எண்ணங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!

‘அவர் எப்பவுமே பாசிட்டிவ் ஆட்டிட்யூட் பர்சன்!’ என்று சிலரைப் பற்றிச் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா..? அதாவது, நேர்மறை எண்ணம் கொண்டவர் என்றர்த்தம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள்.

அதாவது எதையுமே பாசிட்டிவாகப் பார்ப்பவர்கள் என்பதால், நடப்பன எல்லாமே நன்மைக்கு நடப்பதாகவே அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால், அவர்கள் மனம் அமைதியாக, பதற்றமின்றி இருக்கும். எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருக்கும்.

இன்னும் புரிய வேண்டுமா..?

இதோ, ஒரு சிறிய சீனக் கதை…

லவ்லி என்று ஒரு இளம்பெண். கலகலப்பான பெண். அவளுக்குத் திருமணமாகிறது. மாமியார் வீட்டுக்குச் செல்கிறாள். மாமியார், கணவர், லவ்லி என்ற சிறிய குடும்பம்.

நம்ம ஊரைப் போன்றே அங்கும் மாமியார், மருமகள் சண்டை; லவ்லிக்கும், மாமியாருக்கும் ஏழாம் பொருத்தமாகி விடுகிறது.

“எக்குத் தப்பாக இங்கு வந்து மாட்டிக் கொண்டோம். இந்த கோபக்கார மாமியாரிடம் இருந்து தப்புவது எப்படி? இல்லை, நம் வாழ்க்கையே அவ்வளவுதானா..?” என்று மண்டையைப் பிய்த்துக் கொள்கிறாள் லவ்லி.

ஒரு நாள் தனது அம்மா வீட்டுக்குச் செல்கிறாள். அன்றைய தினம் தந்தையின் நண்பரான மூலிகை மருத்துவர் வீட்டுக்கு வந்திருக்கிறார். நலம் விசாரித்த அவரிடம் மாமியார் கொடுமையை கொட்டித் தீர்த்த லவ்லி,

“எனக்கு வாழவே பிடிக்கலை. மாமியார் செத்தால்தான் எனக்கு நிம்மதி கிடைக்கும் போலிருக்கிறது. நீங்க ஒரு மூலிகை மருத்துவர் ஆச்சே. என் மாமியார் சீக்கிரம் செத்துப் போகிற மாதிரி, இயற்கை மரணம் நிகழ ஏதாவது ஒரு மூலிகையைக் கொடுங்கள், என் வாழ்க்கையை மீட்டுத் தாருங்கள்!” என்று அவர் கையைப் பற்றிக்கொண்டு கெஞ்சுகிறாள்.

சிறிது யோசித்த மருத்துவர், “என் நண்பரின் மகள் எனக்கும் மகள் போலத்தான். நீ கேட்டதைத் தருகிறேன்” என்று மூலிகைக் கொத்து ஒன்றைத் தந்தார்.

“நீ இந்த மூலிகையைப் பொடி செய்து, உன் மாமியார் சாப்பாட்டில் தூவி விடு. இதனால், சுவை மாறாது என்பதால், மாமியாரால், அதைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், இது வேலையைக் காட்ட 6 மாதம் ஆகும்…” என்றவர், தொடர்ந்தார்.

“இந்த மருந்தைப் பயன்படுத்தும் 6 மாத காலம் வரை, உன் மாமியாரிடம் நீ அதீத அன்பாக இருக்க வேண்டும்.

அவரை எதிர்த்துப் பேசாமல், அவர் மனம் கோணாமல் நடந்து கொண்டு அவருக்குப் பணிவிடை செய்யும் அருமையான, பாசக்கார மருமகளாக இருக்க வேண்டும்.

பார்ப்பவர்கள் எல்லாம் பிரமிக்கும்படி சும்மா நடித்தால் போதும். அவர் இறந்தால், இத்தனை நல்ல மருமகளை வைத்துப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்டாளே என்றுதான் உலகம் பேசும். உன்னை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள்!” என்றார்.

நம்பியார் சிரிப்பை உதிர்த்தபடி மூலிகையை நன்றியோடு பார்த்தாள் ‘வில்லி’யாக மாறிவிட்ட லவ்லி.

மாமியார் வீட்டுக்குச் சென்ற லவ்லி அந்த மூலிகையை சாப்பாட்டில் தினம் தினம் கலந்து மாமியாருக்குக் கொடுத்தாள்.

மருத்துவர் சொன்னபடி மாமியாரிடம் மிகவும் கனிவாக, பணிவாக நடந்து கொண்டாள். மாமியாருக்கு ரொம்ப சந்தோஷம்.

“அடடா, நம்ம மருமகள் நம்மைப் புரிந்து கொண்டு அனுசரணையாக மாறிவிட்டாள். அம்மா வீட்டில் அறிவுரை சொல்லி அனுப்பி இருப்பார்கள் போலிருக்கிறது. ஏதோ, நல்லபடியாக நடக்க ஆரம்பித்து விட்டாளே! அதுவே போதும்.”

– என்று மருமகளை உச்சி மோர்ந்து பாராட்ட ஆரம்பித்தார். சிறிய தவறுகளைக் கண்டு கடிந்து கொள்ளாமல் அன்பாகத் திருத்தித் தந்தாள்.

லவ்லி தன் மகள் போல என்று பார்ப்போரிடம் எல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டாள். இந்தப் பாராட்டுகளைக் கேட்ட லவ்லிக்கும் மாமியாரை ரொம்ப பிடிக்க ஆரம்பித்து விட்டது.

தனது தாயை எந்த அளவு நேசித்தாளோ, அதே அளவு மாமியாரையும் நேசிக்கத் தொடங்கிவிட்டாள்.

