பான் இந்தியா படங்கள் வரமா, சாபமா?

வரும் ஏப்ரல் 14-ம் தேதி இந்தியத் திரையுலகை அதிரவைக்கப் போகும், கே.ஜி.எப். 2 திரைப்படம் வெளியாகப் போகிறது.

அதிர வைக்கக் காரணம் – இது பான் இண்டியா திரைப்படம் என்பதுதான்!

பான் இன்டியா படம் என்றால் என்ன?

ஒரு மொழியில் தயாரிக்கப்படும் படம், சில காலம் கழித்து பிற மொழிகளில் ரீமேக் ஆகும் அல்லது டப்பிங் ஆகும்.

ஆனால், ஒரே நேரத்தில் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் வெளியிடப்படுவதுதான் பான் இன்டியா திரைப்படம்.

பொதுவாக திரைத்துறையில் வணிக ரீதியான புது முயற்சியை இந்தி சினிமாவான பாலிவுட் தான் துவங்கி வைக்கும். ஆனால் இந்த பான் இன்டியா கான்செப்ட்  தெற்கிலிருந்து உருவானது.

ஆம்.. இதை ஆரம்பித்து வைத்தவர், தெலுங்கில் பிரபலமான ராஜமவுலி. இவரது பாகுபலிதான் முதல் பான் இன்டியா திரைப்படம்.

பிரபாஸ், ராணா டகுபாடி, அனுஷ்கா, சத்தியராஜ், ரம்யா கிருஷ்ணன் என பல மொழிகளில் பிரபலமான நடிகர்கள்; பிரம்மாண்டமான கிராபிக்ஸ் என அசத்திய பாகுபலி 180 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது.

வசூல் ரூ.650 கோடி!

இதன் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அடுத்த வருடமே 2017ல் – பாகுபலி 2 வெளியானது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி 2 வெளியானது.

2017 மார்ச் இறுதியில் வெளியான இப்படம், நான்கே நாட்களில் வசூல் 500 கோடி ரூபாயை தாண்டியது.

ரூ.250 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் மொத்த வசூல், ரூ. 1573 கோடி!

பான் இன்டியா திரைப்படத்தின் மீது திரைத்துறையினருக்கு மோகம் வந்தது இப்படித்தான்.

பாகுபலி 1 மற்றும் 2 படங்களைத் தொடர்ந்து அடுத்த பான் இன்டியா படமாக, கர்நாடகத்தில் இருந்து வெளியானது கே.ஜி.எப்.!

கன்னட ரசிகர்களால் ‘ராக்கிங் ஸ்டார்’ என கொண்டாடப்படும் நடிகர் யஷ் நாயகனாக நடித்த திரைப்படம்.

பிரஷாந்த் நீல் இயக்கி இப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நாளில் வெளியானது. திரையிட்ட இடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பு.

அதன் வெற்றிதான், வரும் 14ம் தேதி கே.ஜி.எப். 2 வெளியாகக் காரணம்.

சமீபத்தில் வெளியாகி ஒடிக்கொண்டு இருக்கும், ஆர்.ஆர்.ஆர். படமும் பான் இண்டியா படம்தான்.

இந்த பான் இண்டியா படங்களின் வரவு, இந்திய திரைத்துறையில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

முதல் விசயம் செலவு. குறைந்த பட்சம் ரூ.200 கோடிக்கு குறைந்து எடுப்பதில்லை. காரணம், நிஜ பிரமாண்டம், கிராபிக்ஸ் பிரமாண்டம், அடுத்து பிற மொழியில் பிரபலமான நடிகர்களை முக்கிய கதாபாத்திரத்திலோ, சிறப்பு தோற்றத்திலோ நடிக்க வைப்பது – அவர்களது சம்பளம்.

அதோடு இயக்குநர், ஒளிப்பதிவாளர் என டெக்னீசியன்களின் சம்பளமும் ஹெவி. அடுத்து விளம்பரம். படத்தின் பட்ஜெட்டில் கணிசமான பங்கை விழுங்குவது இதுதான்.

இத்தனைக்குப் பிறகு படம் வெற்றி அடைந்தால், எல்லோரும் கொண்டாடுவார்கள். தோல்வி அடைந்தால் முதலுக்கே மோசம். அந்தத் தயாரிப்பாளர் காலத்துக்கும் எழுந்திருக்க முடியாது.

அப்படி ஒன்று நடந்தால், பான் இண்டியா மோகம், விரைவில் காலாவதி ஆகிவிடும்.

பான் இண்டியா படங்கள் திரையுலகைக் கடுமையாக பாதிக்கிறது.

திரைத்துறையை வாழ வைப்பதே சிறு பட்ஜெட் படங்கள்தான். அதில் தான் திரைத்துறையினருக்கு வேலை வாய்ப்பு அதிகம். தவிர படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம்.

ஆனால் இந்த பான் இண்டியா படங்கள், காட்டாறு போல, சிறு படங்களை அடித்து துவம்சம் செய்து விடுகிறது. இவை வெளியாகும் போது, நாட்டில் வேறு எந்தப் படமும் வெளியாகாது.

திரையரங்கு கிடைக்காது என்பதோடு, படத்தை அந்தத் தருணத்தில் வெளியிட சிறு பட தயாரிப்பாளர்கள் முன்வர மாட்டார்கள்.

கொஞ்சம் தள்ளி வெளியிடலாம் என்பதற்கும் அடுத்த பான் இண்டியா படங்கள் வந்துவிடும்.

இடையில் வெளியிடலாம் என்றால் தேங்கிக் கிடந்த சிறு பட்ஜெட் படங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் போட்டியிட வேண்டிய நிலை.

ஆக, பான் இண்டியா படங்கள் திரைத்துறைக்கு நல்லது செய்வதாக சொல்ல முடியாது.

இந்த நிலையில் தெலுங்கு, கன்னடம் என வலம் வந்த பான் இண்டியா மோகம், தமிழையும் விட்டு வைக்கவில்லை.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், விக்ரம் நடிக்கும் கோப்ரா, ஷங்கர் – கமல் கூட்டணியில் இந்தியன் 2, சூர்யா – வெற்றி மாறன் கூட்டணியில் ஆகியவை தமிழில் உருவாகும் பான் இண்டியா படங்கள்.

சில நூறு கோடியில் உருவாகும் இந்த பான் இண்டியா படங்களின் அடிப்படை, பிரம்மாண்டம், அதிரவைக்கும் க்ளைமாக்ஸ் ஆகியவைதான்.

ஆனால் கறுப்பு வெள்ளை காலத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ரைட்டர் (தமிழ்) திரைப்படம் வரை, எளிய கதையிலேயே உணர்வு ரீதியான பிரமாண்டத்தையும் மன அதிர்வையும் அளித்தன.

இது போன்ற எளிய – சுவாரஸ்யமான படங்களை ரசிகர்கள் விரும்பினாலும், ஏனோ ‘பிரமாண்ட’ இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் விரும்பவில்லை.

அதுதான் சோகம்!

-டி.வி.சோமு

Comments (0)
Add Comment