10,000 சதுர அடியில் ‘வலிமை’ போஸ்டர்!

பிரமாண்டத்தின் உச்சம்!

தமிழ் ஓ.டி.டி. இயங்குதளங்களில் மறுக்கமுடியாத வெற்றியாளராக இருக்கும் ஜீ5 நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் தொடர்களையும் வெளியிட்டு வருகிறது.

ஜீ 5 சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்புமிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இப்போது, அஜித்தின் ஆக்‌ஷன் அதிரடித் திரைப்படமான ‘வலிமை’ படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிளாக்பஸ்டர் பிரீமியர் காட்சியைக் காணும் நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளனர்.

‘வலிமை’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு செய்யும் வகையில் ஜீ5 நிறுவனம், 10,000 சதுர அடியில் மிகப்பெரிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பிறகு, ‘வலிமை’ திரைப்படம் மார்ச் 25 முதல் உலகம் முழுவதும் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

இதை சிறப்பிக்கும் வகையில் ஜீ5 ஏற்பாடு செய்திருந்த இந்த போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மற்றும் ஜீ5 ஸ்டுடியோ குழுவினர் சென்னையில் உள்ள YMCA அரங்கில் கலந்து கொண்டனர்.

2022-ம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது திரைப்படம் வலிமை.

இந்த படத்தில் அஜித் குமார் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜுனாகவும், ஹுமா குரேஷி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஒரு சிறப்பான போலீஸ் கதையோடு, வலுவான ஆக்‌ஷன் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இந்தப் படத்தை ஒரு முழுமையான குடும்பத்துடன் பார்க்கும் பொழுதுபோக்கு திரைப்படமாக இருந்தது.

இப்படத்தில் நடிகர் அஜீத் குமார் அசத்தலான திரை ஆளுமை மற்றும் நடிகர் கார்த்திகேயாவின் சாத்தானிய அவதாரம் ஆகியவை ஒட்டுமொத்த திரையரங்குகளை அதிர வைத்தது.

H.வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஜீ ஸ்டுடியோ உடன் இணைந்து பே வியூ ப்ராஜெக்ட் எல் எல் பி சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தற்போது இந்த பிரம்மாண்ட திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

-யாழினி சோமு

Comments (0)
Add Comment