“நம்ம மாமியார் ரொம்ப நல்லவரா இருக்கிறாரே! நம்மைக் குழந்தையைப் போல பார்த்துக் கொள்கிறாரே, இவரையா கொல்ல நினைத்தோம்..?” என்ற குற்ற உணர்ச்சி தலைதூக்க ஆரம்பித்து விட்டது.

பச்சிலை மருந்து கலப்பதை நிறுத்தி விட்டாள். ஆனால், ‘இத்தனை நாள் தந்த மருந்து அவரது உடல்நிலையைப் பாதித்திருக்குமோ..?’ என்ற பயம் எழ, பச்சிலை மருத்துவரைத் தேடிச் செல்கிறாள்.

நடந்ததைக் கூறி, மாமியாரைக் குணப்படுத்தி தரும்படி அழுகிறாள். உடனே மருத்துவர் சிரித்தபடியே, “நான் நினைத்தது நடந்து விட்டது. எந்த ஒரு நல்ல மருத்துவரும் ஒரு உயிரைக் கொல்ல மருந்து கொடுக்க சம்மதிக்க மாட்டார். அது உடல் சத்துக்கான மருந்து தான்.

மாற்றம் என்பது உன்னிடமிருந்து தான் வர வேண்டும் என்று உன்னைப் பாசமாக நடிக்கத் சொன்னேன். நாம் என்ன தருகிறோமோ, அதுதான் நமக்குத் திரும்பி வரும்.

மாமியார் உன் மேல் அன்பு காட்ட ஆரம்பித்து விட்டார் அல்லவா..? இந்த நடிப்பைத் தொடர்ந்து செய். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்…” என்றார்.

லவ்லி, பெயருக்கு ஏற்ற மாதிரி லவ்லி கேர்ளாக மாறிவிட்டாள். இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறதா..?

நாம் மாறும் போது உலகமும் நமக்கு ஏற்றபடி மாறுகிறது. நம்முடைய மனப்பாங்கு எப்படியோ, அதுபோல்தான் நமக்கும் நடக்கும். நாம் எல்லாவற்றையும் நல்லபடியாகப் பார்த்தால் நல்லதும், கெட்டதாகப் பார்த்தால் கெட்டதும்தான் நடக்கும்.

ரோஜா செடியைப் பார்த்தால், சிலருக்குப் பூ தெரியும். புன்னகை மலரும். சிலருக்கு முள் மட்டுமே தெரியும். பயம் படரும். செடி நமக்கு முன் வைக்கப்பட்டிருந்தாலும், யார் எதைப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே நம் மனது மகிழ்ச்சியும், பீதியும் அடைகிறது.

இரண்டும் அதில் இருக்கிறது. எதைப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்துதான் வாழ்க்கை மாறுகிறது.

வாழ்க்கை பூந்தோட்டமா அல்லது போராட்டமா என்பதை பாசிட்டிவ் சிந்தனையே தீர்மானிக்கிறது.

ஒரு வியாபார ஒப்பந்தம் போடச் செல்கிறோம். போகிற இடத்தில், ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி நீரை உங்களுக்கு ஒருவர் தந்தால், “என்ன பாதி காலியா இருக்கு..?” என்பவர் குறைகார மனிதர்.

குறைகள் மட்டுமே தெரிபவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கவே இருக்காது. ‘அட, பாதி அளவு தண்ணீர் உள்ளதே. அது போதும்’ என்று நினைப்பவர், கிடைத்ததைக் கொண்டு மகிழ்ச்சியை அனுபவிப்பார்.

பாசிட்டிவாக இருப்பவர். இந்தத் தண்ணீரை எதற்கு பயன்படுத்தலாம். நாம் குடிக்கலாமா.? தாகத்தோடு இருப்பவர் யாருக்காவது கொடுக்கலாமா? சமைக்கப் பயன்படுத்தலாமா, செடிக்கு ஊற்றலாமா’ என்று பயன்பாட்டுக்கான தேவை பற்றி யோசிக்கிறார்.

பாதி அளவு காலியாக இருக்கிறது என்று சொல்பவர், ‘ஏன் பாதியாக இருக்கிறது… இதை யாராவது குடித்திருப்பார்களா, இல்லை கொண்டுவருகிறபோது, அலட்சியமாக கீழே சிந்தியிருப்பார்களா. அவ்வளவு அலட்சியமாகத் தண்ணீர் தரும் அளவுக்கு நாம் ஒன்றும் நாம் தாழ்ந்துவிட வில்லையே..

பொறுப்பற்ற வேலைக்காரரைப் பணிக்கு வைத்திருக்கும் இவர் மட்டும் பொறுப்பானவராகவா இருந்து விடப் போகிறார்..? இவரை நம்பிக் களத்தில் இறங்கினால், நம் கதியும் அதோகதிதான்! இவரது சங்காத்தமே வேண்டாம்! ஒப்பந்தம் கேன்சல்!” என்று எழுந்து விடுவார்.

ஒவ்வொரு நாளும் நாம் அழுத முகத்தோடு உலகத்தை எதிர்கொள்ள நினைக்கிறோமா அல்லது சிரித்த முகத்தோடு உலகத்தை எதிர்கொள்ள நினைக்கிறோமா?

எப்படியிருந்தாலும் உலகத்தில் மாற்றம் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அது, நமக்குள் இருந்து ஆரம்பித்தால், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். உற்சாகம் தரும்.

நொந்து போன மனிதர்களை உலகம் விரும்புவதில்லை, குறிப்பாக, அழுகிறவர்களையும், புலம்புகிறவர்களையும் உலகம் ஒரு போதும் சேர்த்துக் கொள்வதில்லை.

‘எல்லாம் நன்மைக்கே’ என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கோணத்தில் பார்த்தால் வாழ்க்கை இனிக்கும்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து…

https://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment