குழந்தைகளுக்கு உங்களின் நினைவுகளைப் பகிர்ந்தால் அவர்கள் சிறப்பாக வளர்வார்கள் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உலகம் என்பது நாம் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு பரந்து விரிந்த ஒன்றாக இருக்கும்.
பொதுவாக நமது நினைவுகளை மற்றவர்களுக்கு பகிரும்போது நமக்கு அளவுகடந்த மகிழ்ச்சி பிறக்கும். இது எல்லோரும் அறிந்தது தான். அதே போன்று நமது நினைவுகளைப் பற்றி குழந்தைகளிடம் பேசுவதில் பல நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும் என்று இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வு, ‘ஜர்னல் ஆஃப் பர்சனாலிட்டி’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கலந்துகொண்ட 15 வயதுடைய பதின் பருவத்தினர், 14 ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் தாய்மார்கள் பகிர்ந்த நினைவுகள் அவர்களின் வாழ்க்கையில் சிறப்பாக உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை பதின் பருவத்தினருக்கு, வழக்கம் போல் உரையாடிய இளம் பருவத்தினருடன் ஒப்பிடும்போது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகள் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியில் 115 குழந்தைகளின் தாய்மார்கள் பங்கேற்றனர். இதில் அவர்களுக்கு விரிவான நினைவூட்டல் பயிற்சி ஒரு வருட காலம் அளிக்கப்பட்டது.
விரிவான நினைவூட்டல் பயிற்சி என்பது பூங்காவில் பறவைகளுக்கு உணவளிப்பது போன்ற அன்றாட கடந்தகால நிகழ்வுகளைப் பற்றி சிறு குழந்தைகளுடன் திறந்த மனதுடனும், பதிலளிக்கக்கூடிய உரையாடல்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
உளவியல் துறையின் திட்டத் தலைவர் பேராசிரியர் எலைன் ரீஸ் இந்த ஆய்வு குறித்து பேசும்போது, முந்தைய பயிற்சி வகுப்புகளில் இளம் வயது தாய்மார்கள், விவாகரத்து பெற்ற தாய்மார்கள், இணையினால் கொடுமைகளுக்கு உள்ளான தாய்மார்கள் போன்ற பல பிரிவினர் கலந்து கொண்டதாகக் கூறினார்.
பெற்றோரின் நினைவுகளை குழந்தைகளுக்கு விரிவாக பகிரும்போது அவர்களின் அனுபவங்களின் முழுமையான மற்றும் துல்லியமான நினைவுகளை உருவாக்க உதவுகிறது.
இளமைப் பருவத்தில் அவர்களுக்கான தனித்துவமான அடையாளங்களை உருவாக்கும் போது இந்த நினைவுகள் பெரிதும் பயன்படுகிறது.
விரிவான முறையில் நினைவுகளைப் பகிர்வதால் கடந்தகால உணர்வுகளைப் பற்றி எவ்வாறு திறந்த விவாதங்களை நடத்துவது என்பதை கற்றுக்கொடுக்கிறது.
அதே போன்று கடினமான சூழலை எவ்வாறு திறன்பட கையாள்வது என்பதையும் கற்றுத் தருகிறது என்கிறார் எலைன்.
எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் அவர்களின் நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இவை பதின் பருவத்தில் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனால் உங்கள் குழந்தைகள் பொறுப்புணர்வு கொண்டவர்களாவும், மனதளவில் உறுதியானவர்களாகவும், பிரச்சனைகளை எளிதில் கையாளும் குழந்தைகளாவும் மாறுவார்கள்.
நன்றி: முகநூல் பதிவு