சாதாரண மக்களைப் பொறுத்தவரை, சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அதற்குப் பஞ்சம் வைக்காத எந்தவொரு படைப்பும் சூப்பர்ஹிட். அதிலும், ‘டபுள் ஆக்ஷன்’ திரைப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
டபுள் ஆக்ஷன் என்றவுடன் இரண்டு மடங்கு சண்டைக்காட்சிகள் இருக்கும் என்று நேரடி அர்த்தம் கொள்ளக்கூடாது. படத்தில் நாயகனோ அல்லது நாயகியோ இரண்டு வேடங்களில் நடித்தால், இந்த பெயர் தானாக ஒட்டிக்கொள்ளும்.
தயாரிப்பு தரப்பு முதல் டிக்கெட் கவுண்டரில் வியர்க்க விறுவிறுக்க காத்துக் கிடக்கும் கடைக்கோடி ரசிகன் வரை அனைவரது எதிர்பார்ப்புகளையும் தாங்கும் வல்லமை கொண்டவை இவை. அதே நேரத்தில், திரைக்கதை சொதப்பலாக இருப்பதாகச் சிறு பேச்சு எழுந்தாலும் படுதோல்வி அடையும் அபாயம் இதிலுண்டு.
தமிழில் ‘உத்தமபுத்திரன்’ (பி.யு.சின்னப்பா), அபூர்வ சகோதரர்கள் (எம்.கே.ராதா), உத்தமபுத்திரன் (சிவாஜி), நாடோடி மன்னன் (எம்ஜிஆர்) உள்ளிட்டவை ஏற்கனவே இரட்டை வேடப் படங்களுக்கான நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தாலும், அரச கதைகளில் இருந்து விடுபட்டு சமகாலத்தைப் பிரதிபலித்த வகையில் வித்தியாசப்பட்டது ‘எங்க வீட்டுப் பிள்ளை’.
என்று பார்த்தாலும் இனிக்கும் வரிசையில் இடம்பெறும் திரைப்படங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதிலொன்றான இத்திரைப்படம் நடிப்புக் கலைஞர்கள், இயக்குனர்கள், திரைக்கதையாசிரியர்கள் என்று அனைவருக்குமான அகராதியாகவும் திகழ்கிறது.
இரட்டை வேடப் படங்களில் இரண்டு பாத்திரங்களின் குணாதிசயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்க வேண்டுமென்பது எழுதப்படாத விதி.
அதுவே, திரையில் வித்தியாசம் தென்பட்டவுடன் காதைக் கிழிக்கும் விசில் சத்தத்துக்கு உத்தரவாதம் தரும். அந்த வகையில், இப்படத்தில் ராமு, இளங்கோ என்று இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் எம்ஜிஆர்.
தெலுங்கில் என்.டி.ஆர். நடித்த ‘ராமுடு பீமுடு’வின் தமிழாக்கமே ‘எங்க வீட்டுப் பிள்ளை’.
திக்க வைக்கும் முரண்!
பூஞ்சோலை ஜமீனை சேர்ந்தவர்கள் ராமு மற்றும் அவரது சகோதரி சுசீலா (பண்டரிபாய்). சுசீலாவின் கணவர் கஜேந்திரன் (எம்.என்.நம்பியார்) ஜமீனுக்குச் சொந்தமான ஆலைகளின் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.
கல்வியறிவு பெறாமல், வெளியிடங்களுக்குச் செல்லாமல், அப்பாவியாகவும் கோழையாகவும் வளர்க்கப்பட்டவர் ராமு. அவரை ஒரு அடிமை போல நடத்துகிறார் கஜேந்திரன்.
ஒருநாள் தன்னிடமுள்ள சொத்துகள் அனைத்தையும் சகோதரியின் கணவர் பிடுங்கிக் கொள்ளத் திட்டமிடுவதை அறியும் ராமு, வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
அதே நேரத்தில், வல்லவன் காடு எனும் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ தவறுதலாக ராமுவின் இடத்திற்கு வருகிறார்.
ராமுவும் இளங்கோவும் ஒரே உருவத்தைக் கொண்டவர்கள் என்றாலும், குணத்தில் இருவரும் நேரெதிர்.
எதையும் எதிர்க்கும் துணிவு இளங்கோவிடம் உண்டு. இதையறியாமல் இளங்கோவை எதிர்கொள்கிறார் கஜேந்திரன்.
ராமு யார் என்று தெரியாவிட்டாலும், பூஞ்சோலை ஜமீனில் நிகழும் அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டுமென்று உறுதி கொள்கிறார் இளங்கோ.
அதன்பின், ராமுவும் இளங்கோவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள் என்பது வரை நீளும் இக்கதை இறுதியில் சுபமாக முடிவடைகிறது.
எப்போதும் எங்க வீட்டுப் பிள்ளை!
‘வாத்தியார்’, ‘மக்கள் திலகம்’, ‘திரையுலக வள்ளல்’ என்று பல அடைமொழிகளில் எம்ஜிஆர் அழைக்கப்பட்டாலும், அவரைத் தனித்துவமாக உணரச் செய்வது ‘எங்க வீட்டுப் பிள்ளை’.
ஒரு ஆக்ஷன் ஹீரோ எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருப்பவை எம்ஜிஆரின் திரைப்படங்கள் என்றால் அது மிகையல்ல.
சமகாலத்தில் சிவாஜி கணேசனும் ஜெமினி கணேசனும் தேர்ந்தெடுத்த கதைகளில் இருந்து மாறுபட்டதோடு, தன் பாணி நடிப்புக்குத் தீனி போடும் வகையில் திரைப்படங்களைத் தந்தவர் எம்ஜிஆர்.
இப்படத்தின் தொடக்கக் காட்சியில், விழா நடக்குமிடத்தில் நடுக்கத்துடன் ஒரு வலது கை காட்டப்படும். அதன் தொடர்ச்சியாக, ராமு எனும் உலகமறியா வாலிபரின் முகத்தை ஏந்தி வருவார்.
தன் கணவரிடம் ராமு படும் கஷ்டங்களைக் கண்டு மனம் வருந்தும் சுசீலா ‘ஆண்டவனே, எங்களைக் காப்பாத்த யாருமேயில்லியா’ என்று கதற.. அதன் தொடர்ச்சியாக ‘நான் இருக்கேன்’ என்றபடி இளங்கோ திரையில் தோன்றுவார். மொத்த திரைக்கதையின் சாராம்சமும் இதில் அடங்கிவிடும்.
’தாவணிக் கனவுகள்’ படத்தில், இக்காட்சியைப் பிரதியெடுத்து தனது குருநாதர் பாரதிராஜாவின் பாதம் பணிந்திருப்பார் இயக்குனர் கே.பாக்யராஜ்.
ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பெரும்பான்மை சமூகம், ‘திருப்பி அடி’ எனும் குரல் கேட்டால் எப்போதும் உத்வேகமடையும்.
இப்படத்தில், நம்பியாரிடம் சவுக்கடி வாங்கும் எம்ஜிஆர் எப்போது திருப்பியடிப்பார் என்ற ரசிகனின் எதிர்பார்ப்பு, இளங்கோ வெகுண்டெழும்போது முற்றுப் பெறும்.
’எங்க வீட்டுப் பிள்ளை’ என்றென்றைக்குமான கமர்ஷியல் உதாரணமாகத் திகழ்வதற்கு முக்கியக் காரணம் எம்ஜிஆரின் நடிப்பு.
இயல்பிலிருந்து சற்று விலகியிருந்தாலும், ரசிகர்களிடம் துள்ளலை ஏற்படுத்தும் அவரது நடிப்பு இப்படைப்பிலும் நிறைந்திருக்கிறது.
