பிருந்தா சாரதிக்கு இலக்கியச் சுடர் விருது!

சமகால தமிழ்க் கவிதை வெளியில் பேசப்படும் கவிஞர் பிருந்தா சாரதிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான ‘இலக்கியச் சுடர்’ விருது வழங்கி கெளரவித்துள்ளது படைப்புக் குழுமம்.

உலகக் கவிதைகள் நாளன்று அவரது இலக்கியப் பங்களிப்புகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக அக்குழுமத்தின் அமைப்பாளரும் கஸல் கவிஞருமான ஜின்னா தெரிவித்தார்.

இதுபற்றி சமூக ஊடகத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள கவிஞர் பிருந்தா சாரதி, விருது வழங்கிய ‘படைப்பு குழுமத்தி’ற்கு நன்றி கூறியுள்ளார்.

“திரைப் படங்களுக்கு வசனம் எழுதுவது என் முதன்மையான பணி. இலக்கியம் என் இதயத்தில் இருந்தாலும்  என் முதல் கவிதைத் தொகுதியான ‘நடைவண்டி’ தவிர வேறெந்த நூலையும் நெடுநாட்களாக நான் வெளியிடவில்லை.

ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் ஏழு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. (அவற்றில் மூன்றினை படைப்புப் பதிப்பகமே வெளியிட்டுள்ளது.)

இன்னும் தொகுத்தால் இரண்டு தொகுதிகள் வெளியிடலாம். அதேபோல அவ்வப்போது முகநூலில் நான் எழுதிய பதிவுகள், இதழ்களில் நான் எழுதிய கட்டுரைகள் மூன்று நூல்களாக வெளிவரும் அளவுக்குக் கைவசம் இருக்கின்றன.

திரைப்பட வசனம் குறித்து நான் ‘அயல் சினிமா’ இதழில் எழுதிய தொடர் ஒன்றும் இவ்வாண்டு நூலாக வெளிவர இருக்கிறது.

இவை தவிர இலக்கிய, கல்லூரி விழாக்களில் , நூல் வெளியீடுகளில் நிகழ்த்திய உரைகளின் குறிப்புகள் உள்ளன. தகுதியுள்ளவற்றை  நேரம் கிடைக்கும்போது விரித்து எழுதவேண்டும். இவை எல்லாம்  முகநூலில் எழுதத் தொடங்கிய பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் நிகழ்ந்தவை.

விளையாட்டாகத் தொடங்கியது இன்று ஒரு விருது பெறும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அதற்குக் காரணம் நான் மட்டுமல்ல, உற்சாகம் கொடுத்த முகநூல் நண்பர்கள் பலர் உண்டு. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றி.

‘இலக்கியச் சுடர்’ விருது தருவதாகத் தெரிவித்ததும் விருதுக்கு என்ன பரிசு என்று படைப்புக் குழுமத்தின்  அமைப்பாளர் ஜின்னாவிடம் கேட்டேன். ‘என்ன வேண்டும்’ என்று அவர் கேட்டார்.

ஒரு  விருதை வழங்கும்போது கௌரவமான தொகை சன்மானமாக இருந்தால் விருதுக்குப் பெருமை’ என்று கூறினேன். ‘இவ்வாண்டு முதல் படைப்பு குழுமத்தின் ‘இலக்கியச் சுடர் விருது’க்கு ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்’ என்று   ஜின்னா தெரிவித்தார். அவருக்கு என் மனப்பூர்வமான நன்றி.

படைப்புக் குழுமம் ‘கவிஞர் காப்பீட்டுத் திட்டம்’ எனும் அன்புமிக்க திட்டத்தின் மூலம் உதவி தேவைப்படும் தகுதிமிக்க படைப்பாளர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கி வருவதையும், புயல், வெள்ளம், கொரோனா தொற்று போன்ற நெருக்கடியான நேரங்களில் பொதுமக்களுக்குப் பல உதவிகளைச் செய்துவருவதையும்  நாம் அறிவோம்.

‘தகவு’, ‘கல்வெட்டு’ முதலான இலக்கிய இதழ்கள் மாதந்தோறும் படைப்பு மூலம் வெளிவருகின்றன.

இப்போது ஆண்டுதோறும் வழங்கும் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, ‘இலக்கியச் சுடர் விருது’ ஆகியவை நல்ல தொகையோடு வழங்கப்படுவது அதன் பெருமையை மேலும் பட்டொளி வீசிப் பறக்கச் செய்யும்.

இந்த விருது என் எழுத்துக்கு உண்மையிலேயே ஒரு ஊக்க சக்தி. அதற்காகப் படைப்பு குழுமத்திற்கு மீண்டும்  என் மனமார்ந்த நன்றி” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

– பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment