‘தமிழ்’ ரமணாவின் கிளைமேக்ஸில் விஜயகாந்த் தூக்கு மேடை ஏறுவார் என்றால், ‘தெலுங்கு’ ரமணாவான ‘தாகூரி’ல் சிரஞ்சீவி ‘சுபமா’க வாழ்வார்.
‘தமிழ்’ ஜென்டில்மேனில் இடைவேளைக்கு முன்பாக வரும் ‘சிக்குபுக்கு ரயிலு’ பாடலில் பிரபுதேவாவும் கவுதமியும் டான்ஸ் ஆடுவதை அர்ஜுன் வேடிக்கை பார்ப்பார் என்றால், ‘தெலுங்கு’ ஜென்டில்மேனில் அதே பாடலுக்கு நாயகன் சிரஞ்சீவியே எழுந்து நடனமாடுவார்.
இதே பாணியில்தான் அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் எனும் இரு வரலாற்று நாயகர்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒருவரையொருவர் சந்தித்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று ‘ஆர்ஆர்ஆர் – ரத்தம் ரணம் ரவுத்திரம்’ திரைப்படத்தில் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமவுலி.
சில ஆண்டுகளாக தெலுங்கு சினிமா கைவிட்ட ஓராயிரம் ‘க்ளிஷே’க்களை மொத்தமாக திரைக்கதையில் கொட்டியிருக்கிறார்.
காதுல ‘பூந்தோட்டம்’!
ஒரு கோண்டு பழங்குடியின சிறுமி. இனிமையான குரலில் பாடிக்கொண்டே கையில் மருதாணி இடும் திறமை கொண்டவர். அதற்காகவே, அச்சிறுமியை வலுக்கட்டாயமாகப் பெற்றோரிடம் இருந்து பிரித்து அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றனர் கவர்னரும் அவரது மனைவியும்.
அந்த சிறுமியைத் திரும்ப அழைத்து வருவதற்காக அதே பழங்குடியினத்தைச் சேர்ந்த கொமரம் பீம் (ஜுனியர் என்.டி.ஆர்) மற்றும் நண்பர்கள் டெல்லிக்கு செல்கின்றனர். முடிவற்ற தேடலில் திகைத்துப் போய் சோர்வுறுகின்றனர்.
அதே நேரத்தில், சுதந்திர எழுச்சியில் ஈடுபடும் இந்தியர்களைப் பந்தாடி வருகிறார் பிரிட்டிஷ் அரசின் போலீஸ் படையில் இருக்கும் ராம் என்ற அல்லூரி சீதாராம ராஜு (ராம்சரண்).
தனக்காகக் காத்திருக்கும் முறைப்பெண் சீதா (ஆலியா பட்), ஊர்க்காரர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக பாறை போல மனதை உறுதியாக வைத்திருக்கிறார்.
இந்த சூழலில், அந்த சிறுமியை அழைத்துச் செல்ல பழங்குடி மக்கள் டெல்லியில் சுற்றிவரும் தகவல் பிரிட்டிஷ் அரசுக்கு தெரிய வருகிறது. அவர்களைப் பிடிப்பவர்களுக்கு ‘சிறப்பு அதிகாரி’ அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட, அதனைப் பெறுவதற்கு ‘நான் தயார்’ என்கிறார் ராம்.
எதிரும் புதிருமாக இருக்கும் இவ்விருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒன்றாகச் சேர்கின்றனர். அதன்பின் என்னவானது?
உண்மை தெரிய வந்தபின் இருவரும் மோதிக் கொண்டார்களா அல்லது கை கோர்த்து கொண்டனரா?
இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க பிரமாண்டமான காட்சியமைப்பை சரணடைந்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி.
இப்படியொரு கதையைப் படமாக எடுக்கத் துணிந்ததில் தவறில்லை. எல்லோரும் ரசிக்கும் வண்ணம் அதனை ‘கமர்ஷியல்மய’மாக்குகிறேன் என்று திரைக்கதை அமைத்திருக்கும் விதம்தான் ஒரு பூந்தோட்டத்தையே அடியோடு பெயர்த்து நம் காதின் மீதேற்றுகிறது.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் அனிமேஷன் படமான ‘தி அட்வென்சர்ஸ் ஆஃப் டின்டின்’ பார்த்து மலைத்துப்போய், அதே போன்ற எபெக்டை திரையில் உருவாக்க முயன்றிருக்கிறார் ராஜமவுலி.
ராம்சரணும் ஜுனியர் என்.டி.ஆரும் ஒருவரையொருவர் முதன்முறையாகச் சந்திக்கும் காட்சி அதற்கொரு உதாரணம்.