சாப்பிடுவதில் நாசூக்கு வேண்டும் எனும் ‘டேபிள் மேனர்ஸ்’க்கு எதிராக, எம்ஜிஆர் வேட்கையுடன் உணவுண்ணுவது போல கிட்டத்தட்ட நான்கு காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
நிஜ வாழ்க்கையில் சக மனிதர்களின் பசியறிந்து உணவுண்ணுமாறு வற்புறுத்தும் இயல்பு கொண்டவர் எம்ஜிஆர். அந்த வகையில், ‘பசி ருசியறியாது’ என்பதையே இக்காட்சிகளில் இளங்கோவின் மூலம் அவர் பிரதிபலித்ததாகத் தோன்றுகிறது.
படம் முடிவடையும்போது, ‘ஊரே இவரை எங்க வீட்டுப் பிள்ளைன்னு கொண்டாடுது’ என்பார் தங்கவேலு. அன்றைய ரசிகர்கள் எம்ஜிஆர் மீது கொண்டிருந்த அபிமானத்தை வெளிப்படுத்தியது இது.
மனதில் நிற்கும் பாத்திரங்கள்!
பண்டரிபாய், எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், கே.ஏ.தங்கவேலு, நாகேஷ் மட்டுமல்லாமல், நாகேஷின் ஜோடியாக வரும் மாதவி, நம்பியாரின் சகோதரியாக வரும் சீதாலட்சுமி, வளர்ப்புத்தாயாக வரும் ருஷ்யேந்திர மணி,
பாட்டியாக வரும் ஹேமலதா, பேபி ஷகீலா உட்பட ஒவ்வொருவருக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
இயக்குனர் வேடத்தில் நடித்த கே.கே.சௌந்தரும் கூட இந்த லிஸ்டில் அடங்குவார்.
‘எங்க வீட்டுப் பிள்ளை’ வசனங்களை ஆடியோ கேசட்டில் கேட்டவர்கள் இதனை நன்கறிவர். ‘அம்மாடி பொண்ணா இது’ என்று சீதாலட்சுமி வாய் பிளப்பது, ‘சொல்லு மாம்மா..’ என்று ஷகீலா இரைவது, ‘உன்னை யாரோ அடிச்சு தூக்கிட்டு போனதா சொன்னாங்களே’ என்று தெலுங்கு கலந்த தமிழில் ருஷ்யேந்திரமணி பேசுவதெல்லாம் அடிமனதோடு ஒட்டிக்கொள்கின்றன.
இப்படத்தில் லீலா, சாந்தா பாத்திரங்களில் நடித்த சரோஜா தேவியும் ரத்னாவும் டூயட் பாடுவதோடு நின்றுவிடாமல் கோபம், ஆத்திரம், அழுகை என்று வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர்.
இருவரது நடிப்பு மட்டும் கொஞ்சம் மிகையாகத் தோன்றக் காரணம் கால மாற்றமே.
செல்வக் குடும்பத்தில் செல்லமாக வளர்ந்த ஒரு இளம்பெண் என்ற உருவகத்துக்கு உருவம் வார்த்திருக்கிறது சரோஜாதேவி ஏற்ற ‘லீலா’ பாத்திரம்.
எத்தனையோ பாத்திரங்களில் நடித்திருந்தாலும், சரோஜாதேவி என்றவுடன் உடனடியாக நம் நினைவுக்கு வருவது இப்படம்தான். இன்றும், பல நாயகிகளுக்கு இதுவே ‘ரெஃபரன்ஸ்’.
வார்த்தைகள் குளறுவது போல படம் முழுக்க வசனம் பேசியதோடு, இரண்டு கால்களும் வெளிப்புறமாக வளைந்தது போல நடந்து செல்லும் மேனரிசத்தை இதில் வெளிப்படுத்தியிருப்பார் நாகேஷ்.
போலவே, பெரும்பாலான காட்சிகளில் உதட்டை குவித்து வைத்திருப்பது போன்ற பாவனையை வெளிப்படுத்தியிருப்பார். இதெல்லாமே அக்மார்க் நாகேஷ்தனம்!
நாகேஷ், தங்கவேலு ஆகியோர் ‘டைமிங் காமெடி’க்கு புகழ் பெற்றவர்கள். இருவரோடும் போட்டி போடும் வகையில், சரோஜா தேவியுடன் பேசும் காட்சிகளில் ‘ஜஸ்ட் லைக் தட்’ பாணியில் வசனம் பேசியிருப்பார் எஸ்.வி.ரங்காராவ்.
