இதனைச் சோதிக்க, அவர் மோதிரத்தை கழற்றி கழற்றி மாட்டுகிறார்.

இக்காட்சிக்கு சிரிக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வது அவரவர் விருப்பம். பெரும்பாலான காட்சிகள் இது போலவே இருக்கின்றன.

இயக்குனரின் உலகத்தில் நுழைந்து சிரித்து மகிழ வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது உங்களை நீங்களே முட்டாளாக கருதிக்கொள்ள வேண்டும்.

புத்திசாலி என்று நினைத்தால், படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வெளியேறுவது உத்தமம்.

மிக முக்கியமான விஷயம், இது ஹாரர் படங்கள் குறித்த ‘ஸ்பூப்’ என்பது மட்டும் நினைவில் இருக்க வேண்டும்.

கிண்டலோ கிண்டல்!

சீரியல் பாணி காட்சிகள், தூணைப் பிடித்துக் கொண்டு வசனம் பேசும் பாத்திரங்கள் போன்றவை ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்விலிருந்து அந்நியப்படுத்தினாலும், சிவாவின் இருப்பு நம்மை தொடக்கத்தில் காப்பாற்றுகிறது.

அதன் பிறகு பேய் பங்களாவுக்குள் நுழையும் வரை ஆங்காங்கே ஆனந்தராஜ், ஊர்வசி, ரெடின் கிங்ஸ்லி என்று ஆளாளுக்கு ‘கொஞ்சமாய்’ சிரிக்க வைக்கின்றனர்.

ரவிமரியா, பாவா லட்சுமணன் கிரேன் மனோகர் குரூப் காமெடி முதலில் எரிச்சலையூட்டினாலும், நேரம் ஆக ஆக நம்மை மறந்து சிரிக்க வைக்கிறது.

பேய் பங்களாவில் மயில்சாமியின் வரவுக்குப் பிறகு அது இரட்டிப்பாகிறது. மெழுகுவர்த்தி ஏந்திவரும் பேயிடம் சிவாவும் ரெடின் கிங்ஸ்லியும் காமெடி செய்யும் காட்சி அதிலொன்று.

ஒருவேளை இந்த படங்களை பேய்கள் பார்த்தால் இயக்குனர் ராம்பாலா மீது கொலைவெறி கொள்வது உறுதி.

அந்தளவிற்கு ‘கிண்டலோ கிண்டல்’ என்று பேய்களை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறார்.

இறுதிக் காட்சியில் ‘அவெஞ்சர்ஸ்’ பாணியில் சிவா களமிறங்குவதெல்லாம் தியேட்டரில் வெடிச்சிரிப்பை உருவாக்குகிறது.

சிவா, நிக்கி முதல் படத்தில் பேயாக நடித்தவர் வரை அனைவருமே தங்களுக்கான இடத்தை உணர்ந்து நடித்திருக்கின்றனர். ஆனாலும், அதில் தென்படும் அவசரகதியைத் தவிர்த்திருக்கலாம்.

வில்லியாக வரும் அக்‌ஷரா கவுடாவின் பாத்திரப் படைப்பு மட்டுமே இப்படத்தில் சீரியசாக அமைந்திருக்கிறது.

மறைந்த நடன இயக்குனர் சிவசங்கர் மற்றும் அவரது குடும்பத்தினராக வருபவரின் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம்.

ராஜா பட்டச்சார்ஜியின் ஒளிப்பதிவில் பேய் பங்களா காட்சிகள் கண்களைக் கவர்கின்றன. செஞ்சி மாதவனின் படத்தொகுப்பும் விக்ரம் செல்வாவின் பின்னணி இசையும் ஓகே ரகம்.

முந்தைய இரு படங்களில் அடிப்படைக் கதை சாதாரணமாக இருந்தாலும், திரைக்கதை செல்லும் போக்கு ஒரே நேர்க்கோடாக இருக்குமாறு அமைத்திருந்தார் இயக்குனர் ராம்பாலா.

கிட்டத்தட்ட அதே போன்றதொரு கதை என்றாலும், இதில் அதன் போக்கு சீராக இல்லை.

’ஸ்பூஃப்’ என்றாலும், பாதி ஹாரர் படமாகவே ’இடியட்’ எடுத்துக்கொள்ளப்படும் என்பதை மறந்திருக்கிறார் இயக்குனர்.

இதனால், வழக்கமான பேய் படங்களுக்கான லாஜிக்குகள் கூட இதில் சுத்தமாக இல்லை. பல பாத்திரங்கள் அப்படியே ‘அம்போ’வென விடப்பட்டிருக்கின்றன.

அதே போல, ஒருவரது முட்டாள்தனத்தை கண்டு சிரிப்பதோடு அதனை எவ்வாறு நாம் கையாள வேண்டும் என்று புரிய வைப்பதைத் தொடாமல் விட்டிருக்கிறது திரைக்கதை.

கதையின் பெரும்பகுதி பேய்களைச் சுற்றியே இருக்குமாறு அமைக்கப்பட்டு, பல்வேறு பாத்திரங்கள் அங்கிருந்து விடுபடுவதற்கான விடையைத் தேடுவதாக வடிவமைக்கப்பட்டிருந்தால் ‘இடியட்’ இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

என்ன செய்வது, முந்தைய படங்களில் அந்த நேர்த்தியை கொட்டியிருப்பதால் இதில் அதனை கொஞ்சம் தவறவிட்டிருக்கிறார் ராம்பாலா.

ஆனாலும், சிரிக்கலாமா என்ற கேள்வியுடன் தியேட்டருக்கு வருபவர்களை ஏமாற்றவில்லை இந்த ‘இடியட்’!!

  • உதய் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment