மார்ச் – 22 : உலக நீர் தினம்
உலகின் உன்னதமான திரவம் எது என்று கேட்டால், உடனடியாக ‘தண்ணீர்’ என்று சொல்லிவிடுவோம். இந்த உலகில் மட்டுமல்ல, நம் உடலின் பெரும்பகுதியையும் அதுவே ஆக்கிரமித்திருக்கிறது.
மலிவாக கிடைக்கும் எதுவும் சிறந்ததல்ல என்ற சில மனிதர்களின் கொள்கையினால் பல அற்புதங்கள் இவ்வுலகிலிருந்து நழுவியிருக்கின்றன.
அந்த வரிசையில் நீரும் இடம்பிடித்துவிடுமோ என்ற பதற்றம் கடந்த சில ஆண்டுகளாக நம்மைத் தொற்றியுள்ளது.
அமிர்தத்தின் நிகழ்கால முகம்!
யதார்த்தத்தில் நம் நாக்கு அறியாத அமிர்தத்தின் ருசி எப்படி இருக்கும்? கோடையில் அலைந்து திரிந்து தொண்டை வறண்டு உடல் சுருண்டு விழுந்துவிடுவோமோ என்று பரிதவிக்கும் கணத்தில் உள்ளிறங்கும் ஒரு சொட்டு நீர் அந்த அற்புதத்தை உணர்த்தும். அமிர்தத்தின் நிகழ்கால முகமாக உருவெடுக்கும்.
இதனை உணர வைக்கவே ‘தாயைப் பழிச்சாலும் தண்ணிய பழிக்கக்கூடாது’ என்ற சொலவடை பயன்படுத்தப்படுகிறது.
தாய் என்ற புனித பிம்பத்தைவிடவும் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுவதே, மனித வாழ்வில் நீர் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும்.
ஒரு அருமருந்து!
தண்ணீரில் விளையாடினால் ஜலதோஷம் பிடிக்கும்; நீர் பட்டால் புண் குணமாகாது; நீர் அருந்தினால் உடல் நலிவுறும் என்று சிலர் நீர் பயன்பாட்டை தவிர்க்கின்றனர்.
உண்மையில், நீர் ஒரு அருமருந்து. நாம் உணவில் பயன்படுத்தும் பல பொருட்களை நீரில் தனியாக கொதிக்கவைத்து குடித்தால், அவை ஒவ்வொன்றும் ஒரு நோய்க்கு தீர்வைத் தரும்.
தினசரிப் பயன்பாட்டிலும் கூட, நீர் அருந்துவதைக் கைவிட்டால் ‘டிஹைட்ரேஷன்’ வந்து என்ன பாடு படுவோம் என்பது அனுபவமுள்ளவர்க்கு தெரியும்.
உள்ளுக்கு மட்டுமல்ல, உடலின் வெளியிலும் நோய் நொடியில்லாமல் இருக்க நீர் பயன்பாடு சீராக இருக்க வேண்டியது அவசியம். அதாவது, நல்ல குளியல் ஆரோக்கியத்தை நம்முடன் இருக்கச் செய்யும்.
குடிப்பது, குளிப்பது தவிர நம் தினசரி வாழ்வில் நீர் பயன்படுத்தும் தருணங்களைப் பட்டியலிட்டு, அவற்றில் எவையெல்லாம் தவிர்க்கக்கூடியவை என்று தனியாகப் பிரிக்க முயற்சிக்கலாம்.
இறுதியில் எதுவும் மிஞ்சாது என்பதே யதார்த்தம். அது பிடிபடும்போது ‘நீரின்றி இவ்வுலகு இல்லை’ என்ற சொல்லின் பொருள் புரியும்.
மனிதரின் அன்றாடச் செயல்பாடு முதல் மாபெரும் தொழில்துறைகளின் அசைவு வரை அனைத்திலும் நீரின் தேவை கலந்திருக்கிறது. அதனை உணர்ந்து செயல்படுத்தாதபோது மட்டுமே நீர்மைக்கு எதிரான வறட்சி எட்டிப் பார்க்கிறது.
சிக்கனம் தேவை!
’நீர் சிக்கனம் தேவை இக்கணம்’ என்பது உட்பட பல வார்த்தை விளையாட்டுகள் நமக்கு அத்துபடி. எப்போதோ ஒருமுறை பஞ்சம், பட்டினி போன்றவற்றை அனுபவித்த காலம் போய், அவ்வப்போது அதை கடந்துபோகும் காலம் தற்போதிருக்கிறது.
வெள்ளம் சூழ்ந்து நிற்கும்போது ‘இந்த நீர் வற்றாதா’ என்று ஏங்கியவர்கள்தான், ‘கொஞ்சமா மழை பெய்யாதா’ என்றும் தவிக்கின்றனர். எல்லாமே ஒரே நிலத்தில்தான் நிகழ்கிறது. காரணம், அந்த அளவுக்கு நீர்ப்பஞ்சம் நம்மை வாட்டுகிறது.
நீர் பற்றாக்குறையைப் போக்க மழைநீர் வடிகால், மழைநீர் சேமிப்பு தொடங்கி சிறு நீர்நிலைகளை, தடுப்பணைகளை உருவாக்குதல் வரை பல்வேறு முயற்சிகள் மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன.
நீர்நிலைகள் தூர் வாருவது முதல் நீர் பயன்பாட்டில் சிக்கனம் தேவை உட்பட பலவற்றை குறித்து விவாதங்களும் விழிப்புணர்வும் பெருகியிருக்கின்றன. ஆனாலும், நீருக்கும் நமக்குமான உறவில் அவ்வளவு இணக்கமில்லை.
இல்லை என்பவர்கள் கோடை காலத்தில் நீரின்றி தவிக்கும்போது அதனை எவ்வாறு பயன்படுத்தினோம் என்பதையும், நீர் ஏகபோகமாக கிடைக்கும்போது எவ்வாறு பயன்படுத்தினோம் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
நிலத்தடி நீரை முழுவதுமாகப் பயன்படுத்தும் தலைமுறை நாம்தான். ஆனால், நாமே கடைசியாகிவிடக் கூடாது என்ற பயம் வந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும்.
நம்மளவில் தொடங்குவோம்!
எனக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் தன் வீட்டு மாடியில் மழைநீரை ஒரு தொட்டியில் பிடித்து சேமித்து வருகிறார். அவருக்கும் அவரது மனைவிக்கும் அதுவே தாகம் தீர்க்கும் மருந்து. மழை பெய்யாதபோது மட்டுமே அவர் குடிநீருக்காக நன்னீர் தேடுவார்.
மற்றபடி பாத்திரம் தேய்ப்பது, துவைப்பது உள்ளிட்ட அத்தியாவசிய கடமைகளுக்காக பயன்படுத்தும் நிலத்தடி நீரை கொஞ்சம் கொஞ்சமாக தன் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு ஊற்றிவிடுவார்.
சென்னை போன்ற பெருநகரத்தில் இல்லாமல் தனது கிராமத்தில் வசித்தால் அங்கிருக்கும் நீர் நிலைகளுக்குச் சென்றுவிடுவது அவரது வழக்கம்.
அந்த முதியவர் போல இன்னும் நிறைய மனிதர்களில் சிற்றூர்களில் அப்படித்தான் வாழ்கின்றனர். விவசாயம் செய்வதற்கு நிலத்தடி நீர் பயன்படுத்துவதை பாவம் என்று கருதுபவர்களும் இருக்கின்றனர்.
அதாவது, பூமியில் மழையாகப் பொழியும் நீரைத்தான் தேக்கி வைத்து பயன்படுத்த வேண்டுமென்பது அவர்களது மாறாத கருத்து. உள்ளிருப்பை தீர்த்துவிட்டு வெளியிருப்பை கடலுக்கு வாரிக்கொடுத்தால் கடைசியில் என்னதான் மிஞ்சும்?
அனுபவத்தில் உருவான அந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்வரை, நாம் நம்மளவில் நீரை மிதமிஞ்சி பயன்படுத்துவதை தவிர்க்கத்தான் வேண்டும்.
மழை நீரைக் கையில் மொண்டு பருகாவிட்டாலும் கூட, தினசரி வாழ்வில் முடிந்தளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்தலாம். ‘சந்தைப்படுத்துதல் உத்தி’யை காப்பியடிக்கும் விதமாக, நீரைப் பயன்படுத்தும் அளவைகளை சிறிதாக்கலாம்.
அதாகப்பட்டது, சிறிய கப் அல்லது பாத்திரங்களை பயன்படுத்துவது சாலச் சிறந்தது. இந்த ‘மினிமலிச’ பாணியை நீர் சார்ந்த அனைத்து பயன்பாடுகளுக்குப் பொருத்திப் பார்க்கலாம்.
கோவிட்-19 கால இடைவெளியில் ஆலைகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் வழங்கப்படும் பெரும்பகுதி நீர் மிச்சமானது எத்தகைய மாற்றங்களை தந்தது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்போம்.
அவ்விடங்களில் நீரை வாரியிறைத்து செலவழிக்கும் நாம் தான், வீடு திரும்பியதும் ‘நீர் இல்லையே’ என்று புலம்பியிருப்போம். இதுனுள் இருக்கும் வித்தியாசமே நீரின் மகத்துவத்தை உணர்த்தும்.
நீர் என்றவுடன் நம் நினைவில் ஆயிரம் எண்ணங்கள் அலைபாயும். அவற்றை மீறி, நீரைக் கொண்டாட வேண்டுமென்ற உணர்வு தலைதூக்கும்.
அதன் ஒருபகுதியாகவே, 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று ’உலக நீர் தினத்தை’ கொண்டாடி வருகிறது ஐநா.
நீரை போற்றுவதென்பது ஒரு நாளுடன் முடிந்துவிடக் கூடாது. அது ஒரு தினசரி கடமை.
குறைந்தபட்சம் நீரை முறையாக செலவழித்து, ஒவ்வொரு நாளும் இந்த நீரை பயன்படுத்தும் வாய்ப்பு தந்த இயற்கைக்கு நன்றி சொல்வதே அக்கொண்டாட்டத்தை பூர்த்தியடையச் செய்யும்!
-உதய் பாடகலிங்கம்
22.03.2022 10 : 50 A.M