‘எங்க வீட்டுப் பிள்ளை’யின் மூலமான ‘ராமுடு பீமுடு’வில் நாயகிகளில் ஒருவராக நடித்த எல்.விஜயலட்சுமி, இதில் ’கண்களும் காவடி சிந்தாகட்டும்’ பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
அற்புதமான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு!
‘எங்க வீட்டுப் பிள்ளை’ மட்டுமல்லாமல் அதன் மூலமான ‘ராமுடு பீமுடு’, இந்தி பதிப்பான ‘ராம் அவுர் ஷ்யாம்’ படங்களையும் இயக்கியவர் தபி சாணக்யா.
இம்மூன்று படங்களையும் ஒருசேர பார்த்தால், ஒவ்வொன்றிலும் கதையம்சம் முதல் கேமிரா கோணங்கள் வரை பல விஷயங்கள் மாறுபட்டிருப்பதை அறியலாம்.
அந்த வகையில் ஒரு திரைப்படத்தை வெற்றிகரமாக ரீமேக் செய்வது எப்படி என்பதற்கு இயக்குனர் தபி சாணக்யாவின் உழைப்பு ஒரு பாடம்.
இளங்கோ பாத்திரத்துக்கு பேய் பிடித்திருப்பதாகக் கருதி அவரது தாய் மாந்திரீகவாதியிடம் அழைத்துச் செல்லும் காட்சி ராமுடு பீமுடுவிலும், ராம் அவுர் ஷ்யாமிலும் இடம்பெற்றிருந்தது.
திமுகவில் எம்ஜிஆர் தீவிரமாகச் செயல்பட்ட காலமென்பதால், அவருக்காக அக்காட்சியைத் தவிர்த்திருப்பார் சாணக்யா.
ரத்னா வரும் காட்சிகள் குறைவாக இருப்பது ஒரு குறை என்றாலும், அதனை ரசிகர்கள் உணராதவகையில் திரைக்கதை அமைத்தது அவரது சாமர்த்தியம்தான். மற்ற இரு பதிப்புகளில் இப்பாத்திரத்தை ஏற்ற விஜயலட்சுமிக்கும் மும்தாஜுக்கும் அந்த குறையில்லை.
இப்படத்தின் பல காட்சிகளில் ஒரு கதாபாத்திரம் திரையை விட்டு அகன்றவுடன், மீதமிருக்கும் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும்.
‘நறுக்’கென்று ‘கட்’ பண்ணுகிறேன் பேர்வழி என்றில்லாமல் கதையோட்டம் ரசிகர்களின் நெஞ்சில் படருமாறு சி.பி.ஜம்புலிங்கத்தின் படத்தொகுப்பு அமைந்திருக்கும். ‘கண்களும் காவடி’ பாடல் அவரது திறனுக்கான மற்றொரு சான்று.
பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்வதில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர்.
ராமுடு பீமுடு கருப்பு வெள்ளை திரைப்படம் என்பதால், ஈஸ்ட்மென் கலரில் பளிச்சென்ற வண்ணங்கள் திரையில் விரவியிருப்பதற்கு கடுமையாக மெனக்கெட்டிருப்பது தெரியும்.
சரோஜா தேவியிடம் இருந்து பிடுங்கப்பட்ட பேக்கை எம்ஜிஆர் மீட்டபிறகு, ஒரு போலீஸ் அதிகாரி இருவரையும் காற்றில் ஏற்றி அனுப்புவார்.
இக்காட்சியில், ஒரு தெருவின் அழகை மேலிருந்து கீழாக பார்ப்பது போல படமாக்கியிருப்பார்.
‘நான் ஆணையிட்டால்’ பாடலில் வரிகளுக்கேற்ப ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருப்பது, எம்ஜிஆருக்கு வின்சென்ட் செய்த மரியாதை என்றால் மிகையல்ல.
