மருதகாசி எனும் தீர்க்கதரிசி!

தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர்.

தான் எதிர்பார்க்கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார்.

தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமின்றி, பாடல் வரிகளும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில், எம்.ஜி.ஆர். அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்.

எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும், எம்.ஜி.ஆர். போதும் என்று சொல்லும் வரை, அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பாடல் வரிகளை அடித்துத் திருத்தி, எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து, பாடல் எழுதுவது வரை, இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையும் அவசியமாக இருந்தது. அந்த அளவுக்கு, எம்.ஜி.ஆர். கசக்கிப் பிழிந்து விடுவார்.

அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான், மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட, எம்.ஜி.ஆரின் பழைய பாடல்கள், இன்றைய இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன என்றால் அது மிகையல்ல.

எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்த படம் ‘நினைத்ததை முடிப்பவன்’.

இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில், அவர்களை வேவு பார்க்க வந்து, மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில், பாடுவதாக ஒரு பாடல் காட்சி.

அருமையான ஒரு மெட்டமைத்து, எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார் எம்.எஸ்.வி.

அந்த மெட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

ஒரு பிரபலமான கவிஞரை, அந்த மெட்டுக்கு பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர். காட்சிச் சூழலை நன்கு கேட்டு, தெரிந்த கொண்ட அந்த கவிஞர், பாடல் எழுதி முடித்ததும் எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார்.

பாடல் வரிகள் நன்றாக இருந்தும், எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால், மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும், சரணங்களையும் எழுதச் சொன்னார்.

ஆனாலும், எம்.ஜி.ஆர். முகத்தில் திருப்தி இல்லை. வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து, இதே மெட்டுக்கு எழுத வைத்தனர். அந்தப் பாடலும் திருப்தி இல்லை.

இதே போல், அந்த நாளில் பிரபலமாக இருந்த ஆறு கவிஞர்கள், அந்த மெட்டுக்கு பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர். எந்த வரிகளுமே எம்.ஜி.ஆரை ஈர்க்கவில்லை.

கடைசியில், ஒரு மூத்த கவிஞரை கூப்பிட்டு எழுதச் செய்தனர்.

பாடல் வரிகளை கேட்ட எம்.ஜி.ஆர். முகத்தில் பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது. “இது தான். இதே தான். நான் எதிர்பார்த்தது…” என்றார் எம்.ஜி.ஆர்.

உடனே பாடல் ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். உற்சாகம் பொங்க.

அந்தப் பாடல் இது தான்…

“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது…
அறிவை நீ நம்பு!
உள்ளம் தெளிவாகும் அடையாளம்

காட்டும் பொய்யே சொல்லாதது…”

– எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்பை, பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் கவிஞர் மருதகாசி!

கவிஞர் மருதகாசி ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மேலக்குடிகாடு கிராமத்தில் 1920 -ல் பிறந்தார். இவருக்கு முன் பிறந்த குழந்தைகள் இறந்துவிட இவரது பெற்றோர் இவருக்கு ஊரார் சொன்னார்கள் என்று மூக்கு குத்தி வளர்த்தார்கள்.

கும்பகோணத்தில் படிப்பு. கிராம முன்சீப்பாக இருந்தவர்; அத்துடன், பாடல்களும் எழுதி வந்தார். 1947-ல், கருணாநிதி எழுதி, நடித்த ‘ஒரே முத்தம்’ நாடகத்திற்கு, ஒரு பாடல் எழுதினார்.

நாத்திகக் கருத்துடன் அந்தப் பாடல் இருந்தது கண்டு ரசித்த கருணாநிதி, “பாடல் எழுதியவரைக் கூப்பிடுங்கள்…” என்றார்.

நெற்றியில் விபூதிப் பட்டை, கதராடை அணிந்திருந்தவரை பார்த்தவுடன் சிரித்த கருணாநிதி,

“நீங்கள் தான் இந்தப் பாட்டை எழுதியவர் என்றால், அடித்து விடப் போகின்றனர்…” எனக் கூறி, அந்தப் பாடலை ஏற்றுக் கொண்டார்.

அதே சமயம், நாடக மேடையில், மந்திரி குமாரி நாடகத்தையும் நடத்திக் கொண்டிருந்தார் கருணாநிதி.

இதை பார்த்த மருதகாசி, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரிடம், “கருணாநிதியை அழைத்து, மந்திரி குமாரி நாடகத்தை அவரின் கதை வசனத்திலேயே படமாய் எடுங்கள். வெற்றி பெறும்” என்றார்.

இந்தப் படத்திற்கு, மருதகாசி எழுதிய பாடல்களில் ஒன்றான, திருச்சி லோகநாதன் – ஜிக்கி பாடிய, “வாராய்… நீ வாராய்… போகும் இடம் வெகு துாரம் இல்லை… நீ வாராய்…” இன்று வரை பிரபலம்.

கவிஞர் சுரதாவின் கதை வசனத்திலும், எஃப் நாகூர் இயக்கத்திலும் உருவான பாகவதரின் ‘அமரகவி’ படத்திற்கு மருதகாசிதான் பாடல்கள் எழுதினார்.

அதில் பாகவதருக்கு மருதகாசி எழுதிய “சுந்தரி செளந்தரி நிரந்தரியே” என்ற பாடல் இன்றும் மிகவும் புகழ் பெற்றது.

உடுமலை நாராயண‍கவி, காமாட்சி சுந்தரம் ஆகிய இருவரும்தான் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் ஆஸ்தான பாடல் ஆசிரியர்கள்.

ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனையே தனது தமிழால் கவர்ந்த மருதகாசி, அவரது படத்திற்கும் பாடல் எழுதிப் புகழ் பெற்றிருக்கிறார்…

“பாடல் எழுதி வாருங்கள், பிடித்தால் வைத்துக் கொள்வேன், இல்லையென்றால் உடுமலையாரையே அழைத்து எழுதச்சொல்வேன்” என்ற வாய்மொழி ஒப்பந்தத்துடன் மருதகாசியைத் தன் படத்திற்குப் பாடல் எழுதப் பணித்தார் என்.எஸ். கிருஷ்ணன்.

பாடலின் சூழ்நிலையைக் கலைவாணர் விளக்க, கவி நயத்தோடு பாடலை எழுதி முடித்தார் மருதகாசி.

பாடலை ரசித்த கலைவாணர், “உடுமலை இருந்த இதயத்தில் பாதியை உங்களுக்குக் கொடுத்து விட்டேன்” எனக்கூறி, மருதகாசியை அள்ளி அரவணைத்துக் கொண்டார்.

அந்த அரவணைப்புதான் ‘ராஜா ராணி’ படத்தின் சிரிப்புப் பாடலாக சிறகசைத்தது.

“சிரிப்பு இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு”

தன்மானம் இல்லாதவர்கள் கவிஞர்களாக இருக்க முடியாது. தமிழைப் படித்தவர்கள் வறுமையைத் தாங்கிப் பிடிக்கலாம். ஆனால், வசவை?

‘விடிவெள்ளி’ படம். இளமை இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான படம். சிவாஜி, சரோஜாதேவி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்திற்கு ஏ.எம்.ராஜா இசை.

படத்தில் ஒரு பாடல் மெட்டுக்குக் கட்டுப்படாமல் போக பல மெட்டுகள் மாறிக்கொண்டே இருந்தன.

ஏ.எம்.ராஜாவுக்கு ஒரு கட்டத்தில் கோபம் வந்துவிட்டது. கவிஞரும் கோபப்பட்டார். வாக்குவாதம் முற்றியது. இனி நீங்கள் இசை அமைக்கும் படங்களுக்கு நான் பாடல் எழுதமாட்டேன் என அங்கிருந்து கிளம்பினார் மருதகாசி.

அந்தப் பாட்டு, ”கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை” என்பதுதான். ஆனால், இந்தப் பாடல் மருதகாசிக்கும், ராஜாவுக்கும் இருந்த அன்பைக் கெடுத்துப் பார்த்து விட்டது.

மருதகாசி, கே.வி.மகாதேவன், நடிகர் வி.கே.ராமசாமியின் தம்பி முத்துராமலிங்கம், ‘வயலின்’ மகாதேவன் ஆகிய 4 பேரையும் பங்குதாரர்களாகக் கொண்ட ‘எம்.எம்.புரொடக்ஷன்ஸ்’ என்ற படக் கம்பெனி தொடங்கப்பட்டது.

இந்தக் கம்பெனி சார்பில் ‘அல்லி பெற்ற பிள்ளை’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘டாங்கா வாலா’ என்ற படத்தின் கதையைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டது.

இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, பண்டரிபாய் ஆகியோர் நடித்தனர். திரைக்கதை – வசனம் ஏ.பி.நாகராஜன். இயக்கம் கே.சோமு. பாடல்களை மருதகாசி எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

இந்தப் படத்தில், ஒரு குதிரை முக்கிய கதாபாத்திரமாக நடித்தது. மருதகாசி மங்களூர் சென்று, ஒரு வெள்ளைக் குதிரையை வாங்கி வந்தார். குதிரையைப் பார்த்த சின்னப்ப தேவர், “குதிரைக்கு சுழி சரியில்லையே! விற்றுவிடுங்கள்” என்றார். ஆனால் திட்டமிட்டபடி, குதிரையை படத்தில் நடிக்க வைத்தார்.

