அணைகள் விவகாரத்தில் ‘ஒரே நாடு’ கொள்கை?

– மணா

*

காவிரியின் குறுக்கே ஒரு ஆடு தாண்டுகிற அளவுக்குக் குறுகலாகும் இடத்தில் (மேகே தாட்டு) அணை கட்டுவது தொடர்பான சிக்கல் சில ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியும், காவிரி நடுவர் மன்ற ஆணையப் படியும் இரு மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக் கூடாது.

இருந்தாலும் கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மேகே தாட்டு அணையைக் கட்டப்போவதாக அறிவித்து சலசலப்பைக் கிளப்புவது வாடிக்கையாகி விட்டது.

தற்போதும் அதே பிரச்சினை. மேகே தாட்டு அணை கட்ட நிதி ஒதுக்கீடும் செய்து விட்டார்கள். ஆனால் மத்திய அரசு தரப்பில் இதற்கு எதிராக எந்தக் குரலும் இல்லை.

வழக்கம் போல தமிழகச் சட்டமன்றத்தில் மேகே தாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானம் ஒரு மனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக பா.ஜ.க.வும் இதை ஆதரித்திருக்கிறது.

அதே சமயம் கர்நாடகவில் உள்ள பா.ஜ.க.வும், காங்கிரசும், ஜனதாவும் அதே மேகே தாட்டு அணை கட்டுவதை ஆதரிக்கின்றன. தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு இது தான்.

மத்திய அரசோ எல்லா நடவடிக்கையைம் வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

குறைந்தபட்சம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் நடந்து கொள்வதைப் பற்றிக் கண்டிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

அந்த மாநில மக்களுக்கான அரசியல்.

அதற்குப் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்றே ஒன்றிய அரசும், தேசியக் கட்சிகளும் மௌனமாக இருக்கும்.

‘ஒரே நாடு, ஒரே கொள்கை’ என்ற பாலிசி எல்லாம் மேக்கே தாட்டு அணை விஷயத்திலும், முல்லைப் பெரியாறு அணை விஷயத்திலும் காணாமல் போய் விடுமா?

22.03.2022  10 : 50 A.M

Comments (0)
Add Comment