ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக இன்று ஆஜரானார்.
அப்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஓ. பன்னீர் செல்வத்திடம் குறுக்கு விசாரணை செய்தார்.
விசாரணையின் போது, ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை கேட்டதும் அரசாணை பிறப்பித்ததும் நீங்கள் தானே என ராஜா செந்தூர்பாண்டியன் கேட்ட கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
“ஜெயலலிதா மரணத்தில் தனிபட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான் ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன்.
தனிபட்ட முறையில் சசிகலா மீது மரியாதையும் அபிமானமும் இப்போது வரை உள்ளது. சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டுகளை களைய வேண்டும் என்பதற்காகவே ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன்” என்றார் ஓ.பி.எஸ்.
மேலும், ”ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ எந்தவித சதித் திட்டமும் தீட்டவில்லை.
2011-12ம் ஆண்டிலோ, அதற்கு பின்னரோ சசிகலா சதி திட்டம் எதுவும் தீட்டவில்லை என்று ஐபிஎஸ் அதிகாரிகள் கூறியது சரியே. கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, ஜெயலலிதா தன்னை அழைத்து எம்.எல்.ஏ.க்களைக் கூட்டி முதல்வரை தேர்ந்தெடுக்கக் கூறினார்.
முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஆளுனரை சந்தித்து கடிதம் அளிக்கவும், பன்னீர் செல்வம் தான் முதல்வர் எனவும் பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனிடம் ஜெயலலிதா கூறினார்.” என்று ஓ.பி.எஸ் விளக்கமளித்தார்.
அதோடு, ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்த போது தான் அழுது கொண்டிருந்ததாகவும், அந்த சமயம் தன்னை அழ வேண்டாம் எனக் கூறி, ஜெயலலிதா தன்னை தேற்றியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.