மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்படுகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம் ஆகியவற்றுக்கு, முதல் மூன்று இடத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்திற்கான விருதை, தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் பெற்றனர்.
தென் மண்டல அளவில், சிறந்த கிராம பஞ்சாயத்துக்கான விருதுகளில், செங்கல்பட்டு மாவட்டம், வெள்ளப்புத்துார் ஊராட்சி, இரண்டாம் இடத்திற்கான விருதை பெற்றது.
சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில், மதுரை மாநகராட்சிக்கு, மூன்றாம் இடத்திற்கான விருது; சிறந்த பள்ளிகள் பிரிவில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப் பட்டினம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, முதல் இடத்திற்கான விருதும் கிடைத்தன.
சிறந்த தொழில் பிரிவில், தமிழகத்தில் உள்ள ‘ஹூண்டாய் மோட்டார்’ நிறுவனம்; சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா ஆகியவை இரண்டாம் இடத்திற்கான விருதுகளைப் பெற்றன.