– மக்கள் விழிப்புடன் இருக்க முதல்வர் அறிவுறுத்தல்
ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்க்கண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
அவற்றில் குறிப்பிடத்தக்க சில…
நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல்.
நோய்த் தொற்றுக்கு ஆளானாவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல்.
தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றதல்.
தமிழ்நாட்டில் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசி போடாத சுமார் 50 இலட்சம் நபர்கள் மற்றும் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி ‘மெகா’ தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட அளவில் முழுமையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கண்டறிந்து, அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கவுரவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதர உள்ளாட்சி அமைப்புகள் 100% தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய ஊக்குவிக்க வேண்டும்.