அதற்கு முன்பாக நடக்கும் சண்டைக்காட்சியில் எம்ஜிஆரிடம் அடிபட்டு நம்பியார் கீழே விழுவதை, தரையின் அடியில் இருந்து காட்டும் கோணம் இப்போதும் பிரமிக்க வைக்கும்.
மூலப்படத்தில் இருந்து பெருமளவு இப்படம் விலகியிருக்க காரணம், வண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்த எஸ்.கிருஷ்ணாராவின் கலையமைப்பு.
அதேபோல, காட்சிக்கு நடுவே படம்பிடித்தது போல இப்படத்துக்கான ஸ்டில்களை தத்ரூபமாக தந்திருக்கிறார் ஆர்.என்.நாகராஜராவ்.
இப்போதும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவை, இப்படத்தில் அவர் அணிந்து வரும் ஆடைகள்.
சட்டையின் பக்கவாட்டில் கோடு கிழித்தாற்போன்று வைக்கப்பட்ட ‘ஸ்லாக்’ முதல், உடலோடு ஒட்டிய கருப்பு நிற ‘சூட்’ வரை அனைத்தும் அவரை பாந்தமாகக் காட்டியிருக்கும்.
இதற்கு ‘காஸ்ட்யூம் வடிவமைப்பு’ மேற்கொண்ட எம்.ஜி.நாயுடு, ரஹிமானுக்கு தான் எம்ஜிஆர் ரசிகர்கள் நன்றி சொல்ல வேண்டும்.
1964 மே 21ஆம் தேதியன்று வெளியானது ‘ராமுடு பீமுடு’. ‘எங்க வீட்டுப் பிள்ளை’, 1965 ஜனவரி 14ஆம் தேதியன்று பொங்கலையொட்டி வெளியிடப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில், தெலுங்கு படத்தை தயாரித்த ராமா நாயுடுவிடம் இருந்து உரிமை பெற்று, எம்ஜிஆர் உள்ளிட்ட கலைஞர்களின் கால்ஷீட்டை வாங்கி, பொங்கலுக்கு முன்னதாக முழுப்படத்தையும் தயார் செய்தார் தயாரிப்பாளர் பி.நாகி ரெட்டி.
இந்த திறமே, பின்னாளில் தனது அரசியல் பிரவேசத்துக்கான வெள்ளோட்டமாக ‘நம்நாடு’ படத்தை தயாரிக்கும் பொறுப்பை எம்ஜிஆர் அவரிடம் தரக் காரணமானது.
மொத்தமாக 45 நாட்களில் படம்பிடிக்கப்பட்டு, இரண்டரை மாத காலத்தில் இப்படம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றது பெரும் சாதனை!
திகட்டத் திகட்ட பொழுதுபோக்கு!
அப்பாவியின் இடத்திற்கு வீரன் வருவது, வீரன் இருந்த இடத்திற்கு அப்பாவி செல்வது, சுற்றியிருப்பவர்கள் இந்த வித்தியாசத்தை அறியாமல் குழப்பமடைவது என்றிருக்கும் திரைக்கதை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்.
இந்த வித்தியாசம் திரைக்கதையில் நடமாடும் கதாபாத்திரங்களுக்கு மட்டும் தெரியாவிட்டால், அது ‘சஸ்பென்ஸ்’; ரசிகர்களான நமக்கும் தெரியாவிட்டால் அது ‘சர்ப்ரைஸ்’.
பொதுவாகவே, இரண்டு பாத்திரங்களும் இடம் மாறுவது ரசிகர்களுக்குத் தெரியும் எனும்போது சுவாரஸ்யம் கூடுதலாக இருக்கும்.
இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பார்க்கும்போதும் இவ்வுத்தி கூடுதல் உத்வேகத்தை ஏற்படுத்தும்.
இவ்விஷயத்தை கனகச்சிதமாகக் கையாண்டதாலேயே, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ எப்போதும் ஒரு ‘டபுள் ஆக்ஷன் கிளாசிக்’.
டி.வி.நரச ராஜு எழுதிய ‘ராமுடு பீமுடு’வின் மூலக்கதையை எடுத்துக்கொண்டு, இப்படத்துக்கு தமிழ் நாட்டுக்குத் தக்கபடி திரைக்கதை வசனம் எழுதியவர் சக்தி டி.கே.கிருஷ்ணசாமி.
மிக முக்கியமாக, எம்ஜிஆரின் திமுக பிடிப்பு கருத்துகளை மிக நுணுக்கமாக கதையோட்டத்துடன் கலந்த வசனங்களாகத் தந்திருப்பார்.
படப்பிடிப்பின்போது ஒரு நடிகர் வசனம் பேசத் திணறியபோது, ஒரு உதவியாளரைக் கொண்டு வசனத்தை திருத்தியிருக்கிறார் இயக்குனர் சாணக்யா.
இதனைக் கேள்விப்பட்டதும் ஆத்திரத்துடன் படத்திலிருந்து விலகுவதாகச் சொல்லி விட்டாராம் கிருஷ்ணசாமி.
அதன்பிறகு, எம்ஜிஆர் வற்புறுத்தலின் பேரில் அவரிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்தபிறகே மீண்டும் குழுவினருடன் இணைந்ததாகத் தகவல்.
மிக முக்கியமான விஷயம், இரட்டை வேடப் படங்களில் பெரும்பாலும் ஒரு முன்கதையோ அல்லது பின்பகுதியில் இடைச்செருகலாக வரும் பிளாஷ்பேக் பகுதியோ இருக்கும்.
இவ்விடத்தைக் கடப்பதுதான், இரட்டை வேடப் படங்களுக்கான திரைக்கதையை எழுதுபவர்களுக்கு மாபெரும் சவால்.
ஆனால், எங்க வீட்டுப் பிள்ளையில் வெறுமனே வசனத்தின் வழியாக ராமுவும் இளங்கோவும் ரத்த சம்பந்தமுள்ளவர்கள் என்பது விளக்கப்படும்.
அக்கால வழக்கப்படி வாய்ஸ் ஓவரிலோ அல்லது முன்கதைச் சுருக்கம் என்ற பெயரில் டைட்டில் காட்சியிலோ இத்தகவல்கள் இடம்பெறாதது நிச்சயம் ஆச்சர்யம்தான்.
அதேபோல, நாகேஷுக்கும் தங்கவேலுவுக்கும் முக்கியத்துவம் தரும் விதமாக ‘தனி ட்ராக்’ இடம்பெறவும் வகை செய்திருப்பார்.
எம்ஜிஆரை வித்தியாசமாகத் திரையில் வெளிக்காட்டிய பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், படகோட்டி, பணம் படைத்தவன், பறக்கும் பாவை படங்களுக்கான எழுத்தாக்கம் இவருடையதுதான்.
திரைக்கதையைப் போலவே இப்படத்தின் பெருவெற்றிக்கு இதில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் கூட மிக முக்கியக் காரணம்.
’நான் ஆணையிட்டால்’, ‘பெண் போனால்’, ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’, ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாடல்களை வாலியும், ‘கண்களும் காவடி சிந்தாகட்டும்’, ‘மலருக்குத் தென்றல் பகையானால்’ பாடல்களை ஆலங்குடி சோமுவும் எழுதியிருக்கின்றனர்.
ஆலையில் எந்திரங்களுக்கு நடுவே நடுநடுங்கியவாறு தங்கவேலு நடந்துவரும் காட்சியில், தங்களது பின்னணி இசையின் மூலமாக மேலும் நகைச்சுவை ததும்பச் செய்திருக்கும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை.
சொல்லில் அடங்காத வெற்றி!
’எங்க வீட்டுப் பிள்ளை’யின் வெற்றி, அதுவரை தமிழ் திரையுலகம் கண்ட சாதனைகளை அடித்து நொறுக்கியது.
இப்படத்தை திரையிட்டதன் மூலமாக, தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 லட்சம் கேளிக்கை வரியாக அரசுக்குக் கிடைத்தது.