ஒரு குழந்தை தொட்டிலில் படுத்திருக்க, தொட்டில் கயிற்றை குதிரை தன் வாயினால் இழுத்து, குழந்தையைத் தூங்க வைக்கும். அப்போது குதிரையின் மன நிலையை விளக்கும் விதமாக, “எஜமான் பெற்ற செல்வமே” என்ற பாடலை மருதகாசி எழுதினார்.

அவரும், கே.வி.மகாதேவனும் விரும்பிக் கேட்டுக் கொண்டதால், பாடலை பிரபல இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் பின்னணியில் பாடினார்.

6 மாத காலத்தில் படத்தை முடித்து ரிலீஸ் செய்வதாக விநியோகஸ்தர்களுடன் படக் கம்பெனி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் படம் முடியவில்லை. படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே போயிற்று. கடனும், வட்டியும் ஏறிக்கொண்டே இருந்தன.

பாடல் எழுதுவதில் மருதகாசி ‘பிஸி’யாக இருந்த நேரம். ஆனால், அவருக்கு வேண்டாத சிலர்,

“மருதகாசி சொந்தப் படத் தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறார். இனி வெளிப்படங்களுக்கு குறிப்பிட்ட நாளில் பாடல் எழுதித்தர மாட்டார்” என்று பிரச்சாரம் செய்தனர்.

இதனாலேயே புதுப்பட வாய்ப்புகளும் குறைந்தன. இரண்டு ஆண்டு காலம் தயாரிப்பில் இருந்த ‘அல்லி பெற்ற பிள்ளை’ 31.07.1959-இல் வெளிவந்தது. படம் ஓரளவு நன்றாக இருந்தும், தோல்வியைத் தழுவியது.

‘அல்லி பெற்ற பிள்ளை’ படத்தினால் மருதகாசி நஷ்டம் அடைந்ததை அறிந்த அவரது நண்பரும், பின்னர் நிறைய படங்கள் இயக்கியவருமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சந்தித்து ‘தூண்டா மணிவிளக்கு’ என்ற கதையை கொடுத்து, அதை படமாக்கச் சொன்னார்.

மருதகாசியும் சம்மதித்து, கதைக்கு அவரையே வசனம் எழுதச் சொன்னார்.

பூஜை போட்டு, நடிகர், நடிகைகளுக்கு அட்வான்சும் கொடுக்கப்பட்டது.

படத்தில் சிவாஜிகணேசன், சாவித்திரி, ரங்காராவ், அசோகன், தாம்பரம் லலிதா போன்றோர் நடிக்க இருந்தார்கள். ஆனால் ஏனோ, கடைசியில் மருதகாசி பின்வாங்கி விட்டார்.

பின்னர் இந்தக் கதையை கோபாலகிருஷ்ணனே சொந்தமாகத் தயாரித்தார். அந்தப் படம்தான் ‘கற்பகம்’. அந்தப் படம் வெள்ளி விழா கண்டது. அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, கோபாலகிருஷ்ணன் ‘கற்பகம்’ ஸ்டூடியோவையே கட்டினார்!

சொந்தமாகப் படம் எடுத்து பெரும் இழப்பு ஏற்பட்ட போதும் மருதகாசி சிறிதும் கவலைப்படவில்லை. விவசாயம் இருக்கிறது. பார்த்துக்கொள்கிறேன் என்று கிளம்பி விட்டார். அந்த மனநிலையை விளக்கும் பாடல் ஒன்றை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘ஆயிரம் ரூபாய்’ படத்தில் எழுதினார்.

“ஆனாக்கா அந்த மடம்.
ஆகாட்டி சந்தை மடம்!
அதுவும்கூட இல்லாக்காட்டி
பிளாட்பாரம் சொந்த இடம்!”

– என்று தன் சொந்த விவசாய வாழ்க்கை ஆதாரமாக இருப்பதை மறைமுகமாக உணர்த்தி பாடிவிட்டுத்தான் போனார்!

“கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி”,

“மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி”,

“ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே”,

“மாட்டுக்கார வேலா உன் மாட்ட கொஞ்சம் பாத்துக்கடா”

– என்று வேளாண் பெருமக்களின் பெருமையைக் கூறும் பல பாடல்களைத் தந்தவர் மருதகாசி.

250 படங்களில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய மருதகாசி
மரணத்திற்குப் பிறகு மயானம் எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறது என்பதையும் எழுதி வைத்துவிட்டுத் தான் போனார்.

‘ரம்பையின் காதல்’ என்ற படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இதுதான்…

சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே!

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment