பாடகராக மாறிய கடலை வியாபாரி!

கச்சா பாதம் புகழ் பூபன் பட்யாகர்:

எப்போதும் அந்த மனிதரின் கனவுகள் பெரிதாக இருந்ததில்லை. அன்றாடம் குடும்பம் நடத்தினால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர் பூபன் பட்யாகர்.

பாட்டுப் பாடிக்கொண்டு கடலை விற்று பிழைப்பு நடத்தினார். அவர் பாடிய கச்சா பாதம் என்ற பாடல் அவரை உலகப் புகழ் அடைய வைத்துவிட்டது.

இன்று அவரை பாடுவதற்காக வங்கதேசம், துபாய் என்று அழைக்கிறார்கள். கூரை வேய்ந்த குடிசையில் வாழும் பட்யாகரின் வாழ்க்கை ஒரே பாடலின் மூலம் மிகவும் மாறிப்போய் விட்டது.

மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் பாடிய பாடலை பாடாதவர்களும் ஆடாதவர்களும் கிடையாது.

கடலை விற்றுக்கொண்டே அவர் பாடிய கச்சா பாதம் பாடல் யூடியூப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்துவிட்டது.

ஒரே இரவில் உலகப்புகழ் பெற்றுவிட்டார்.

“நான் சாதாரண கடலை வியாபாரி. திடீரென பணம் வந்தது. நான் என் கனவான பழைய கார் ஒன்றை வாங்கினேன்” என்கிறார் பட்யாகர்.

இன்னும் அவர் பாஸ்போர்ட் வாங்கவில்லை. ஆனால் ஒரு விபத்துக்குப் பிறகு அந்த காரை விற்றுவிட்டார்.

“உண்மையில் எனக்கு கார் தேவையே இல்லை” என்று ஏமாற்றத்துடன் சொல்கிறார்.

வங்காள மொழியில் அமைந்த பாடல், மக்களிடம் கடலை வாங்கச் சொல்லும் பொருளில் அமைந்துள்ளது.

ராஜ்குமார் ராவ் மற்றும் பூமி பட்நாகர் போன்ற பிரபலங்களால் பாடல் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பதிவிட பல லட்சக்கணக்கான ரசிகர்களை கச்சா பாதம் சென்றடைந்தது.

இந்தியாவில் மட்டும் அவரது பாடல் பிரபலமாகவில்லை. தான்சானியாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலங்களான கில்லி மற்றும் நீமா பால் ஆகியோர் உலகப் புகழ் அடைய செய்துவிட்டனர். பிறகு நடந்ததெல்லாம் அற்புதங்கள்.

பாடல் பதிவுகள், மேடை நிகழ்ச்சிகள், ஊடகங்களில் செய்திகள் என பட்யாகர் பிரபலமாகி விட்டார்.

ஆனால் அவருடைய பிரபலம் இன்னும் அவரது வீட்டை அடையவில்லை. சாதாரண வீட்டில்தான் குடியிருக்கிறார்.

திடீர் புகழ் மற்றும் வருமானம் தன் தலையை கொஞ்சம் கொஞ்சமாக சுழற்றியதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

ஒருகட்டத்தில் மேடை நிகழ்ச்சிகள் மூலம் வேர்க்கடலை விற்பதைக் கைவிட நினைத்தார்.

ஆனால், பழைய வாழ்க்கையை பட்யாகர் மறக்கவில்லை. தனது கிராமத்தின் சிவப்பு மண்ணில் வேரூன்றி இருக்கிறார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சுமார் 190 கி.மீ தொலைவில் உள்ள பிர்பூம் பழங்குடியினரின் மையப்பகுதி.

“நான் வெறும் கடலை விற்பவன். நான் பாடுவேன், ஆனால் கடலை விற்பேன்” என்று கூறும் பட்யாகர், ஒரு மண் வீட்டில் இரண்டு மகன்கள் மற்றும் மனைவியுடன் வசிக்கிறார்.

பிளாஸ்டிக் மற்றும் பனை ஓலைகளால் மேற்கூரை சரிசெய்யப்பட்டுள்ளது. கச்சா பாதம் தவிர மேலும் இரு பாடல்களையும் அவர் எழுதியுள்ளார்.

“இன்னும் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன் – ஒரு பாடல் ‘சரிகமா’, மற்றொன்று, பழைய  கார் வாங்கி விபத்துக்குள்ளாகி, மீண்டும் கார் ஓட்ட மாட்டேன் என்று சபதம் செய்த அனுபவங்கள். பாடலின் பெயர் அமர் நோட்டுன் காரி” என்கிறார்.

இரண்டாவது பாடலை பதிவு செய்வதற்காக அவர் சமீபத்தில் மும்பைக்குச் சென்று வந்தார்.

கோதுலி பேலா மியூசிக் என்ற மியூசிக் லேபிளின் தலைமை நிர்வாகி கோபால் கோஷ் அவருடன் இருந்தார்.

இந்த நிறுவனம் பட்யாகருடன் ஒரு வருட ஒப்பந்தம் செய்துள்ளது. பாடகருக்கு முதலில் தனக்கென ஒரு வீட்டைக் கட்டுமாறு அறிவுறுத்தியதாக கோஷ் தெரிவித்தார். அவருக்கு ரூ.3 லட்சம் வழங்கியுள்ளனர்.

கிராமத்தில் உள்ள உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, பட்யாகர் ஒரு சிறிய நிலத்தில் விவசாயம் செய்வதன் மூலமும், கடலை விற்பதன் மூலம் சம்பாதிப்பதற்குப் போராடினார்.

மகளுக்கு திருமணமான நிலையில் அவரது மகன்கள் தினக்கூலிகளாக வேலை செய்கிறார்கள்.

பட்யாகர் நிதி நிலை மேம்பட்டாலும் அவர் இன்னும் ஏழையாகவே இருக்கிறார் என்கிறார் ஒரு கிராமவாசி. சில ஆர்வமுள்ள இளைஞர்கள் அவரை நிர்வகிக்க பட்யாகருடன் இணைந்துள்ளனர்.

கமிஷன் முகவர்களாக நிகழ்ச்சிகள் மற்றும் அழைப்புகள்ளை கவனித்து வருகின்றனர்.

தில்ஃபராஸ் மற்றும் ஷெரீப் கான் ஆகியோர் தாங்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும், அவருக்கு உதவி செய்வதன் மூலம் ஓரளவு பணம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார்கள்.

கேரளா, வங்கதேசம் மற்றும் துபாய் போன்ற இடங்களில் நிகழ்ச்சி நடத்த சில அழைப்புகள் வந்துள்ளன. ஆனால் பட்யாகருக்கு பாஸ்போர்ட் இல்லை. வெளிநாடு செல்வதை அவர் மனைவி முதலில் எதிர்த்தார்.

விரைவில் பட்யாகரின் பாடல்களை சர்வதேச இசை மேடைகளில் கேட்கலாம்.

பா.மகிழ்மதி

26.03.2022  10 : 50 A.M

Comments (0)
Add Comment