சிறுவன் கடிதம்: இடுக்கண் களைந்த இறையன்பு!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுக்கு எத்தனையோ பணிகள்.

நாளும் பொழுதும் தலைமைச் செயலக முகவரிக்கு வருகிற மனுக்கள், உருக்கமான கடிதங்கள், வாட்ஸ் ஆப்பில் வருகிற தகவல்கள் என அனைத்தையும் கவனிக்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா?

ஆனால் கவனிக்கும் அளவுக்கு அவருக்கு அக்கறையும் கருணையும் இருக்கிறது.

மார்ச் 9 ஆம் தேதியன்று திருப்பூரில் இருந்து ஐந்தாம் வகுப்பு சிறுவன் எழுதிய கடிதத்தை ஒரு விண்ணப்பமாக நினைத்து, அதை கனிவுடன் கவனித்து ஒரு புதிய வீட்டையே ஒதுக்கீடு செய்திருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.

திருப்பூர் ஜெய் நகரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் பி.அஸ்வின் தலைமைச் செயலாளருக்கு, “அன்புள்ள இறையன்பு மாமாவுக்கு” எனக் குறிப்பிட்டு  உருக்கமான கடிதம் ஒன்றை எழுதினான்.

அந்தக் கடிதம் இதோ…

என் பெயர் அஸ்வின், நான் 5 ஆம் வகுப்பு படிக்கிறேன். என்னுடன் பாட்டியும் அம்மாவும் இருக்கின்றார்கள். எனது பாட்டிக்கு நாக்குப் பகுதியில் கேன்சர். அம்மாவுக்கு வலிப்பு நோய் இருக்கின்றது. என் அம்மாவால் வேலைக்குச் செல்லமுடியவில்லை. என் பாட்டிதான் எங்களை கவனித்துக்கொள்வார்.

எனக்கு அப்பா இல்லை. நாங்கள் வாடகை வீட்டில் குடியிருக்கோம். வாடகை கொடுக்க முடியவில்லை. ஆனால் தாங்கள் எனக்கு இலவச தொகுப்பு வீடு, ஸ்டாலின் மாமாவிடம் சொல்லி வாங்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மாமா, எனக்கு உங்களையும் உங்களின் பெயரையும் மிகவும் பிடிக்கும். உங்களை டி.வி.யில் பார்ப்பேன். அம்மா வேலைக்குப் போகும் இடத்தில் வலிப்பு வந்துவிடுவதால் அம்மாவை கம்பெனியில் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். அதனால் குடியிருக்க ஒரு வீடு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

பி. அஸ்வின்

தன் கைப்பட எழுதி அனுப்பிய சிறுவனின் கடிதத்தைக் கண்ட இறையன்பு, உடனடியாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று கருணையுடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மார்ச் 9 ஆம் தேதியன்று சிறுவன் எழுதிய கடிதத்திற்கு 18 ஆம் தேதியன்று பதில் கிடைத்துவிட்டது.

ஆம், புதிய வீட்டுக்கான ஆணையை சிறுவன் அஸ்வின் வீட்டு முகவரிக்கு அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள்.

திருப்பூர் மாவட்டம், நெருப்பெருச்சல் கிராமம், திருக்குமரன் நகர் திட்டப்பகுதியில் பங்குத்தொகை செலுத்தாத வரிசை எண் 143ல் உள்ள சி. பாண்டியம்மாள் என்ற பயனாளி பெயரை நீக்கம் செய்து திருமதி.பாத்திமா என்பவருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்து பங்குத்தொகை முழுமையாக செலுத்திய பின் அவருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்து, அதன் விவரத்தை வாரியத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று ம.கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ். அந்த உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.

ஒரு பள்ளிக்கூடச் சிறுவன் கிறுக்கு கையெழுத்தில் எழுதிய கடிதம் தலைமைச் செயலாளரின் கவனத்திற்கு செல்வதே ஓர் அதிசயம்.

அதைப் படித்துவிட்டு பெரும் அக்கறையுடன் அவனது குடும்பத்தின் நிலை அறிந்து அரசு குடியிருப்பு ஒன்றை வழங்கியிருப்பது பேரதிசயம்.

ஏழை, எளிய மனிதர்களின் இடுக்கண் களைவதுதான் இறையன்புவின் பாராட்டுக்குரிய பணியாக இருக்கிறது.

பா. மகிழ்மதி

19.03.2022 10 : 50 A.M

Comments (0)
Add Comment