சந்திப்புகள் உங்களை நெகிழ்த்தக் கூடியவை. சந்திப்புகள் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டுபவை. தனிநபர்களின் சந்திப்புகளுக்கே இவ்வளவு நற்குணங்கள் உண்டு.
வரலாற்று நாயகர்களின் சந்திப்புகள் என்றால் கேட்கவே வேண்டாம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மனிதர்களின் சந்திப்புகள் பல படிமங்களை வெளி உலகுக்கு காட்டும்.
முற்றும் இரு வேறுபட்ட ஆளுமைகளின் சந்திப்புகள் மனித குலத்துக்கு ஒரு புதிய பாதையை, புதிய விடியலை, புதிய அறிவை போதிப்பவை.
வரலாற்றில் சந்திப்புகள் என்றைக்குமே முக்கியத்துவம் வாய்ந்தவை. எப்பொழுதுமே இரு ஆளுமைகளின் சந்திப்புகள் பல புதிய பரிமாணங்களை உலகுக்கு பறைசாற்றும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகள் பல உண்டு என்றாலும் இங்கே சில.
1. காந்தியும் சார்லி சாப்ளினும்:
செப்டம்பர் – 22 , 1931
காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்த வருடங்களில் மிக முக்கியமான வருடம் 1931. காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையொப்பமான வருடம்.
அநேகமாக, இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுக்காக காந்தி லண்டன் சென்ற பொழுது, சாப்ளின் உடனான இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்.
‘மை ஆட்டோபயோகிராஃபி’ என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதிய சாப்ளின், இந்தச் சந்திப்பைப் பற்றி விரிவாக அந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
லண்டனில் உள்ள ஒரு சிறிய வீட்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறும் சாப்ளின், அந்த சிறிய அறை முழுவதும் பத்திரிகையாளர்களும் புகைப்படக்காரர்களும் அவர்களை சூழ்ந்ததாக நினைவுகூர்கிறார்.
மனிதர்களின் இடத்தில் இயந்திரத்தை உபயோகப்படுத்தும் வழக்கத்தை குறித்து அவர்கள் இருவரும் விவாதித்ததாகச் சொல்கிறார்.
காந்தி லண்டனில் இருப்பதாக அறிந்த சாப்ளின், அவரைச் சந்திப்பதற்காக தூது அனுப்பியுள்ளார். காந்தி திரைப்படங்களின் காதலன் அல்லர். தன் வாழ்நாளிலேயே காந்தி ஒரு இந்திப் படமும் ஒரு ஆங்கில படமும் மட்டுமே பார்த்துள்ளார். அவருக்கு சார்லி சாப்ளின் பற்றியோ அவருடைய படைப்புகள் பற்றியோ ஒன்றுமே தெரியாது.
ஆனாலும் இந்தச் சந்திப்பு உலகப் பிரபலம் ஆனது. மிகக் குறுகிய நேர சந்திப்பாக இருந்தாலும், இந்தச் சந்திப்பு குறித்து சாப்ளின் தன்னுடைய சுயசரிதையில் மிகவும் நெகிழ்ந்துள்ளார்.
காந்தியின் அரசியல் கண்ணோட்டத்தையும் நிலைப்பாடுகளையும் வியந்து போற்றியுள்ளார். காந்தியோடு ஒரு சிறு இறைவழிபாட்டையும் அன்று மேற்கொண்டுள்ளார்.
2. நேருவும் சே குவேராவும்:
ஜூன் – 30, 1959.
1959-ல் கியூபாவில் ஒரு பெரிய மக்கள் புரட்சியை சாத்தியப்படுத்திக் காட்டிய பிடல் காஸ்ட்ரோ, சர்வாதிகாரி ஃபுல் ஜெனிகோ பத்திஸ்டாவை வீழ்த்தினார்.
‘ஜூலை 26 இயக்கம்’ என்று அது பிரசித்தி பெற்றது.
கியூபாவில் நடந்த மக்கள் புரட்சிக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தியப் பிரதமர் நேரு ஆதரவு தெரிவித்தார். பனிப்போரின் ஒரு பகுதியான இந்தக் கியூபா உள்நாட்டு விவகாரத்தில், நேருவின் ஆதரவுக்குப் பின் அமெரிக்காவே சற்று கதிகலங்கியது.
நேரு இந்தியாவின் பிரதமர் என்பதையும் தாண்டி, ஆசியாவின் மிக முக்கியத் தலைவராக இருந்தார்.
அச்சமயத்தில், தன்னுடைய உற்ற நண்பரும் கியூப புரட்சியில் முக்கிய பங்காற்றியவருமான சேகுவேராவை இந்தியா அனுப்பி வைத்தார் காஸ்ட்ரோ.
உலகம் முழுவதிலுமிருந்த எல்லாருடைய பார்வையும் இந்தச் சந்திப்பில் குவிந்திருந்தது.
புதுடெல்லியில் நேருவைச் சந்தித்தார் சே குவேரா. யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட ‘குக்ரி’ என்ற ஒருவகையான குறுவாளை சேவுக்குப் பரிசாக தந்தார்.
இந்தக் குறுவாள் ஹவானாவில் உள்ள சே குவேரா பாதுகாப்பகத்தில் இன்றும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்திய – கியூப தொடர்பு தழைத்ததற்கும் இன்றுவரை தொடர்வதற்கும் இந்தச் சந்திப்பு ஆதாரமாக அமைந்தது.
பின் க்யூபா சென்ற சேகுவேரா, இந்தியாவைப்பற்றி பலவாறு சிலாகித்து அங்கே பதிவு செய்துள்ளார்.
பின் நேரு 1960-ல் நியூயார்க்கில் நடந்த அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டு, காஸ்ட்ரோவை ஒரு தங்கும் விடுதியில் வைத்து சந்தித்தார். தான் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பு இதை நினைவுகூர்ந்த காஸ்ட்ரோ, “நேரு அன்று வெளிப்படுத்திய செய்கை என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத தருணம்.
வெறும் 34 வயதேயான நான், அப்பொழுது அவ்வளவு பெரிய தலைவராகவெல்லாம் இருந்திருக்கவில்லை. நேருவை சந்திப்பதற்கு முன் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டேன். அதை சுதாரித்த நேரு என்னை சந்தித்து மிக வாஞ்சையாகப் பேசினார்” என்று கூறியுள்ளார்.
3. ஐன்ஸ்டீனும் தாகூரும் :
ஜூலை – 14, 1930
இயற்பியலிலும் சார்பியல் தத்துவத்திலும் கரை கண்டவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1921 இல் நோபல் பரிசு பெற்றவர்.
கவிஞர், இசை அமைப்பாளர், மெய்ஞானர் என பல துறைகளில் கை தேர்ந்தவர் தாகூர். ‘கீதாஞ்சலி’ என்ற தன்னுடைய படைப்புக்கு 1913 இல் நோபல் பரிசு வென்றவர்.
இரண்டு நோபல் மாமேதைகள் சந்தித்தால் அந்தச் சந்திப்பின் தரம் பற்றி சொல்லவா வேண்டும். அத்தகைய ஒரு சந்திப்பு ஐன்ஸ்டீனின் பெர்லின் வீட்டில் நடந்தது. அண்ட அறிவியலின் பிதாமகன் ஐன்ஸ்டீன். மெய்ஞானத்தின் மாமேதை தாகூர். இருவரும் இரு வேறுபட்ட தளங்களில் தங்களை தகவமைத்துக் கொண்டவர்கள்.
இவர்களின் சந்திப்பின் ஊடே அறிவியல், மெய்ஞானம், கடவுள் என்று பல தளங்களிலும் இருவரும் விவாதித்து, தங்கள் தரப்பு தர்க்கத்தை வலுப்படுத்தியுள்ளார்கள்.
சில வரலாற்று ஆசிரியர்கள் இந்தச் சந்திப்பை மனித குலத்தின் மிக முக்கியமான சந்திப்பு என்று வர்ணித்துள்ளார்கள்.
இருவரும் ஒருவரை ஒருவர் வியந்து போற்றியுள்ள சிறப்புமிக்க சந்திப்பு இது.
இந்தச் சந்திப்பை `பார்த்தா கோஸ்’ என்ற இந்திய இயற்பியலாளர்,
‘Einstein, Tagore and the nature of reality’
என்ற தன்னுடைய புத்தகத்தில்
‘யதார்த்தத்தின் தன்மை’ குறித்து அவர்கள் விவாதித்த விவாதத்தைப் பின்வருமாறு ஆவணப்படுத்துகிறார்.