அக்காலத்தில் சென்னையின் மக்கள்தொகை 20 லட்சம் என்றால், கிட்டத்தட்ட 12 லட்சம் பார்வையாளர்கள் இப்படத்தை கேசினோ, மேகலா, பிராட்வே ஆகிய 3 தியேட்டர்களில் ரசித்துள்ளனர்.
சென்னையில் எம்ஜிஆர் பிக்சர்ஸ்தான் இதனை விநியோகம் செய்திருந்தது.
மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூரிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ வெள்ளிவிழா கொண்டாடியது. 25 வாரங்கள் ஒரு திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவதை இன்று நினைத்துப் பார்க்கவே முடியாது.
அதிக தியேட்டர்களில் அதிக காட்சிகள் திரையிடப்படும் சூழல் இன்றிருந்தாலும் கூட, இப்படத்துக்கு கிடைத்த ‘ரீப்பீட் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்’ வேறெதற்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
‘எங்க வீட்டுப் பிள்ளை’யின் வெற்றி, இதனை இந்தியிலும் தயாரிக்க விதை போட்டது.
நாகி ரெட்டி மற்றும் சக்ரபாணி தயாரிப்பில், திலீப்குமாரை நாயகனாகக் கொண்டு ‘ராம் அவுர் ஷ்யாம்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
‘சோக நாயகன்’ என்று பெயர் பெற்றிருந்த திலீப்குமார், இப்படத்தில் நகைச்சுவையிலும் அசத்தியது இந்தி ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது.
தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்டவற்றில் ரீமேக் செய்யப்பட்டாலும், அவற்றில் அதிக வசூலைத் தந்தது ‘ராம் அவுர் ஷ்யாம்’தான்.
என்.டி.ஆரை சிறிது கூட நினைவுபடுத்தாமல் ராமுவாகவும் இளங்கோவாகவும் எம்ஜிஆர் வந்தது போல, இப்படத்தில் ராம், ஷ்யாம் வேடங்களை தனித்துவத்துடன் கையாண்டிருப்பார் திலீப் குமார்.
அதற்கேற்றவாறு, கிளைமேக்ஸ் காட்சிகள் முற்றிலுமாக மாற்றப்பட்டிருக்கும்.
ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, அன்றைய சோவியத் ரஷ்யாவில் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் திரையிடப்பட்டிருக்கிறது ‘ராம் அவுர் ஷ்யாம்’.
‘உத்தம புத்திரன்’ சிவாஜியின் சாயல் ரஜினிகாந்தின் நடிப்பில் இருப்பதாகச் சொல்லப்படுவது போல, இதில் இடம்பெற்ற திலீப்குமாரின் நகைச்சுவை நடிப்பை நினைவுபடுத்துவதாக ஷாரூக்கான் பெர்பார்மன்ஸ் இருப்பதை என்னவென்று சொல்வது?
2018 இல் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ டிஜிட்டல் பிரிண்டுக்கு மாற்றப்பட்டு ரிலீஸானபோது, மீண்டும் தியேட்டர்களில் எம்ஜிஆர் ரசிகர்களின் கோலாகலம்.
இப்போதும் தொலைக்காட்சி சேனல்களில் குறைந்தது மாதம் ஒருமுறையாவது இப்படத்தைக் காண முடியும்.
அதற்கு தனி டிஆர்பி ரேட்டிங் கிடைப்பது, என்றென்றைக்கும் ரசிக்கும் படைப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
ஒரு ‘கமர்ஷியல்’ திரைப்படம் காலத்தால் அழியாததாக மாறுவதற்கு ஒன்று மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
அது, அப்படைப்பில் பங்குபெறுபவர்களின் ஆத்மார்த்தமான கூட்டுழைப்பு.
‘டபுள் ஆக்ஷன்’ படங்களுக்கு மட்டுமல்லாமல், அனைவரும் விரும்பும் பொழுதுபோக்கு சினிமாவுக்கான தரத்தையும் மாற்றியமைத்து கிளாசிக் அந்தஸ்தை ‘எங்க வீட்டுப் பிள்ளை’ எட்டவும் அதுவே காரணம்!
-உதய் பாடகலிங்கம்
31.03.2022 10 : 50 A.M