தூக்கமின்றி கழிந்த இரவு…!

 – .மார்க்ஸின் ரயில் பயண அனுபவம்

சில நாட்களுக்கு முன்பு மங்களூர் வரை ரயிலில் சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ். பயணத்தின் இடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு, கேரள ரயில்வே போலீசார் செய்த உதவி பற்றி நெகிழ்ந்து எழுதியுள்ளார்.

***

மூன்று நாட்களுக்கு முன் ஒரு அனுபவம்…

ரயிலில் மங்களூர் சென்றுகொண்டிருந்தேன். இரவு இரண்டு முறை பாத்ரூம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. கொஞ்சம் பயமாகிவிட்டது. நள்ளிரவு. ’டயரியா’  அதிகமானால் என்ன செய்வது. இரவு தூக்கமின்றி கழிந்தது.

காலையில் அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்த சுகுமாரனிடம் சொன்னேன். அவர் உடன் வண்டியில் இருந்த ரயில்வே அதிகாரியைப் பார்த்துச் சொல்லி உள்ளார். அவர் உடனே வந்து பார்த்துவிட்டு என்ன செய்யலாம். அதிகாலையில் டாக்டர் யாரையும் வரச் சொல்ல முடியாதே என்றார்.

எனக்கு வேறெதுவும் வேண்டாம். டாக்டர் யாரையும் பார்க்க வேண்டாம். ஒரு ‘எலெக்ட்ரால்’ பாக்கெட் மட்டும் கிடைத்தால் போதும் என்றேன்.

”சரி பார்க்கிறேன். கண்ணூர் வந்தால் அங்கே வாங்கிவிடலாம்” எனச் சொல்லி விட்டு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வந்து விசாரித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார். கண்ணூர் வந்தது.

அடுத்த இரண்டாவது நிமிடம் யூனிஃபார்மில் மூன்று போலீஸ்காரர் சகிதம் ஒரு மஃப்டி போலீஸ்காரரும் ரயிலில் இருந்த அதிகாரியும் வந்து இரண்டு எலக்ட்ரால் பவுடர் பாக்கெட், ஒரு தண்ணி பாட்டில், ஏதோ ஒரு மாத்திரை எல்லாம் கொண்டு வந்து தந்து ஆறுதல் சொன்னார்கள்.

நான் நன்றி சொல்ல எழுந்தேன். வேணாம், வேணாம் உக்காருங்க என மலையாளத்தில் சொன்னார்கள்.

மூன்று போலீஸ்காரர்களும் பல கோணங்களில் என்னை ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள். என் பெயர், முகவரி எல்லாம் கேட்டு எழுதிக்கொண்டார்கள். அதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டது. பயப்பட வேணாம் எனச் சொல்லிவிட்டு நகரும் ரயிலில் இருந்து குதித்து அகன்றார்கள்.

“ரயில் பயணத்தில் பயணியின் உயிர்காத்த காவல்துறை” அப்டீன்னு யாராவது கேரளத்தில் என் மூஞ்சியைப் பார்த்தீங்களான்னு தெரியல. என்ன இருந்தாலும் கம்யூனிஸ்ட் நாடுன்னா அது தனிதான் – என நம் தோழர்களிடம் சொல்லணும்” என்று நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment