எம்.ஜி.ஆர் எனக்குச் சொன்ன அறிவுரை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலிலிருந்து

‘முரசே முழங்கு’ 40 ஆவது நாடக நிறைவு விழா 28.03.1971 அன்று சென்னையில் நடந்தது. திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மணிமண்டபத்தில் முதல்வர் கலைஞர் தலைமையில் விழா நடந்தது.

அதற்கான சுவரொட்டியை சென்னை முழுவதும் தோழர்களோடு சேர்ந்து நானும் ஒட்டினேன். ஸ்டெல்லா மேரிஸ் அருகே சுவரொட்டி ஒட்டியபோது கல்லூரிக் காவலர் எங்களைக் கண்டித்தார்.

காலை 4 மணிக்குத்தான் வீடு திரும்பினோம். கல்லூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டார்கள். இத்தகைய பரபரப்பான நாளில் அந்த விழா நடந்தது.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் கலந்து கொண்டார்கள். இளைஞர் திமுகவும், அஞ்சுகம் நாடக மன்றமும் இந்த விழாவுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது.

கட்டணம் 2 ரூபாய், ஒரு ரூபாய் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

கொளத்தூர் கோதண்டம் வரவேற்புரை ஆற்றினார். நாடகக் கலைஞர்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் கேடயம் வழங்கினார்கள். நாடகக் கலைஞர்கள் அனைவருக்கும் முதல்வர் கலைஞர் அவர்கள் மோதிரம் அணிவித்தார்கள்.

எனக்கு தலைவர் அவர்கள் கணையாழி அணிவிக்கும் போது, தலைவருக்கு அண்ணா அணிவித்த மோதிரம் என் நினைவுக்கு வந்தது. நான் தலைவரல்ல என்றாலும், அத்தகைய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன்.

அமைச்சர்கள் சத்தியவாணி முத்து, ப.உ.சண்முகம், செ.மாதவன், சாதிக் பாட்சா, ஓ.பி.ராமன், பண்ருட்டி ராமச்சந்திரன், மு.கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

சி.வி.ராஜகோபால் எம்.எல்.சி. என்னை அதிகமாக பாராட்டி பேசினார். 40 ஆவது நாடக நிறைவு விழா மலரை அமைச்சர் ப.உ.சண்முகம் வெளியிட்டார். இறுதியாக நான் நன்றியுரை ஆற்றினேன்.

தலைவரின் பேச்சு, எனது நாடகத்தை விட எனது படிப்பைப் பற்றியதாக இருந்தது. இதோ அவர் பேச்சு…

“தேர்தல் நேரத்திலே நாடகங்களின் மூலமாக நம்முடைய கழக நண்பர்கள் கொள்கைப் பிரச்சாரத்தைச் செய்தார்கள். கழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொன்னார்கள்.

அதனையொட்டி நம்முடைய நண்பர் தோழர் அடியார் அவர்கள் இந்த நாடகத்தை மிகத் திறமையோடு தீட்டி, அஞ்சுகம் நாடக மன்றத்திலே உள்ள நண்பர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு நடத்தி, 40 ஆவது நாடகமாக இந்த நாடகத்தை இங்கே நிறைவு செய்திருக்கிறார்கள்.

இந்த நாடகம் இன்று நிறைவு பெறுகிறது என்று நான் கூறுவதற்குக் காரணம், ஸ்டாலின் இந்த வேலையைத் தொடரக் கூடாது என்பதற்காகத்தான். புராணக்காரர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் விடையார்த்தி உற்சவம் என்று சொல்லலாம்.

அதாவது கோவில்களில் உற்சவங்களையெல்லாம் முடித்து கடைசித் திருவிழாவாக விடையார்த்தி உற்சவத்தை கோவில்களில் நடத்துவார்கள். அதைப் போல இந்த நாடகம் நடத்தப்படுகிறது என்று கருதுகிறேன்.

40 ஊர்களுக்கு இந்த நாடகம் சென்றிருக்கிறது. இந்தத் தேர்தலில் கடுமையான பிரச்சாரத்தில் நாம் ஈடுபட்டோம்.

அதிலும் குறிப்பாக நம்முடைய கழகப் பொருளாளர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களும் நானும் கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேலாக, ஏறிய வேனிலிருந்து இறங்காமல் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

அதைப் போலவே நான் எழுதிய ‘நானே அறிவாளி’ நாடகம் பல இடங்களில் நடத்தப்பட்டது. ஸ்டாலின் நடத்துகின்ற இந்த நாடகமும் பல இடங்களில் நடிக்கப்பட்டிருக்கிறது.

இடையில் திடீரென்று முதல்வரின் மூத்த செல்வன் மு.க.முத்து நடிக்கும் நாடகம் என்று செய்திகளை வெளியூர்களில் பத்திரிகைகளில் பார்த்தேன்.

இந்த அளவிற்கு ஒரு குடும்பமே ஈடுபடுகின்ற அளவிற்கு நிலை ஏற்பட்டிருப்பதை எண்ணுகிற நேரத்தில் ஒரு பக்கத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேநேரத்தில் எப்படி நான் என்னுடைய தாய் தந்தையர்க்கு அடங்காத பிள்ளையாக இருந்தேனோ, இந்த இயக்கத்தில் ஈடுபட்டேனோ அதைப் போல என்னுடைய பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது நான் செய்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனை தான் எனக்கு கிடைக்கின்றது என்று கருதுகிறேன்.

அந்தத் தண்டனை தமிழ்நாட்டை வாழ வைக்கிற காரியத்திற்கு உறுதுணையாக இருப்பதால் இப்படிப்பட்ட தண்டனைகள் அடிக்கடி கிடைக்க வேண்டுமென்று எண்ணினாலும் கூட, ஸ்டாலின் போன்றவர்கள் கொஞ்சம் ஒழுங்காக முறையாகப் படித்து, எனக்கிருக்கிற ஒரேயொரு குறை அவர்களுக்கு இல்லாத அளவில் அவர்கள் படிக்க வேண்டும்.

கல்லூரி மட்டத்தில் படிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசையை என்னுடைய பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அந்த வகையில் நம்முடைய பொருளாளர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களும் மற்ற அமைச்சர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நல்ல நாடகத்தைத் திறம்பட எழுதிய அடியார் அவர்களுக்கும் இந்த நாடகத்திலே நடித்த எல்லா நண்பர்களுக்கும் பங்கு பெற்ற அனைவருக்கும் என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் பங்கு பெற்ற அனைவரும் கழகத்தின் வெற்றி ஒன்றையே எதிர்பார்த்து பணியாற்றி இருக்கிறார்கள். எதிர்பார்த்தது அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

ஆகவே இங்கு அளிக்கப்பட்ட பரிசினை விட பெரும் பரிசினை வாக்காளப் பெருமக்கள் அளித்திருக்கிறார்கள். அதுதான் கழகத்திற்குக் கிடைத்த வெற்றி” என்று தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள் பேசினார்கள்.

எங்களது நாடகங்களுக்குக் கிடைத்த பாராட்டு ஒரு பக்கம் என்னை மகிழ்ச்சி அடைய வைத்தாலும் படிப்பில் கவனம் செலுத்து என்றும் நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வை என்றும் தலைவர் சொன்னது ஒரு பக்கம் வருத்தம் அடையவும் வைத்தது.

இந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசும் போதும் தலைவரின் கருத்தை எதிரொலித்தார். நாடகம் போடும் வேலையை விட்டுவிட்டு ஒழுங்காக படிப்பில் கவனத்தைச் செலுத்து என்று எம்.ஜி.ஆர். அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

‘சங்கே முழங்கு’ என்பதைப் போல ‘முரசே முழங்கு’ என்று தயாரிக்கப்பட்ட இந்த நாடகத்திற்கு முதன்முதல் நான் தான் தலைமை வகித்தேன்.