ஆனால், அதன்பின் எவ்விதச் சம்பந்தமும் இல்லாமல் கதை ஒருபக்கம் தறிகெட்டு ஓட, ‘உங்க கற்பனைக்கு நான் பொறுப்பில்ல’ என்று கைகட்டி நின்று கொள்கிறது விஎஃப்எக்ஸ்.
பிரமாண்டமான ‘தமிழ்படம்’!
‘ஷோலே’வில் வரும் ‘யே தோஸ்தி’, ‘திரிசூல’த்தில் வரும் ‘இரண்டு கைகள் இணைந்து விட்டால்’, ‘ஜல்லிக்கட்டு’வில் வரும் ‘ஏ ராஜா ஒன்றானோம் இன்று’ போன்ற பாடல்களில் இரண்டு நாயகர்களை ஒன்றாகத் திரையில் பார்க்கும்போது ஒரு உற்சாகம் வருமே, அது ராஜமவுலிக்கு மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது.
ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் ரசிகர்கள் ஒருசேர குதூகலிக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் இப்படத்தை உருவாக்க எண்ணியிருக்கிறார்.
அதற்காக சில கமர்ஷியல்தனமான காட்சிகளையும் திருப்பங்களையும் திரைக்கதையில் நிறைத்திருக்கிறார்.
ஆனால், கதை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் நிகழ்கிறது என்பதை அறவே மறந்திருக்கிறார்.
ஒரு ஆங்கிலேயப் பெண்ணை கவர்வதற்காக அவரது கார் வரும் பாதையில் ஆணிகளை வீசுவது, அவரது அழைப்பின் பேரில் நாயகர்கள் இருவரும் பார்ட்டிக்கு செல்வது, அங்கு ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘குத்து டான்ஸ்’ ஆடுவது என்ற ரகத்தில் காட்சிகள் படம் நெடுக வரும்போதெல்லாம் ‘மிர்ச்சி’ சிவாவின் ‘தமிழ்படம்’ பார்த்த எபெக்ட் உருவாகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தை கிண்டலடித்து பிரமாண்டமான ‘ஸ்பூஃப்’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறாரே என்று வியப்பு மேலிடுகிறது.
போலவே, ஆபாவாணனின் ‘இணைந்த கைகள்’ படத்தை 1900களில் நடைபெறுவதுபோல ‘ரீபூட்’ செய்திருக்கிறாரா என்ற எண்ணமும் எழுந்தது (அதனைக் குறியீடாக உணர்த்துவது போல ‘டைட்டில் வடிவமைப்பு’ம் கூட இரண்டு கைகள் இணைவதாக அமைந்திருக்கிறது!?)
அதில் இடைவேளைக் காட்சியில் அந்தரத்தில் தொங்கும் பாலத்தில் ராம்கியும் அருண் பாண்டியனும் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வார்களே, அந்த காட்சி இதில் அப்படியே இடம்பெற்றிருக்கிறது.
கூடவே ‘நாடோடி தென்றல்’, ’மாவீரன்’, ’சிறைச்சாலை’ உள்ளிட்ட திரைப்படங்களும் நினைவில் வந்து போகின்றன.
போதாக்குறைக்கு அஜய் தேவ்கன் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகள், ’இது உனக்கு தேவையா’ என்று வடிவேலு பாணியில் ஆள்காட்டி விரலை நம் முகத்தை நோக்கித் திருப்பு கேள்வி கேட்க வைக்கின்றன.
‘பான் இந்தியா’ படம் வேண்டாம்ப்பு..!
‘பாகுபலி’ பெற்ற வெற்றியைத் தக்க வைப்பதற்காகவே ஒரு ‘பான் இந்தியா’ படத்தை சுதந்திரப் போராட்ட காலத்தைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார் ராஜமவுலி.
அதற்காக எவ்வித தேவையுமற்று சமுத்திரக்கனி, ஸ்ரேயா, ஆலியா, அஜய் போன்றவர்கள் திரையில் வந்து போவது கூட பிரச்சனையில்லை. திரைக்கதையில் நம்பகத்தன்மை இல்லை என்ற விஷயத்தையும் மீறி இத்தனை அபத்தங்கள் ஏன் என்பதுதான் கேள்வி.
ஒரு கமர்ஷியல் திரைப்படத்தில் யதார்த்தம் நிரம்பியிருக்கத் தேவையில்லை என்றாலும், அது கொஞ்சம் கூட இருக்காது என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
எப்படி உலக சினிமா என்ற பெயரில் சில கண்றாவிகளை பார்க்க நேரிடுகிறதோ, இப்படத்தில் ’பான் இந்தியா’ முத்திரையும் அப்படித்தான் ஆக்கப்பட்டிருக்கிறது.
ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆரின் முறுக்கேறிய உடலையும் ஆக்ரோஷ நடிப்பையும் பார்க்கையில் ‘விழலுக்கு இறைத்த நீர்’ ஆகிவிட்டதே என்று நெஞ்சம் பதைபதைக்கிறது.
படத்தின் 90% காட்சிகளில் ஜுனியர் என்.டி.ஆரும் ராம்சரணும் இருக்கின்றனர் என்பதால் சக நடிகர் நடிகைகளுக்கு பெரிதாக வாய்ப்பில்லை.
சமுத்திரக்கனியைத் திரையில் பார்க்கும்போதெல்லாம், ‘அலா வைகுண்டபுரம்லோ’ படத்தில் இடம்பெற்ற அவரது கதாபாத்திரம்தான் கண் முன் வந்து தொலைக்கிறது.
பாலிவுட் புரோமோஷனுக்காக ஆலியாவும் அஜய்யும் இடம்பெற்றிருப்பதைத் தனியே சொல்ல வேண்டிய தேவையில்லை.
இதையெல்லாம்விட, என் மனம் கவந்த மாகரந்த் தேஷ்பாண்டேவை ஜுனியர் ஆர்ட்டிஸ்டை விடவும் கீழாகத் திரையில் காண்பித்திருப்பதை கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் கீரவாணியின் பின்னணி இசையும், ஜுனியர் என்.டி.ஆர். காட்டப்படும் காட்சிகளில் சாபு சிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் ‘வாவ்’ சொல்ல வைக்கின்றன.
இடைவேளைக்கு முன்பாக புலி உள்ளிட்ட காட்டு விலங்குகள் சீறிப்பாயும்போது ‘அட’ சொல்ல வைக்கிறது விஎஃப்எக்ஸ் டீம்.
தொடக்கத்தில் ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்து மாறி மாறி திரையில் தோன்றும் வரை வேகம் பிடிக்கும் திரைக்கதை, அதன்பின் திசைமாறிவிடுகிறது.
அதற்கேற்ப நூல் கோர்த்து செல்கிறது ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு.
பிரமாண்டத்தைக் காட்ட வேண்டுமே என்று சண்டைக்காட்சிகளில் நிறைந்திருக்கும் விஎஃப்எக்ஸ் மெனக்கெடலை முன்வைத்ததற்கு பதிலாக, கொஞ்சம் கதை சார்ந்த காட்சிகளுக்கு ‘கத்திரி’ போடாமல் இருந்திருக்கலாம்.
ஒரு வேண்டுகோள்!
பிரமாண்டமான கமர்ஷியல் படங்களைத் தரும் இயக்குனராக ‘நான் ஈ’ படத்திலேயே உருமாறிவிட்டார் ராஜமவுலி. ‘விக்ரமார்குடு’, ‘மரியாதை ராமண்ணா’, ‘ஸை’ பார்த்தவர்களுக்கு, அவரது கமர்ஷியல் சினிமா திறமை புரியும்.
ஆனால், அதுதான் பலம் என்று நம்பி ‘ஆர்ஆர்ஆர்’ திரைக்கதையை அமைத்திருப்பதை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பல மொழிகளில் ரிலீஸ், புரோமோஷன், பாக்ஸ் ஆபீஸ் வசூல் எல்லாம் இனிவரும் நாட்களில் செய்திகளாகும். ஆனால், ‘பாகுபலி’ தந்த புகழை இப்படம் தக்க வைக்குமா என்பது கேள்விக்குறிதான்..!
ஏனென்றால், இதுவரை நாம் பார்த்த அத்தனை திரைப்படங்களிலுள்ள அபத்தமான காட்சியமைப்புகளும் ‘க்ளிஷே’க்களும் இதில் நிரம்பி வழிகின்றன.
‘கிராபிக்ஸ் ஜாலம்’ என்பதால் மட்டும் அவற்றை பூசி மெழுகிவிட முடியாது. அதனால், ‘ஆர்ஆர்ஆர்’ ஒரு பிரமாண்டமான ‘ஸ்ஃபூப்’ வகை திரைப்படம் என்றே எனக்கு தோன்றுகிறது.
இதைவிட முக்கியமான விஷயம், சுதந்திரப் போராட்ட தியாகிகளை திரையில் சித்தரித்திருக்கும் விதம்.
தமிழ்நாட்டில் என்றில்லை, இந்தியாவில் எந்தப் பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரையும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வழக்கமான கமர்ஷியல் திரைப்படத்தில் அவரது வாழ்க்கையை பொருத்திப் பார்ப்போமா..? இப்படத்திற்கு ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் எதிர்ப்பு எழாமல் இருந்தால் ஆச்சர்யம்தான்!
-உதய் பாடகலிங்கம்