மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அப்போது பேசிய அவர், “காவிரி பிரச்சனையில் யார் சரியாக செயல்பட்டார் என்று மோதிக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து அணை கட்டுவோம் என்று கூறுவது அடாவடித்தனம். தண்ணீருக்காக தமிழ்நாடு கேரளத்திடமும், கர்நாடகத்திடமும் கையேந்தும் நிலை உள்ளது. கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் காவிரி பிரச்சனையில் ஒரே அணியாக இருக்கின்றனர். தமிழநாட்டில் திமுக கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவும், அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை திமுகவும் ஆதரித்தது.
காவிரிப் பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும். அண்டை மாநிலத்துடன் நல்லுறவை பேணும் நேரத்தில் நமது உரிமையையும் விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று கூறினார்.
மேகதாது விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சியினரும் வரவேற்றுள்ளனர்.