“ஐன்ஸ்டீன், தாகூருடனான அந்த உரையாடலின்போது மிக கவனமாக தாகூர் சொன்னதைக் கேட்டறிந்தார்.
மிகப் பொறுமையாக கேட்டுவிட்டு, அதைப் பற்றிய தன்னுடைய அபிப்ராயத்தைச் சொன்னார். அவர்கள் ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்யவில்லை. மாறாக, இருவரும் தங்கள் சிந்தனையை பகிர்ந்து கொண்டார்கள்.
இதை வெளியில் இருந்து பார்க்கும் ஒரு பார்வையாளருக்கு, ஏதோ இரண்டு கோள்கள் நேருக்கு நேர் அமர்ந்து பேசி விவாதிப்பதுபோல் தோற்றமளித்திருக்கும்.”
ஐன்ஸ்டீனும் தாகூரும் தங்கள் வாழ்நாளில் நான்கிலிருந்து ஆறு முறை சந்தித்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
4. சர்ச்சிலும் ஸ்டாலினும் ரூஸ்வெல்ட் உடன் :
பிப்ரவரி – 4 – 11, 1945
ஒரு சந்திப்பு இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய உலகின் போக்கையே மாற்றியது என்றால் அது இதுதான். ‘பிக் த்ரி’ (Big Three) என்று அழைக்கப்பட்ட தலைவர்களின் சந்திப்பு ‘யால்டா கான்ஃபரன்ஸ்’ என்று அழைக்கப்பெற்று அன்றைய சோவியத் யூனியனில் நடந்தது.
நாஜி ஜெர்மனியின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த மூன்று தலைவர்களும் கூடி, ஐரோப்பிய மக்களை போரின் இழப்புகளில் இருந்து எவ்வாறு மீட்பது என்று விவாதித்தனர்.
முதலாம் உலகப் போருக்குப் பின் ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ என்ற அமைப்பை உருவாக்கியதுபோல், இரண்டாம் உலகப் போருக்குப்பின் `யுனைட்டட் நேஷன்ஸ்’ அமைப்பை உருவாக்கினர்.
போருக்கடுத்து உலகின் போக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று இந்த மூன்று நாட்டுத் தலைவர்களும் கூடிப் பேசினார்கள்.
இந்தச் சந்திப்பு பல வகையில் முக்கியத்துவம் பெற்றது.
இந்தச் சந்திப்பு நடந்து மூன்று மாதத்துக்கு உள்ளாகவே அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் காலமானார், பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் 1945-ல் நடந்து முடிந்திருந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் தோற்று ஆட்சியை ‘லேபர் பார்ட்டி’ தலைவர் கிளமென்ட் அட்லீயிடம் பறிகொடுத்திருந்தார்.
நேச நாடுகள் இரண்டாம் உலகப் போரில் வென்றிருந்தாலும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ந்த இந்த மாற்றங்களால், சோவியத் யூனியனின் ஸ்டாலின் மட்டுமே அப்பொழுது மிகப் பெரிய தலைவராக மிச்சம் இருந்தார். உலக வல்லரசு தலைவராக உருவெடுக்க எத்தனிப்பு காட்டிக்கொண்டிருந்தார் ஸ்டாலின்.
வரலாற்று அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு, பின்னால் பலமாக விமர்சிக்கவும் பட்டது.
ஏனெனில், இந்தச் சந்திப்புக்குப் பின்னான இரு வருடங்களுக்குள்ளாகவே ஈஸ்டர்ன் பிளாக் மற்றும் வெஸ்டர்ன் பிளாக் என்று உலகம் இரண்டாக பிரிந்து அமெரிக்கா ஒரு பக்கமும் சோவியத் யூனியன் மறு பக்கமும் நின்று அடுத்த நான்கு தசாப்தங்களுக்கு ‘பனிப்போர்’ (Cold war) எனப்படும் மறைமுக யுத்தம் செய்தது.
மூன்று தலைவர்களும் வரிசையாக நாற்காலியில் அமர்ந்து காட்சி அளிக்கும் அந்த புகைப்படம் உலகப் பிரபலம்.
– மணிசங்கரன். பா.ந.
- நன்றி: ஆனந்த விகடன்