தேர்தல் நேரத்திலே இந்த நாடகம் நடந்து அதை மக்கள் ரசித்துப் பார்த்திருப்பார்களேயானால் அதன் அடிப்படைக் காரணம் நமக்குப் புரியும்.

ஆனால் தேர்தல் முடிந்த பிறகும் இந்த நாடகத்தை மக்கள் ரசிக்கிறார்கள் என்றால் இதிலே இருக்கும் கருத்துக்கள் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் என்பதே காரணம்.

கலைஞர் அவர்களின் புதல்வர் ஸ்டாலினுக்குச் சொல்லிக் கொள்வேன்…

உனக்குப் பெயரே ஸ்டாலின் என்பது. அங்கேயே புரட்சி தோன்றி இருக்கிறது. அந்தப் பெயருக்கேற்ப தந்தையின் வழியைப் பின்பற்றி தனயனும் வெற்றிப் பாதை நோக்கி முன்னேற வேண்டும்.

தான் பெற முடியாத கல்லூரிக் கல்வியை ஸ்டாலினும் இழந்துவிடக் கூடாது என்று கலைஞர் சொன்னார். அதை அவர் எவ்வளவு வேதனையோடு சொன்னார் என்பதை ஸ்டாலின் உணர வேண்டும்.

ஒரு தந்தை நூறு பக்கங்களில் மகனுக்கு எழுத வேண்டிய கடிதத்தை அவர் ஒரு வரியில் குறிப்பிட்டார்.

‘மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்’

என்ற வள்ளுவரின் சொல்லுக்கேற்ப நடக்க வேண்டும் என்பதை நான் ஸ்டாலினுக்குச் சொல்லிக் கொள்வேன்.

தந்தையைப் போலவே அவ்வப்போது கையை உயர்த்தி இரண்டு விரல்களை நீட்டி ஸ்டாலின் பேசியதைப் பார்த்தபோது, தந்தையை எவ்வளவு நுணுக்கமாகப் பார்த்திருக்கிறான் தனயன் என்பதை அப்படிப்பட்டதொரு அலாதியான கலையார்வத்தை உணர்ந்தேன்.

கலைஞரின் மகன் கலைஞனாகத்தான் இருப்பான் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

ஸ்டாலின் தலையிலே இருக்கிற ‘விக்’தான் வழுக்கையாயிருக்கிறதே தவிர, நீங்கள் இளைஞர். படிக்கவேண்டிய வயதிலே படிக்க வேண்டும்.

பெரிய தந்தை நிலையிலிருந்து நான் இதைக் கூறுகிறேன். உங்கள் பாட்டியாரின் கையில் நானும் உணவு உண்டவன். அந்த வகையில் இதை நான் வலியுறுத்திச் சொல்லிக் கொள்கிறேன்.

நானும் திமுகழகத்திலே பொறுப்புள்ளவனாக இருக்கிறேன். ஆனாலும் கலைப் பணியிலே கருத்தோடு ஈடுபடுகிறேன். அதைப் போல் நாடகத்திலே கவனம் செலுத்தலாம். அதேநேரத்தில் படிப்பில் கவனம் தவறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நண்பர் அடியார் எழுதிய இந்த நாடகத்தில் நடித்த எல்லோருமே மிக நன்றாக நடித்தார்கள். கருத்தும் கலையும் சேர்ந்துதான் இந்த நாடகத்துக்கு ஆணிவேராகச் சிறப்புச் செய்திருக்கிறது” என்று பேசினார் எம்.ஜி.ஆர். அவர்கள்.

நாடகத்தைப் பாராட்டிப் பேசியதை விட எனது படிப்பு ஆர்வத்தைத் தூண்டவே அதிகம் பேசினார் எம்.ஜி.ஆர்.

அதாவது தலைவரின் குரலையே அவரும் எதிரொலித்தார். அந்த மேடையில் நான் நன்றி உரை ஆற்றினேன்.

உங்களில் ஒருவன்
மு.க.ஸ்டாலின்
பூம்புகார் பதிப்பகம்
பக்கங்கள் 336
விலை – ரூ.500/

Comments (0)
Add Comment